April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

அமுதாவின் ஆசைகள் / நாடகம் / கடையம் பாலன்

1 min read

Amuthavin Aasaikal-11 / Drama by Kadayam Balan

காட்சி 11
இடம் அசோக்குமார் வீடு

பங்கேற்பவர்கள்-அமுதா, பவித்ரா, ராஜேஷ், அசோக்குமார்

—–

பவித்ரா: என்ன அக்கா, அத்தானுக்கு என்மேல உள்ள கோபம் இன்னும் தீரல?
அமுதா: அவருக்கு உன்மேல கோபம் இல்லை. என்மேல உள்ள கோபத்தை உங்கிட்ட காட்டுறாரு. நாம முன்னேறுவது அவருக்கு பிடிக்கல. அதுக்கெல்லாம் வருத்தப்படக்கூடாது.
பவித்ரா: அக்கா நான் என் பிரண்ட பார்த்துட்டு வாரேன்.
அமுதா: சரி சீக்கிரம் வந்துடு. அந்த ஆளு வந்திட்டா கத்துவாரு.
பவித்ரா: சரி(வெளியே செல்கிறாள்)
அமுதா: என்ன இன்னமும் நம்ம ராஜேசை காணோம்.
ராஜேஷ்: வந்துட்டேன் அமுதா.
அமுதா: அவரு இல்லாத நேரத்திலத்தான் நம்ம பிஸ்னஸ் பற்றி பேச முடியும். அதான் எதிர்பார்த்து காத்திருந்தேன்.
ராஜேஷ்: நானும் அசோக்குமார் எப்போ வெளியே போவாருன்னு காத்திருந்துதான் உள்ளே வந்தேன்.
அமுதா: இருங்க கதவை அடைச்சிட்டு வாறேன். வீட்டல ஒரே சண்டைதான் ராஜேஷ். இதுக்க முன்னாடி வேலை வேலைன்னு வெளியே போயிடுவாரு. இப்ப என்னடான்னா நான் ஒரு தொழில்கூட தொடங்க கூடாதான். கல்யாணம் ஆகி வந்தா நாள்ல இருந்து இன்னிக்கு வரைக்கும் அவருக்கிட்ட இருந்து எந்த அன்பையும் நான் கண்டது இல்லை. இனிமேயும் பொறுமையா இருக்கிறதா இல்லை. எப்படியாவது நாம முன்னேறணும். அப்பத்தான் அவருக்கு என்னைப்பத்தி தெரியும்.
ராஜேஷ்: என்ன அமுதா உங்களை ஒரு அடிமை மாதிரியா வச்சிருக்கிறாரு. உங்க திறமையை கொஞ்சம் கூட உணராதவரால்லா இருக்காரு. உங்க திறமையில பத்தில ஒரு பங்க பயன்படுத்தினாலே அவரு எங்கோ போயிருப்பாது.
அமுதா: ஆமாங்க கழுதைக்கு தெரியுமா கற்பூர வாடை.
ராஜேஷ்: எனக்கு நல்லா தெரியுது, இந்த கற்பூரத்தின் வாடை.
அமுதா: இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சா ஆகணும்.
ராஜேஷ்: என்ன சொல்றீங்க அமுதா.
அமுதா: ஆமா என் புருஷங்கிட்ட என் பிஸ்னசுக்க நீங்க வாரீங்களா இல்ல நானே ராஜேஷ் உதவியோட செய்யட்டுமான்னு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு கேட்க போறேன்.
அசோக்குமார்: (உள்ளே இருந்தபடி) அமுதா… அமுதா…
அமுதா: ஐயோ என் புருஷன் வந்திட்டரே… உங்கக்கூட நான் பேசக்கூடாதுன்னு ஏற்கனவே சொல்லி இருக்காரு. இப்போ உங்கள கண்டா கொதிச்சி எழுந்திருவாரு.
ராஜேஷ்: இப்ப நான் என்ன செய்ய? பின்புற வாசல்வழியா ஓடிடட்டுமா?
அமுதா: வேண்டாம் பின்புற வாசல் வழியா வழியா போனாலும் வெளிகேட் வழியாத்தான் போகணும். அங்கேதான் அவரு மோட்டார் சைக்கிள விடறதுக்காக நிக்கிறாரு.
