மானசீக மகள்-தொடர்கதை (கண்ணம்பி ஆ.ரத்தினம்)
1 min readMaanaseega Magal-N0vel by Kannambi AA.Rathinam
(முன்கதை- எழுத்தாளர் செல்வன்-ரோஸி காதல் முறிவடை்ந்த பின்னர். அவன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு எடுத்தான்)
இளமஞ்சள் நிறத்தில் புடவைகட்டி மங்களகரமான முகத்துடன் ஒரு இளம் பெண் வந்துகொண்டிருந்ததைக் கண்டான். நடிகை நதியாவின் முகச்சாயல் அந்தப் பெண்ணிடம் இருந்தது. இந்தப் பெண்ணாகத்தான் இருக்கும் என்று அவன் மனம் உந்திச் சென்றுகொண்டிருந்தது. ஏதோ ஒரு ஈர்ப்பு அவன் மனதைச் சுண்டி இழுத்தது. சற்று முன் வந்து “நீங்கதானே… நித்யா….” என்று தயக்கத்துடன் கேட்டான். செல்வனின் தோற்றப் பொலிவு அவள் மனதில் ஒரு செழிப்பை ஏற்படுத்தியது. “ஆமாம்… நான்தான்” என்ற தலை அசைவுடன் புன்னகை பூத்தாள். அவனுடைய கட்டமைப்பு அவள் கண்களில் ஒரு நாணக் குழைவை ஏற்படுத்தியது.
“தனியாகத்தான் வந்தீங்களா? எப்படி வந்தீங்க?” என்று கேட்டான் செல்வன்.
‘தனியாகத்தான் வந்தேன்… ஏன்னா நம்ம ரெண்டுபேரும் படிச்சவங்க. நான் எழுத்தாளர், நீங்க பத்திரிகையாளர். நிறைய மனம்விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வர்றது நல்லது. சந்திச்சோம், ஆசைப்பட்டோம், கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்கிற தெல்லாம் காலம் போகப்போக வேண்டாத வேலை செய்யலாம். ஓரளவுக்கு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டவங்களாக இருந்தால்தான் தண்டவாளம் தடம் மாறாம இருக்கும்.”
“ரொம்ப சரியாகச் சொன்னீங்க. நான் ஒரு பொண்ணை உயிருக்குயிரா காதலிச்சேன். அவளும் என் மேல உயிரையே வச்சிருந்தா. ஆனால் நான் என் அம்மா அப்பா சந்தோசமா இருக்கணும்னு வித்தியாசமா சிந்திச்சேன். சந்தோசமாக காலம் கழிக்காம சந்தோசத்தை இழந்தவங்களை அப்படியே விட்டுவிடக் கூடாது. எங்கப்பா பொறுப்பில்லாம குடிச்சிக்கிட்டு ஊர் சுத்திக்கிட்டு திரிஞ்சாரு. ஒரு கட்டத்துல அவர் குடியை விட்டு திருந்தி நல்லவரா மாறிட்டாரு. எங்கப்பாவும் அம்மாவும் வாழ்க்கையைத் தொலைச்சவங்க. தொலைச்ச வாழ்க்கையை ஈடுகட்டணும் என்கிறதுதான் என் அடிமன உறுத்தல். அதுக்காக அவங்களை தம்பதிகளாக உடலாலும் உள்ளத்தாலும் சேர்ந்து வாழச் சொன்னது எந்த மகனும் செய்யாததாகத்தான் இருக்கும். மனைவியைத் தள்ளிவச்சிக்கிட்டு வேறு பெண்களோடு தொடர்பு வச்சிக்கிட்டு நிறையபேர் வாழ்ந்துகிட்டிருக்காங்க. அந்த வரிசையில் எங்கப்பா இல்ல. குடிகுடின்னு அலைஞ்சாரு அவ்வளவுதான். கணவனுக்குத் தெரியாம எத்தனையோ பெண்கள் கள்ளத்தனமா நடக்கிறாங்க. அந்த வரிசையில் எங்க அம்மா இல்ல. ஆனால், நான் அவங்க மூலமா ஒரு தம்பி அல்லது தங்கையை எதிர்பார்த்தேன் அவ்வளவுதான். ஒளிவு மறைவு இல்லாம வெளிப்படையாகப் பேசினேன். அது ஒண்ணும் மானம் கெட்ட விஷயம் இல்ல. மானசீகமான விஷயம். இப்போ எங்க அம்மா கன்சீவ் ஆகியிருக்கிறாங்க. அம்மா இன்னொரு பிள்ளைக்குத் தாயாகிறது என் காதலிக்கும் அவங்க குடும்பத்துக்கும் பிடிக்கல்ல. அதுனால அவங்க வேற இடம் பார்த்துட்டாங்க. மகளைக் கல்யாணம் பண்ணிக் குடுத்து மருமகன் வந்தபிறகு, மகனுக்குக் கல்யாணமாகி மருமகள் வந்தபிறகு குழந்தை பெத்தவங்க எல்லாம் இருக்கிறாங்க. இது என்னவோ உலக மகா தப்பு என்கிற மாதிரி அவங்க பேசிட்டாங்க.” என்று சொல்லி முடித்தான்.
“உங்களை மாதிரி எல்லாருமே வெளிப்படையா இருக்க மாட்டாங்க, வித்தியாசமா சிந்திக்கமாட்டாங்க, புரட்சிகரமா யோசிக்கமாட்டாங்க. உங்க ஆழ்மனசு, உங்க அர்த்தமுள்ள பேச்சு, புரட்சிகரமான நடவடிக்கைகளெல்லாம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. ஒளிச்சி, மறைச்சி தப்பு தண்டா நடக்கிறதுக்குக் காரணமே யாரும் வெளிப்படையாக இல்லாததனாலத்தான். நான் கணவனை இழந்துட்டேன். என் மனசில அவர் கடவுளா வாழ்ந்துகிட்டிருக்காரு. அதுக்காக நான் தனிக்கட்டையாக வாழ்ந்து, வேலை பாக்கிற இடத்துல என் மேல் அனுதாபப்படுறவங்க, ஆசைப்படுறவங்கன்னு கூட்டம் சேர்க்க விரும்பல்ல. எங்க வீட்ல மறு கல்யாணம் செய்துகொடுக்க விரும்பல்ல. ஆனா… எங்க அக்கா கணவரே என்னை சும்மா இருக்க விடல்ல, சீண்டிப்பார்க்கிறாரு. உங்க அறிவிப்பைப் பார்த்துக்கிட்டு பேசினேன். இப்போ ஸ்கூட்டியை எடுத்துக்கிட்டு தனியாகவே வந்துட்டேன். அவங்க சொல்ற ஒரு காரணம் என்னன்னா… என் கணவர் எனக்குக் குழந்தைப் பேறுக்குப் பலன் இருக்கான்னு செக் பண்றதுக்குப் பல டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனாரு. எனக்கு அந்தப் பலன் இல்ல. அதனால ரெண்டாவது ஒரு கல்யாணம் பண்ணி அவனும் கண்ட கண்ட இடமெல்லாம் அலைச்சி களைச்சிப்போய் கழற்றிவிட்டுடுவான்னு பயப்படுறாங்க. பிள்ளையை எதிர்பார்க்கிறவங்க மனம் அலைபாயத்தான் செய்யும். எனக்கு அந்தப் பலன் இல்ல. எதிர்காலத்துல உங்களுக்கு ஒருவேளை குழந்தை ஆசை வந்தா என்னால ஒண்ணும் பண்ண முடியாது. அதுக்காக நீங்க வேற கல்யாணம் பண்ண வேண்டியது வருமா என்கிறதுகூட கேள்விக்குரியதுதான். எல்லாம் காலம் போன போக்கிலதான் நம்ம வாழமுடியும், என்ன சொல்றீங்க” என்று நித்யா சொல்லி முடித்தாள்.
“நம்ம ரெண்டுபேருமே நிறைய யோசிக்கிறோம். நிறைய பேசுறோம். ஆமா அது தேவையானதுதான். அப்படின்னாதான் ஒரு முடிவுக்கு வரமுடியும். ரொம்ப நேரமா ‘வாழ்க்கைத்துணை நலம்’ தூண் பக்கத்திலேயே நின்னுகிட்டிருக்கிறோம், ஒரு இடத்துல உட்காரலாமா?” என்று கேட்டான்.
“வேண்டாம்… கல்யாணம் நடந்தா அதுக்குப் பிறகு வந்து உட்காரலாம். இப்போ உட்கார்ந்தா யாராவது பார்த்து எங்க அக்கா கணவர் காதுல போட்டுவிட்டுட்டா ஆச்சா போச்சான்னு குதிப்பாரு. நல்லா யோசித்து ஒரு வாரத்துல உங்க முடிவைச் சொல்லுங்க.” என்றாள்.
“முடிவு எல்லாம் சரிதான். எங்க அம்மா – அப்பா கிட்ட உங்களைக் காட்டிடலாம்னு நினைக்கிறேன். எங்க வீடு சூளைமேட்டுல இருக்கு. நீங்க,” என்று நீட்டினான்.
“நான் மேத்தா நகர்ல இருக்கிறேன்.”
“சரி அப்படின்னா… எங்க வீட்டைத் தாண்டித்தானே நீங்க போகணும். வர்றீங்களா” என்றான்.
அரைகுறை மனதோடு தலையசைத்தாள்.
“ரொம்ப யோசிக்கிறீங்க போலிருக்கு. ஆமா… பெண்ணாகப் பிறந்தாலே ரொம்ப ரொம்ப யோசிக்க வேண்டியதாகத்தான் இருக்கு. சரி உங்க இஷ்டம்” என்றான்.
“போகலாம்” என்று புன்னகை செய்தாள்.
செல்வன் மோட்டார் சைக்கிளிலும், நித்யா ஸ்கூட்டியிலும் ஏறிக்கொண்டார்கள். செல்வன் வீட்டின் முன் மோட்டார் சைக்கிளும் ஸ்கூட்டியும் வந்து நின்றன.
“இதுதான் எங்க வீடு” என்று சொல்லிக் காட்டினான் செல்வன்.
வீடு கம்பீரமாக இருந்தது. வீட்டின் முன் சிறு தோட்டமும் இருந்தது.
“சென்னையில் ஒரு இஞ்ச் இடத்தைக் கூட சும்மா விடமாட்டாங்க. நீங்க தோட்டம் போட்டிருக்கிறது நல்லா இருக்கு.” சொல்லிவிட்டு நித்யா ரசனையோடு பார்த்தாள்.
“சரி… உள்ளே… போவோம் வாங்க”
காலிங் பெல்லை அழுத்தினான் செல்வன்.
கதவைத் திறந்தார் செல்வனின் தாயார். நித்யாவின் கண்கள் கர்ப்பமாக இருந்த தாயாரின் வயிற்றைக் கவனித்தன.
செல்வனுடன் வந்திருக்கும் பெண்ணைக் கண்களால் அளந்தார் தாயார். செல்வனின் தந்தையும் அங்கே வந்தார். அவரும் நித்யா மீது தனது பார்வையைச் செலுத்தினார்.
“என்ன ஆச்சரியமா இருக்கா… பிடிச்சிருந்தா சொல்லுங்க…. உங்க மருமகளா வர அவங்க தயார்” என்று சொல்லி நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.
“பிடிச்சிருந்தா சரியா… இந்த மகாலட்சுமியைப் பிடிக்காம யாருக்காவது இருக்குமாடா… செல்வனின் தாயார் பூரித்துப் போனார்.
“என்னடா சொல்றே… எங்களைப் பொண்ணு பார்க்கப் போகவிடாம இங்கேயே கூட்டிக்கிட்டு வந்திட்டியா.” என்றார் தந்தை.
உள்ளே வந்ததும் செல்வனின் பெற்றோர் கால்களில் விழுந்து வணங்கினாள் நித்யா…
“இருக்கட்டும்மா… நல்லாயிரு… நல்லாயிரு” என்று இருவரும் வாழ்த்தினார்கள்.
“அப்படின்னா என்னையும் சேர்த்து வாழ்த்துங்க” என்று சொல்லிவிட்டு பெற்றோர்களின் கால்களில் விழுந்தான் செல்வன்.
“ரெண்டுபேருக்கும் ஜோடிப்பொருத்தம் ரொம்ப நல்லாயிருக்கு. உங்க ரெண்டு பேருக்கும் கடவுள் கணக்கு போட்டு வச்சிருக்கிறார்.” என்று சொல்லி தாயும் தந்தையும் கைகூப்பிக் கும்பிட்டுக் கொண்டார்கள்.
‘உட்காரம்மா…’ என்று தாயார் இருக்கையைக் காட்டினார். நித்யா உட்கார்ந்தாள். செல்வன் வேறொரு இருக்கையில் போய் உட்கார்ந்துகொண்டான்.
அவன் தனது பக்கத்தில் உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் என்பது போல் நித்யாவின் கண்கள் சுழன்று நின்றன.
“சரி… நான் காபி கொண்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு” சமயலறைக்குள் சென்றார் தேவியம்மாள். செல்வனின் தந்தை முருகவேல் இன்னொரு இருக்கையில் அமர்ந்தார். செல்வன் வெடுக்கென்று எழுந்து அவனது அறைக்குள் போய் திரும்பி
வந்தான்.
“இவங்கதான் அந்த அம்மா.” என்று எடுத்துவந்த ஒளிப்படத்தை நீட்டினான்.
“ஓ இவங்கதான் ரோசியா? அழகா இருக்கிறாங்க” என்ற சொல்லிவைத்தாள்.
ஆள் அழகா இருக்கிறாங்க. மனசிலதான் ஒரு சின்ன அழுக்கு. அது கல்யாணப் பத்திரிகை கொண்டு தர்ற அளவுக்கு ஆகிப்போச்சு. இத்தாங்க அந்த கல்யாணப் பத்திரிகை” என்று கையில் வைத்தான்.
“உங்களால… எப்படி தாங்க முடியதுன்னுதான் தெரியல்ல” என்று அனுதாபமாகப் பேசினாள் நித்யா.
“தாங்காம என்ன பண்றது. அதுக்காகக் கவலைப்பட்டு ஆகவேண்டியதில்ல. குடி… தாடின்னு கண்டபடி வாழ்றதுக்கு நான் தயார் இல்ல. தனியா இருந்து நொந்துபோறதுக்கும் விரும்பல்ல. அந்த அம்மா கல்யாணத்தன்றே… நம்ம கல்யாணத்தை வச்சிடலாமுன்னு நினைக்கிறேன்” என்றான்.
“வர்ற இருபதாம் தேதி கல்யாணம். இன்னும் பத்து நாள்தானே இருக்கு.” என்று பத்திரிகையைப் பார்த்தபடி சொன்னாள் நித்யா.
“பத்து நாள்தான் இருக்கு… நம்ம ஆயிரம் ரெண்டாயிரம் பத்திரிகை அடிச்சி குடுத்துக்கிட்டு பபே சிஸ்டம் முறையில சாப்பாடு போட்டு யாரையும் கையேந்தி நிக்கவைக்க வேண்டியதில்ல. உங்க குடும்பம், எங்க குடும்பம், பத்திரிகை ஆபீஸ் உரிமையாளர் மற்றும் நண்பர்களுக்குச் சொல்றோம். பதிவுத் திருமணம் செய்றோம். அவ கல்யாணத்துல போய் கலந்துக்கிறோம். எப்படி என் யோசனை” என்றான் செல்வன்.
“அதுதாண்டா சரியாக இருக்கும். இல்லேன்னா ஆளாளுக்கு ஏதாவது சொல்லிக்கிட்டிருப்பாங்க.” என்று சொன்னபடியே காபியைக் கொண்டு வைத்தார் தேவியம்மாள்.
“உன் கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்குமுன்னு ஆசைப்பட்டோம். அது எல்லாம் மாறிப்போச்சு. சரி இனி ஆகவேண்டியத பார்ப்போம்” என்றார் முருகவேல்.
காபி எடுத்து நித்யா கையில் கொடுத்தான் செல்வன். இன்னொரு கப் காபியை எடுத்து செல்வனிடம் கொடுத்தாள் நித்யா.
“எங்களுக்கு இல்லியா…” என்று கேட்டார் முருகவேல்.
“இதோ கொண்டுவர்றேன்” என்று சொல்லிவிட்டு சமயலறைக்குள் புகுந்தார் தேவியம்மாள். இன்னும் இரண்டு காபிகளோடு வந்தார்.
ஒரு காபியை எடுத்து முருகவேல் தேவியம்மாளிடம் நீட்டினார். இன்னொரு காபியை எடுத்து தேவியம்மாள் முருகவேலிடம் நீட்டினார்.
அவர்கள் காபி பரிமாறிக்கொண்டதை நித்யா கவனித்தாள்.
“இப்படித்தான் எங்க அம்மா… அப்பாவும் பரிமாறிக்குவாங்க. அதப் பார்த்துதான் முதல்ல நான் உங்களுக்குக் கொடுத்தேன். அப்புறம் நீங்க எனக்குத் தந்தீங்க.” என்றான் செல்வன்.
“நல்லாதான் இருக்கு நாகரிகம்” என்று பாராட்டினாள் நித்யா.
காபியைக் குடித்துவிட்டு பாத்திரங்களை வைத்தனர்.
“பத்து நாள்ல கல்யாணம்னா… நாளைக்கே நம்ம பெண் கேட்டு அவங்க வீட்டுக்குப் போகணும்… சரியா” என்றார் தேவியம்மாள்.
நித்யா சற்று யோசித்தாள். “நான் வீட்ல கேட்டு சொல்றேன்” என்றார். அப்படியே… கிளம்புவதற்குத் தயாரானாள்.
“டிபன் பண்றேம்மா… சாப்பிட்டுட்டுப் போகலாம்” என்றார் தேவியம்மா.
“வேண்டாம்மா… நான்தான் முதல்ல உங்களுக்கு டிபன் பண்ணித் தரணும்” என்றாள் நித்யா.
“சரி…. நம்ம சமயலறையிலேயே பண்ணு சாப்பிடலாம்” என்றார் தேவியம்மாள்.
கலகலவென்று எல்லோரும் சிரித்துவிட்டார்கள்.
நித்யா விடைபெற்றாள். தோட்டத்தில் வந்து நின்று நித்யாவை வழியனுப்பினார்கள். தோட்டத்தில் பூத்திருந்த ஒரு ரோஜா மலரைப் பறித்து நித்யாவின் தலையில் செருகிவிட்டார் செல்வனின் தாயார்.
ஸ்கூட்டி ஓசை செய்து கிளம்பியது.
(தொடரும்)