November 25, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பரங்குன்றம் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு – போலீசார் குவிப்பு

1 min read

Thiruparankundram declared a ‘red zone’ – police deployed in large numbers

23/11/2026

கார்த்திகை தீபத்திருவிழாவின்போது கோவில்களில் தீபம் ஏற்றப்படுவது மரபாக உள்ளது. இந்தநிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

மதுரை ஐகோர்ட்டில் இதுதொடர்பாக இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம.ரவிக்குமார் மற்றும் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி, தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

ஆனால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு, கடந்த ஜனவரி 6-ந்தேதி தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. மலை உச்சியில் உள்ள தூண் நில அளவைக்கல் என்றும், பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு நடைமுறைகளில் மாற்றம் செய்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த்குமார், வி.எம்.பஞ்சோலி அமர்வு கடந்த 20-ந்தேதி முக்கிய இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, மதுரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், வரும் 24-ந்தேதி (அதாவது நாளை) கார்த்திகை தீபத்திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற கடும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர்.
மேலும் கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்றச்செல்ல வேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர். மேலும், பொதுமக்கள் அங்கு செல்லத் தடை விதித்ததுடன், ஊர்வலம், கோஷம் எழுப்புதல் போன்றவைகளுக்கு அனுமதி இல்லை என்றும் நிபந்தனை விதித்திருந்தனர்.
இந்த தீர்ப்புக்கு இந்து அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தன. அதே நேரம் பல்வேறு அரசியல் கட்சிகள் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரின.
இதனிடையே நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவு தொடர்பாக, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்வோம் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.விஜய் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஒரு முறை தீபம் ஏற்ற வேண்டும் என்ற சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள் அரவிந்த் குமார், விப்புல் பஞ்சோலி அமர்வுக்கு இன்று (திங்கள்) அலுவல் இல்லை என்பதால் அம்மனு விசாரணைக்கு வரவில்லை.
வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்கிய நீதிபதிகளின் முன்பு தான் மறு சீராய்வு மனு மீதான விசாரணையை குறிப்பிடுவது மரபு என்பதால் தமிழ்நாடு அரசு தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையீடும் செய்யவில்லை.

அதேபோல், நாளை குருநானக் ஜெயந்தி காரணமாக சுப்ரீம்கோர்ட்டுக்கு விடுமுறை என்பதால், நாளையும் தமிழ்நாடு அரசின் சீராய்வு மனு விசாரணைக்கு வர வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி மலை உச்சித் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, மலை உச்சி தூண் பகுதியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்க மலை அடிவாரம் முதல் உச்சி வரை துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மலைப்பாதை மற்றும் தூண் அமைந்துள்ள பகுதிகளை கண்காணிக்கப் புதிதாக 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகளும் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய அதிநவீனமுகத்தை கண்டறியும் கேமராக்கள் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் நடைபெறும் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாகவும், அப்பகுதியை சிவப்பு மண்டலமாகவும் அறிவித்தது மதுரை மாநகர காவல்துறை.
தீபம் ஏற்றும் நிகழ்வை ஒட்டி, இன்றும் நாளையும் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும், மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *