June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

காலியான திண்ணை/ சிறுகதை / கடையம் பாலன்

1 min read

Kaliyana Thinnai / Short Story by Kadaym Balan

9-7-2020
“ஏலே முத்துசாமி நம்ப ஊருக்கு வாராறாம்..”
“மெட்ராஸ்ல இருந்து வாரார்லே”
“அம்மாடியோ கொரோனாவல்லா கூட்டிட்டு வாராரு…”
“வண்டி ஒண்ணும் ஓடலியே எப்டி வாராரு”
“ஏதோ லாரிலன்னு சொல்றாங்க”
“ஆமா அவர ஊருக்குள்ள விட்டா ஊரு பூரா கொரோனாவ பரப்பி விட்டுவாரு”
“ஆமா அவரை ஊருக்குள்ள விடக்கூடாது”
“பேசமாக அவரை கலேச்க்கு அனுப்பிட வேண்டியதுதான்.”
“ஏலே அவரு அந்த காலேசில இருந்துட்டுத்துட்டுத்தான் வாராரு. டெஸ்ட்ல்லாம் பண்ணினாங்களாம்.”
“கலேச்ல எப்படி மூணு நாள்தான் இருந்திருப்பாரு. பதினாலு நாள்ல கொரோனா வர்றதுக்கு சான்ஸ் இருக்குன்னு சொல்றாங்க. அதனால அவரை பதினாலு நாளுக்கு ஊருக்குள்ளாற விடக்கூடாது. வாங்க ஊருக்கு வெளியிலேயே போய் தடுத்துடுவோம்.”
அந்த வீட்டு திண்ணையில்தான் இந்த பஞ்சாயத்து(?) வாதம் நடந்தது. சிலர் விடியவிடிய படுத்து எழுந்திச்சி துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டு புறப்பட்டார்கள்.
ஏதோ போருக்கு அணி திரண்டு செல்வதுபோன் சென்று கொண்டிருந்தனர்.
“கார்லத்தான் வருவாரு. காரு ஊருக்குள்ள வரமுடியாதபடி மரத்த வெட்டி போடுங்கல”
அடுத்த நொடியில் முத்துசாமிக்கு சொந்தமான வெளங்காட்ல வளர்ந்திருந்த சீமக்கருவை மரம் சாலைக்கு வந்து வழியை மறைத்தது. அவருக்கு சொந்தமான பெரிய பாராங்கற்களும் அவரை தடுத்து நிறுத்த சாலையில் காத்திருந்தன.
சற்று நேரத்தில் முத்துசாமி காரில் வந்தார். ஊர் பாதுகாப்புக்காக இந்த தடுப்பு அமைக்கப்பட்டிருந்ததாக அவர் முதலில் நினைத்தார். ஆனால் தனக்கு எதிராகத்தான் இந்த வேலி என்பதை அறிந்து ஒரு நிமிடம் திகைத்தார்.
“அண்ணாச்சி நீங்க எங்களுக்கு வேண்டியவங்கத்தான். இந்த ஊருக்காவ எவ்ளவோ செஞ்சிருக்கீங்க. ஆனாலும் இந்த ஊரு நல்லதுக்காவத்தான் சொல்றோம். நீங்க தயவு செஞ்சி போயிடுங்க. கொரோனா போனப்புறம் வாங்க.”
“எப்பா நான் பெரிய வீடா கட்டிப்போட்டிருக்கேனே. வீட்டுக்குள்ளாரத்தான் இருக்கப்போறேன். என்னால யாருக்கும் எந்த பாதிப்பும் வராது.”
“அப்படி இல்ல அண்ணாச்சி சின்னஞ்சிறுசுக இருக்காங்க.. நாம வயசானவங்க. நமக்கு ஒண்ணும் இல்ல. ஆனா குழந்தைங்க பாருங்க… அதனால…” முத்துசாமியின் முகத்தை பார்க்காமல் பேசினார்கள்.
