தீபாவளி- சிறுகதை – எழுதியவர் முத்துமணி
1 min read
Diwali – Short Story – by Muthumani
16-5-2020

அனிதா டெக்ஸ் டைல்ஸ் மாலை ஆறு மணிக்கே வண்ண விளக்குகளின் துணையோடு ஜொலித்தது. தீபாவளி நெருங்குகிறது. கடை முழுக்க ஜனத்திரள் அலை மோதியது.
“பிள்ளைகளைக் கையில் பிடிச்சிக்கோ ஒரே கூட்டம் பராக்கு பார்க்காம உள்ள வா”
-மனைவியைக் கட்டளையிட்டபடியே பத்து வயது மகனையும் பன்னிரண்டு வயது மகளையும் மனைவியோடு பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு கடைக்கு உள்ளே நுழைந்தான் மாரிச்சாமி.
அழுக்குக் கைலியை கட்டிக்கொண்டு நாள் முழுதும் ரிக்ஷா ஓட்டும் அவன் இன்றைக்கு ஜவுளிக்கடைக்கு வருவதால் கொஞ்சம் வெள்ளை வேட்டியும் சட்டையும் போட்டு இருந்தான்.
ஊரிலேயே பெரிய கடை. பிள்ளைகள் அங்கிருந்த கூட்டத்தையும் வகைவகையான துணிகளையும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டு உள்ளே நுழைய அன்றுதான் அந்த குடும்பமே லிப்டில் முதன்முதலாக ஏறி மூன்றாவது மாடிக்கு சென்றது.
எதையும் வாங்க கூட வேண்டாம் இந்த கடையை பார்ப்பதற்காக கூட வரலாம் என்று நினைத்துக் கொண்டாள் அவன் மனைவி.
“யாருக்கு என்ன வேணுமோ தாராளமா எடுத்துக்கோங்க என்கிட்ட ஒன்றும் கேட்க வேண்டாம்” என்று தாராளமாக உத்தரவிட்டான் மாரிசாமி.
எட்டாம் வகுப்பு படிக்கிற அந்த பெண் குழந்தை புது மாடலாக வந்திருக்கின்ற லெக்கிங்ஸ் அதற்கு ஏற்ற கலரில் டாப்ஸ் என்று வாங்கினாள்.
அப்பாவின் முகத்தை அச்சத்தோடு பார்த்தாள். அவன் ஒன்றுமே சொல்லாமல் “எடுத்துக்கோ எடுத்துக்கோ” என்றான்.
சின்னப்பயல் நல்ல ப்ளூ கலர்ல ஒரு ஜீன்ஸ் பேண்ட் பூப்போட்ட டீ சர்ட் எடுத்து மேலே வைத்து வைத்து அழகு பார்த்தான்.
“சூப்பரா இருக்குடா”- அப்பா தந்த பாராட்டு
“இந்த கலர் தான் விஜய்க்கு புடிச்ச கலர்”- இது அம்மாவின் புகழ்ச்சி.
பையனின் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.
மனைவிக்கும் இஷ்டப்படி சேலை.
“வாங்கடா பட்டாசுக் கடைக்கு போகலாம்” என்று மாரிச்சாமி சொன்னவுடன் எல்லாம் உண்மைதானா என்று மகள் நித்தியா தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.
அப்புறம் அங்கிருந்து ஸ்வீட் ஸ்டால் வந்தாச்சு.
ஜவுளி பட்டாசு ஸ்வீட்ஸ் எல்லாம் சேர்ந்து மூவாயிரத்தைத்தொட்டது.
“அம்மா அப்பாவுக்கு ஏது இவ்வளவு பணம் ஒரு தீபாவளிக்கு கூட இஷ்டப்படி டிரஸ் வாங்கி த்தர மாட்டாரு பணக்கஷ்டம் மனக்கஷ்டம்ன்னு சொல்லுவாரு.” பையன் கேட்டே விட்டான்.
“அதாண்டா எலக்சன் வருது இல்ல “என்றாள் அம்மா. ”
தேர்தல் வருதும்மா இன்னும் பத்து நாள் தான் இருக்கு ஆனா அதுக்கும் பணம் கிடைத்ததற்கு என்ன சம்பந்தம் “என்றாள் மகள்.
உண்மையில் அந்த தொகுதிக்கு பத்து நாட்களில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
“ஒருவேளை அப்பா ரிக்ஷா வாடகையை அதிகமாக வாங்கி இருப்பாரோ” என்னவோ ஒன்னும் பிள்ளைகளுக்கு ப்புரியவில்லை.
“டேய்உனக்கும் உங்க அக்காவுக்கும் பதினெட்டு வயசு ஆக இருந்திருந்தால் இந்நேரம் உங்க அம்மாவுக்கு ஒரு காஞ்சிபுரம் பட்டுச் சேலையை வாங்கி இருப்பேன் நீ ரொம்ப நாளா கேட்ட சைக்கிளையும் வாங்கிக் கொடுத்து இருப்பேன்” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொன்னான் மாரிச்சாமி.
அப்பா சொன்னது பிள்ளைகளுக்குப் புரிய வில்லை என்றாலும் ஒவ்வொரு தீபாவளிக்கும் முன்னும் ஊரில் ஒரு தேர்தல் வர வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டது மட்டும் உண்மை.