November 20, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக்கொலை

1 min read

Lashkar-e-Taiba commander shot dead in Jammu and Kashmir-Security forces carry out swift operation

18/11/2026
ஜம்மு – காஷ்மீரின் குல்காமில் கடந்த 11-ந்தேதி அக்ரானில் உள்ள மத்திய ரிசர்வ் படை அதிகாரிகளின் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 இந்திய ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த உமர் நிசர்தர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

குல்காம் தாக்குதல் சம்பவத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி லத்தீப் பட்டுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரும், சுட்டுக் கொல்லப்பட்ட உமர் நிசார்தரும் மத்திய ரிசர்வ் படை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.

தாக்குதலுக்கு முன்பு இருவரும் மிர்பஜார், அக்ரான், ஹப்லிஸ், கிளாம் உள்ளிட்ட இடங்களை நோட்டமிட்டதும் தெரிய வந்தது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் இது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

500-க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர். குல்காம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் அங்கு உள்ள மசூதி ஒன்றில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி லத்தீப் பட் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள், மத்திய ரிசர்வ் படை போலீசார் மற்றும் காஷ்மீர் போலீசார் ஆகியோர் கூட்டாக நள்ளிரவில் அந்த பகுதிக்கு விரைந்தனர். அவர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

அந்த இடத்தின் புனித தன்மையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு படையினர் மிகுந்த நிதானத்துடன் செயல்பட்டனர். பயங்கரவாதியுடன் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் காணொலி அழைப்பின் மூலம் பேசி துப்பாக்கியை போட்டு விட்டு சரண் அடையுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் சரண் அடைய மறுத்து துப்பாக்கியால் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி சுட்டார்.

பாதுகாப்பு படை வீரர்களின் பதிலடி தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா தளபதி லத்தீப் பட் சுட்டுக் கொல்லப்பட்டார். என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்களை பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றினார்கள்.

இது குறித்து குல்கம் மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரண்டு அனாயத் அலி சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-

உளவுத் துறையிடம் இருந்து கிடைத்த தகவல் அடிப்படையில் சிறப்பு நடவடிக்கை குழு தெற்கு காஷ்மீர் தேவ்ஷார் பகுதி அருகே உள்ள ஜங்கல் பெரா கிராமத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம்.

லஷ்கர் கமாண்டரை சரணடையுமாறு கேட்டுக் கொண்டோம். உள்ளே அனுப்பி வைக்கப்பட்ட ஒரு செல்போன் வழியாக பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், நானும் பயங்கரவாதியுடன் நீண்ட நேரம் காணொலி அழைப்பில் பேசினோம்.

அவரது இளம் வயதை சுட்டிக்காட்டி சரண் அடையுமாறு வலியுறுத்தினோம். ஆனால் அவர் மறுத்து விட்டார். பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். பாதுகாப்பு படையினரின் பதிலடியில் அவர் கொல்லப்பட்டார். அங்கிருந்து அவரது உடலும், ஆயுதமும் மீட்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி லத்தீப் பட் குல்காமின் குரோவான் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

பாதுகாப்பு படை வீரர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது. லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதியை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு-காஷ்மீர் போலீசார், இந்திய ராணுவம், சி.ஆர்.பி.எப். மற்றும் உளவு அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் லஷ்கர் அமைப்பின் கடைசி உள்ளூர் பயங்கரவாதியான லத்தீப் பட் கொல்லப்பட்டார். அவரது கூட்டாளியான உம் நிசாரும் அதற்கு முந்தைய நாள் கூட்டு நடவடிக்கையில் கொல்லப்பட்டார். இந்த முழு நடவடிக்கையும் மிக சிறந்த ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்டது. வீரமிக்க ஜவான்களை நாடு வழங்குகிறது.

இவ்வாறு அமித்ஷா அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குநர் ஜி.பி.சிங்கும் பாதுகாப்பு படை வீரர்களை பாராட்டினார். அவர் சமூக வலைதள பதிவில் கூறும்போது, ‘வாழ்த்துகள் நண்பர்களே, சில பதிலடிகள் குளிர் காலத்தில் கூட நிதானமாக கொடுக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *