November 24, 2026

Seithi Saral

Tamil News Channel

அம்பை அருகே பணம் நகை இல்லாததால் படுக்கை அறைக்கு தீ வைத்த கொள்ளையர்கள்

1 min read

Robbers set fire to a bedroom near Ambai after finding no cash or jewelry.

24.11.2026
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியை அடுத்த தெற்குபாப்பான் குளம் மகாராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிளைன்ஸ் ராஜ் (வயது 83). இவர் தனது வீட்டினுடன் இணைந்த கடை ஒன்றில் தனியாக பல சரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு திருப்பூரில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக கிளைன்ஸ்ராஜ் தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

நேற்று காலை கடைக்கு பொருட்கள் வாங்க வந்த அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது அவரது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்தநிலையில் கிடந்தது.இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் மணிமுத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் ஒரு அறையில் இருந்த பல சரக்கு கடையில் கதவு திறக்கப்படாமல் இருந்தது. அதேநேரத்தில் வீட்டில் இருந்த படுக்கை அறையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து தண்ணீர் ஊற்றி போலீசார் தீயை அணைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் கிளைன்ஸ் ராஜிடம் செல்போனில் பேசி பணம் ஏதும் வீட்டில் வைத்திருந்தார்களா? நகை ஏதும் வைத்திருந்தார்களா? என்பது குறித்து கேட்டனர். அப்போது அவர் பணம், நகை எதுவும் வீட்டில் வைக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் பித்தளை பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏதேனும் போயிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதேநேரம் வீட்டில் எப்படி தீப்பற்றியது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் வீட்டிற்குள் திருட வந்த இடத்தில் பொருட்கள், பணம், நகை எதுவும் இல்லாத காரணத்தினால் ஆத்திரத்தில் படுக்கையறையில் தீ வைத்து எரித்துவிட்டு சென்றிருக்கலாம் என்பது தெரிய வந்தது. இது குறித்து மணிமுத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *