June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: வாழ்த்து தெரிவித்த சீமான்

Tamil Nadu Day Celebration: Seeman Congratulates

31.10.2024
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐம்பதாயிரம் ஆண்டுகள் பழமையான உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது.
இந்திய மத்திய அரசு 1956ம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாள்தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாளாகும். அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்கத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டன.
தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர். குமரித்தந்தை ஐயா மார்சல் நேசமணி, வடவெல்லை காவலர் ஐயா மா.பொ.சிவஞானம் போன்றோரின் தொடர் போராட்டம் காரணமாகப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐப்பசி 15 (01.11.2022)ஆம் நாள் தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தின் முதன்மை நிகழ்வாக, தலைநகர் சென்னையில் வரலாறு காணாத மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியை, ‘தமிழ் மீட்சியே! தமிழர் எழுச்சி!’ எனும் உன்னத கொள்கை முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சி நடத்தி காட்டியது.
தமிழ்நாடு என்கின்ற நம் உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய மத்திய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும். ஆகவே, உலகம் முழுக்கப் பரந்து வாழும் ஏறத்தாழ 12 கோடி தமிழ்த்தேசிய இன மக்களின் தாய்நிலம் தமிழ்நாடாக உருப்பெற்ற ஐப்பசி 15 ஆம் (01.11.2024) நாளான (நாளை) தமிழ்நாடு நாள் அன்று, என் உயிருக்கினிய தம்பி தங்கைகள், தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும், தத்தம் பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு, நம்முடைய மூவேந்தர்களின் இலட்சினைகளை பொறித்த தமிழ்நாட்டுக்கொடியை சிறு கொடிகளாக அச்சிட்டு கொடுத்து, இனிப்புகள் வழங்கி, எல்லை மீட்புப் போராளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி பேரெழுச்சிமிக்கத் திருவிழாவாகக் கொண்டாடுவோம்!

மாலை சென்னை பெரம்பூரில் நடைபெறவிருக்கும் மாபெரும் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக ஒன்று கூடுவோம்! பெருமிதத்தோடு கொண்டாடுவோம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.