மதுரை நகைக்கடை கொள்ளை; இன்ஸ்டா பிரபலம் உள்பட 2 பேர் கைது
1 min read
Madurai jewellery store robbery: 2 arrested, including an Instagram celebrity
14.11.2026
மதுரையில் உள்ள பிரபல நகைக்கடையில் நடந்த கொள்ளையில் இன்ஸ்ட்ரா பிரபலம் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 15 கிலோ நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
மதுரை பைபாஸ் சாலையில் டாடா குழுமத்தின் தனிஷ்க் என்ற பிரபல நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடைக்குள் நேற்று முன் தினம் அதிகாலை நுழைந்த மர்ம நபர் கடையில் இருந்த 15 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி நகரை சேர்ந்த யூடியூபர் நிஷாந்த் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், கொள்ளையில் நிஷாந்தின் தந்தை சுரேசுக்கும், நிஷாந்தின் காதலியும் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சருமான மீனாட்சிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மீனாட்சியையும், சுரேசையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து முதற்கட்டமாக 5 கிலோ நகைகளை மீட்டனர்.
இந்நிலையில், நிஷாந்தின் தந்தை சுரேஷ், இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட எஞ்சிய நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.
மதுரை அடுத்த மாடக்குளத்தில் உள்ள மலையடிவாரத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த எஞ்சிய 10 கிலோ நகைகளும் மீட்கப்பட்டது. இதன் மூலம் மதுரை தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி நிஷாந்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.