இதற்குள் இந்த விவகாரம் போலீசுக்கு தெரிந்து அவர்கள் 4 பேர் பைக்கில் வந்தார்கள்.
“எப்பா பெரியவரு அவரு வீட்டுக்குள்ளத்தான் இருக்கப்போறாரு.. அதனால உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. போங்க வழிய திறந்துவிடுங்க.”
“நீங்க சொல்லிடுவீங்க.. நாளைக்கு ஒண்ணுன்னா நீங்களா வரப்போறீங்க. எங்களல்லா அனாதயா ஆஸ்பத்திரியில கொண்டு போட்டுருவாங்க.”
இப்போது முத்துசாமி பேசினார்
“சார்… நான் பதினாலு நாலு ஊருக்குள்ள போகல.. சிட்டிக்குள்ள ஒரு வீடு பாத்து தாங்க அங்கேயே இருக்கிறேன்”
“ஐயா.. சொந்த ஊர்லயே விடமாட்டேங்கிறாங்க. சிட்டிக்குள்ள யாரு வீடு தருவாங்க.”
“அப்படின்னா காலேஜ்க்கே போகட்டுமா?”
“ஐயா அதுக்கு கவர்மெண்ட அனுமதிக்காதே..”
குழப்பதில் முத்துசாமி நெற்றியை சொரிந்து கொண்டிருந்தார்.
“ஏலே பெரியவரை ஊருக்குள்ள வீடப்போறீங்களா.. உங்கள மேல கேஸ் போடட்டுமா?”- போலீசாரின் கெஞ்சல் அதட்டலாக மாறியது.
அதுவரை வீராவேசம் பேசியவர்கள் ஆளுக்கொரு பக்கமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.
போலீசாரே முத்துசாமியை அவரது வீட்டுக்கு கொண்டு போய்விட்டனர்.
“அய்யா ஒங்களுக்கு தேவையான எல்லாத்தையும் நாங்களே வாங்கித்தாரோம் இரண்டு வாரத்துக்கு மட்டும் நீங்க வீட்லயே இருங்க.”
வீட்டுக்குள் வந்தார், முத்துசாமி. அவரது வீட்டு திண்ணையில் துண்டு பீடிகளும் தலையில்லா முண்டங்களாக தீக்குச்சிகளும் சிதறிக்கிடந்தன. இரவு அந்த திண்ணையில் படுத்திருந்தவர்கள் போட்ட எச்சங்கள் அவை.
முத்துசாமியின் சொந்த ஊர் அதுதான் என்றாலும் அவரது வசதிகள் எல்லாம் சென்னை கொடுத்த வரப்பிரசாதம். சென்னையில் குடியேறினாலும் அவ்வப்போது சொந்த ஊரில் கால்பதித்தால்தான் அவருக்கு நிம்மதி. ஊருக்கு வேண்டிய உதவிகளை யாருக்கும் தெரியாமல் செய்வார். அவருக்கு இரண்டே இரண்டு மகள்கள்தான். திருமணம் ஆகிவிட்டது. மூத்தவள் கணவருடன் வெளிநாட்டில் இருக்கிறாள். அடுத்தவள் சென்னையில்… மனைவி இறந்தபின் இளைய மகளுக்கு மகனாய் மாறிவிட்டார்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் இருந்த பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டினார். அப்போது தமிழர் பாரம்பரியப்படி திண்ணை அமைத்து கட்டினார்.
அவரது மனைவி “திண்ணல்லாம் வேண்டாமுங்க… நாலு பேரு உக்காருவாங்க. வீண் பிரச்சனல்லாம் வருமுங்க” என்றாள்.
“நாலு பேரு உக்காரதுக்குத்தான திண்ண கட்டுறோம். நாம இந்த ஊர்ல இல்லாட்டாலும் இந்த திண்ணை நம்ம அடையாளம் காட்டும்” என்று கூறி மனைவியின் வாயை அடைத்தார்.
அவரது எண்ணப்படியே இதுவரை அந்தத் திண்ணையை பொது கூடாரம்போல் அந்த ஊர் மக்கள் உரிமை கொண்டாடினார்கள். பலருக்கு இரவு பொழுதே அங்கேதான் கழியும்.
ஆனால் இப்போது அந்தத் திண்ணை காலியாக கிடக்கிறது. அந்த வீட்டுக்கு அருகே கூட யாரும் வருவது கிடையாது. பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட தங்கள் வீட்டு ஜன்னல்களை ஆணி அடித்து பூட்டினார்கள். வெளியே செல்ல வேண்டுமானால் முத்துசாமி வீட்டுக்கு முன்புறம் வராமல் நாலு தெரு சுற்றி சென்று கொண்டிருந்தார்கள்.
ஒரேஒரு போலீஸ்காரர் மட்டும் அவ்வப்போது பெரியவருக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
வெறிச்சோடி கிடந்த திண்ணையை பார்க்க முத்துசாமிக்கு ஒருமாதிரியாக இருந்தது. பூஞ்சட்டிகளை வாங்கி வரச்செய்து வரிசையாக வைத்தார். அதில் வைத்த செடிகள் தளிர்விட ஆரம்பித்துவிட்டன. டேபிள் ரோஜாக்கள் சிவப்பு கரங்களை விரித்து பூரிக்க தொடங்கிவிட்டன.
இரண்டு வாரங்கள் எப்படித்தான் ஓடியதோ, முத்துசாமிக்கு தெரியவில்லை.
“அண்ணாச்சி… பதினாலு நாள் முடிஞ்சிது. இனிமே ஒங்கக்கிட்ட இருந்து கொரோனா வராது. அதனால நீங்க வெளியில வரலாம்.”
“இதுக்கு முன்னால நீங்க ஊருக்கு வந்தது மாதிரியே எங்களோட பேசிக்கிட்டே இருக்கலாம்.”
“வாங்க பெரியப்பா அப்படி வயலு பக்கம் போயிட்டு வரலாம்.”
“அண்ணாச்சி நீங்க கட்டிக் கொடுத்த கோயில் மண்டபத்தை ஒரு தடவை வந்து பாருங்க.”
“தாத்தா எனக்கு புறந்த பிள்ளய நீங்க வந்து பாருங்க. ஒங்க வாயால நல்ல பேரு வையுங்க.”
-&இப்படி ஆளாளுக்கு முத்துசாமியுடன் உறவை புதுப்பிக்க ஆரம்பித்தார்கள்.
இப்போது முத்துசாமி பேச ஆரம்பித்தார்.
“நீங்க எல்லாரும் என்ன அன்பா கூப்படறீங்க. ரொம்ப நன்றி… ஆனா கொரோனா…?”
“இல்ல அண்ணாச்சி இனிமே ஒங்ககிட்ட இருந்து கொரோனா எங்களுக்கு வராது.”
“இல்ல தம்பி… எங்கிட்ட கொரோனா இல்லன்னு தெரிஞ்சுப்போச்சு. ஆனா உங்ககிட்ட இருக்கலாமில்ல. நீங்க டெஸ்ட் எடுக்கல. பதினாலு நாலு தனியா இருக்கல. அதனால உங்கக்கிட்ட இருந்து எனக்கு கொரோனா வந்திரக்கூடாது பாருங்க.. அதான் நான் தனியாவே இருந்துக்கிடுதேன்.” & உள்ளத்துக்கு திரைபோட்டு உதடு பேசியது.
அன்று இரவு திண்ணைக்கு படுக்க வந்தவர்களிடமும் முத்துசாமி இதையே சொல்லி அனுப்பினார்.
முன்பெல்லாம் காலையில் திண்ணையில் துண்டுபீடிகளையும், எரிந்த குச்சிகளையும் பார்க்கலாம். இப்போது செடிகளின் பழுத்த இலைகளும், வாடிய பூக்களும்தான் சிதறிக்கிடக்கின்றன.
எப்படியோ முத்துசாமியின் திண்ணையால் அந்தக் கிராம மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தொடங்கிவிட்டார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *