திருமணத்திற்கு பெண் கேட்டு தராததால் இளம்பெண் வீடு புகுந்து கடத்தல்
1 min read
27.5.2020
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மல்லி அருகே காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது உறவினர் பவித்திரன். கோவையில் வேலை பார்க்கிறார். இவர் சாந்தியை பெண் கேட்டு அவர்களது வீட்டுக்கு 2, 3 முறை சென்றுள்ளார். ஆனால், இவருக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.
இதையடுத்து 26ம் தேதி பவித்திரன், அவரது தம்பி வெங்கடேசன், உறவுக்கார பெண் ஒருவர் மற்றும் 2 ஆண்கள் என 5 பேர், மல்லியில் உள்ள சாந்தியின் வீட்டிற்கு சென்றனர். சாந்தியின் தாய், மற்றும் அவரது சகோதரியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர். மேலும் பவித்ரன், வெங்கடேசன் இருவரும், சாந்தியை வலுக்கட்டாயமாக இழுத்து, டூவீலரில் அமர வைத்து, கடத்திச் சென்றனர். சிவகாசி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவர்களிடம் இருந்து தப்ப, டூவீலரிருந்து சாந்தி கீழே குதித்துள்ளார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு தயாராக நின்று கொண்டிருந்த காரில், அவரை ஏற்றிக் கொண்டு சென்றனர்.
கடத்தல் தொடர்பாக சாந்தியின் தந்தை, விருதுநகர் எஸ்பி அவசர அழைப்பு எண் மூலம் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். செல்போன் எண் மூலம் பரிசோதித்ததில் கார், ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி பகுதியில் வந்ததை கண்டறிந்தனர்.
இதையடுத்து ராஜபாளையம் வடக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார், வடக்கு மலையடிப்பட்டி பகுதிக்கு சென்றனர். அங்கு உறவினர் வீட்டில் சாந்தியை வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவரை கேரளாவுக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
மேலும் இது தொடர்பாக பவித்திரன், வெங்கடேசன் உறவுக்காரப் பெண் ஒருவர் மற்றும் 2 ஆண்கள் என 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்ட எஸ்பி பெருமாள், ராஜபாளையம் டிஎஸ்பி நாகசங்கர், திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜேந்திரன் ஆகியோர் 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.