ராஜேஷ்: அப்ப என்ன செய்ய.
அமுதா: இருங்க…. இதோ உள்ளே இருக்கே அந்த பீரோவுக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கங்க.
ராஜேஷ்: சரிங்க.
அசோக்குமார்: என்னடி கதவை திறக்க எவ்வளவு நேரம்.
அமுதா: இல்ல சமையல் அறையில வேலையா இருந்தேன். அதான் லேட்டாயிட்டு.
அசோக்குமார்: ஏதோ பேசிக்கிட்டு இருந்த சத்தம் கேட்டதே.
அமுதா: அது… அது… ஒண்ணுமில்லைங்க…. டிவி சத்தம் கேட்டிருக்கும். இப்பத்தான் டிவிய ஆப் செய்தேன். என்னங்க திடீர்ன்னு சிக்கிரம் வந்திட்டிங்க.
அசோக்குமார்: ஒரு பைல மறந்துபோய் வச்சிட்டு போயிட்டேன். அதை எடுக்கத்தான் வந்தேன்.
அமுதா: பைல் எங்க இருக்கு?
அசோக்குமார்: அது பீரோவுலத்தான் இருக்கு.
அமுதா: நான்போய் எடுத்துட்டு வர்றேன்.
அசோக்குமார்: அது உனக்கு தெரியாது. நானே போய் எடுத்துக்கறேன்.
அமுதா: வேண்டாங்க. அந்த ரூமை நான் இன்னும் கிளீன் பண்ணல…. பீரோ…
அசோக்குமார்: என்னடி உளருத… விடு நானே போய் எடுத்துக்கறேன்.
(அமுதா தடுத்ததையும் மீறி உள்ளே செல்கிறான். அங்கே ராஜேஷ் மறைந்திருப்பதைக் கண்டு அவனை பிடித்து இழுத்து வருகிறான்.)
அசோக்குமார்:- ஏண்டா இங்கே வந்த? ஏண்டி இவனை கூட்டிட்டு வந்து வீட்டுக்குள்ள ஒளிச்சி வச்சிருக்கே.
அமுதா: நீங்கத்தான் இவருக்கூட பேசக்கூடாது. அவரோட சகவாசமே வேண்டாம்ன்னு சொன்னீங்க.
அசோக்குமார்: பிறகு ஏண்டி அவனை வீட்டுக்குள்ள விட்டே.
அமுதா: நாம முன்னேறுவதற்காக… பிஸ்னஸ் பற்றி பேச வந்தாரு.
அசோக்குமார்: ஏண்டா அன்னிக்கே நான் உன்கிட்ட இந்தப்பக்கம் வராதேன்னு சொன்னேனே. ஏண்டா வந்தே.
ராஜேஷ்: மிஸ்டர் அசோக்குமார் நானா உங்க வீட்டுக்கு வரவில்லை. உங்க ஒய்ப் கூப்பிட்டாங்க. அதான் வந்தேன்.
அமுதா: இதோ பாருங்க அவருக்கிட்ட என்ன பேச்சு. நான்தான் நமக்காக வரச் சொன்னேன். ராஜேஷ் நீங்க போங்க. நான் பார்த்துக்கறேன்.
(ராஜேஷ் செல்கிறான்)
அசோக்குமார்: ஏண்டி நான் இல்லாதப்போ அவனை வரச்சொன்ன? அதுவும் அவனை வீட்டுல மறைச்சி வைச்சிருக்க.
அமுதா: அப்போ என்னை சந்தேகப்படுறீங்களா?
அசோக்குமார்: நான் எங்கடி உன்னை சந்தேகப்படறேன். நீத்தான் சந்தேகப்படற மாதிரி அவனை வீட்டுக்குள்ள மறைச்சி வைச்சிக்கே.
அமுதா: அப்போ ஏன் அடிக்கடி ராஜேசை ஒளிச்சி வச்சிருந்தேன்னு சொல்றீங்க.
அசோக்குமார்: நீதானே அவனை ஒளிச்சி வைச்சே. இப்போது அது முக்கியமில்லை. அந்த நாசக்காரப்பயலை நம்மாதே. யாருக்கிட்டேயும் இல்லாத வில்லங்கத்தனம் எல்லாம் அவங்கிட்ட இருக்கு. அவன் நடந்து போன இடத்துல புல்லுக்கூட முளைக்காது.
அமுதா: நீங்க ஏன் முட்டாள்தனமா பேசறீங்க. அவரு நமக்கு உதவி செய்றதுக்குத்தான் ஆசைப்படுதாரு. அவரை ஏன் சந்தேகப்படுறீங்க.
அசோக்குமார்: ஏண்டி நான் சொல்றத புரிஞ்சிக்க மாட்டேங்கிற.
அமுதா: அதத்தான் நானும் சொல்றேன். ஏங்க நான் சொல்றத புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க. சரி கடைசியா கேட்கிறேன். ராஜேஷ் சொல்றபடி பங்கு மார்க்கெட்ல இறங்குதற்கு பணம் தர்றீங்களா இல்லியா?
அசோக்குமார்: நான் தரமாட்டேன்.
அமுதா: அப்போ நானே பார்த்துக்கறேன்.
அசோக்குமார்: நீ எப்படி பார்ப்பே. உன்கிட்ட எங்கடி பணம்?
அமுதா: எங்க அம்மா-அப்பா பேருல சொத்து இருக்கு. அதை வச்சி என்னால முன்னேற முடியும்.
அசோக்குமார்: அதுக்கும் நான் சம்மதிக்க மாட்டேன்.
அமுதா: உங்ககிட்ட யாரு சம்மதம் கேட்டாங்க?
அசோக்குமார்: அந்த சொத்து உனக்கு மட்டும் உரியது இல்லை. உன் தங்கச்சிக்கும் பங்கு உண்டு.
அமுதா: அவள் என்னோட தங்கச்சி. எம்மேல உள்ள நியாத்தை புரிஞ்சிக்கிட்டு எம்பக்கம்தான் சேருவாள்.
அசோக்குமார்: என்னடி விதண்டாவிவாதம் பண்ணிக்கிட்டு இருக்கே.
( அமுதாவின் கன்னத்தில் அடிக்கிறான்)
அமுதா: என்ன அடிச்சிட்டிங்கல்ல… என்ன அடிச்சிட்டிங்கல்ல… இனிமே உங்க கூட ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. நான் இப்பவே வெளியே போய் முன்னேறி காட்டறேன்.
அசோக்குமார்: போ… போ… நீ எங்கேயும் போய் எக்கேடும் கெட்டுப்போ-…
அமுதா: நான் போறேன். நான் பெரிய பணக்காரியா ஆனபிறகு நீங்க என்கிட்ட வந்து சரண் அடைவீங்க. இது நான் எடுத்துக்கிற சபதம்.
(உள்ளே சென்று இரண்டு சூட்கேசுகளை எடுத்துக் கொண்டு வெளியே புறப்படுகிறாள்)
அசோக்குமார்: அசோக்குமார் நீ பொம்பள. நீ வீட்டவிட்டு வெளியே போனா என்னைத்தான் நாலுபேரு நாலுவிதமா சொல்வான். அதனால் இந்த வீட்டலேயே இரு.
அமுதா: வேண்டாம். நான் இந்த வீட்ல இருந்தா என்னை ஒழுங்கா வேலை பார்க்க விட மாட்டீங்க. நான் தனியா போறேன்.
அசோக்குமார்: சரி உன் வேலைக்கு நான் எந்த இடையூறும் செய்ய மாட்டேன். நல்லதுக்காக சொன்னா நீ கேட்க மாட்டேங்கிற.
அமுதா: வேண்டாங்க… வேண்டவே வேண்டாம். என்னால உங்ககூட இனிமே ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது.
அசோக்குமார்: நில்லு. அமுதா நீயே இந்த வீட்ல இரு… நான் வெளியே போய் தங்குகிறேன். என்னிக்கு திருந்தி எங்கிட்ட வர்றீயோ அன்னிக்கு நான் இந்த வீட்டுக்குள்ளே வாரேன்.
(அசோக்குமார் சூட்கேசை எடுத்துக் கொண்டு வெளியேறுகிறான்.)
அமுதா: போங்க… போங்க… நீங்க இல்லாட்டி என்னால வாழ முடியாதா. உங்கக்கூட இருந்து இதுவரைக்கு என்னத்தை கண்டேன். இன்னும் கொஞ்ச நாள்ல என் கால்ல வந்து விழப்போறீங்க.
(தொடரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.