November 18, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை: பாம்பு கடித்து 15 ஆடுகள் பலி

1 min read
Seithi Saral featured Image

Nellai: 15 goats die after being bitten by a snake

17/11/2-026
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே, இரவில் கிடைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 15 ஆடுகள் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேல அரியகுளம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் முத்துகிருஷ்ணன், ஆடுகளை வளர்த்து அதன் மூலம் வாழ்வாதாரம் நடத்தி வருகிறார். வழக்கம்போல் பகலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு, இரவு நேரங்களில் பாதுகாப்பிற்காக மூடப்பட்ட கிடை ஒன்றில் அடைத்து வைப்பார். அதன்படி, நேற்று முன்தினம் இரவும் ஆடுகளை கிடைக்குள் அடைத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் கிடையை திறந்து பார்த்த முத்துகிருஷ்ணன், உள்ளே ஆடுகளும், ஆட்டுக்குட்டிகளும் அசைவற்று உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். அப்போது, கிடைக்குள் இருந்து சுமார் 6 அடி நீளமுள்ள பழுப்பு நிறப் பாம்பு ஒன்று வெளியேறி சென்றதை அவர் பார்த்துள்ளார்.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, மொத்தம் 15 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. குறிப்பாக, பிறந்து 20, 30 மற்றும் 35 நாட்களே ஆன பச்சிளம் ஆட்டுக்குட்டிகளும் இதில் பலியாகியுள்ளன. கிடைக்குள் புகுந்த அந்த 6 அடி பாம்பு கடித்ததாலேயே ஆடுகள் அனைத்தும் உயிரிழந்ததாக உரிமையாளர் முத்துகிருஷ்ணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 15 ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் 1.5 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

ஆடு வளர்ப்பையே நம்பி வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், ஒரே இரவில் இத்தனை ஆடுகளை இழந்தது முத்துகிருஷ்ணன் குடும்பத்தினரை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *