திருநெல்வேலிக்கு 230 வயது
1 min read230 years to Tirunelveli
1-9-2020
திருநெல்வேலிக்கு இன்று 230 வயது
“திருநெல்வேலி” என கம்பீரமாகவும், “நெல்லை” என செல்லமாகவும் அழைக்கப்படும் இம்மாவட்டம், பரந்து விரிந்து இருந்த மாவட்டமாகும். 2ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இந்த பூமிக்கு வணிகம் செய்ய வந்த பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனியார், 1790 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி “திருநெல்வேலி ஜில்லா”வை உருவாக்கினர். (“ஜில்லா” என்பது, அன்றைய வடமொழி ஆதிக்கத்தின் அடையாளம். பின்பு “மாவட்டம்” என்ற இனிய தமிழ்ச்சொல் நிலை பெற்றது).
பிரிப்பு
அன்றைய தினத்தில் திருநெல்வேலி மாவட்டத்துடன் இன்றைய தூத்துக்குடி, (இளைய) தென்காசி மாவட்டங்களும், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் இணைந்து இருந்தன. காலப்போக்கில் விருதுநகரும், ராமநாதபுரமும் பிரிந்து, புதிய மாவட்டங்களாக உருவாயின. பின்பு, தூத்துக்குடியும் தனியாகப் பிரிக்கப்பட்டு, வ உ சிதம்பரனார் மாவட்டமாக உதயமானது.
திருநெல்வேலிக்கு “திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டம்” எனப் பெயரிடப்பட்டது.
1997-ம் ஆண்டு, மாநில அளவில் உருவாக்கப்பட்ட சர்ச்சைகளின் காரணமாக, மாவட்டங்களில் இருந்து தலைவர்களின் பெயர்கள் விடைபெற்றன. சமீபத்தில் திருநெல்வேலியில் இருந்து தென்காசி பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. என்னதான் தனித்தனி மாவட்டங்களாகி விட்டாலும், தூத்துக்குடியும், தென்காசியும் இன்னும் நெல்லையின் சகோதர மாவட்டங்களாகவே பின்னிப்பிணைந்துள்ளன.
திருநெல்வேலி என்றதும், உலகின் எந்த மூலையில் இருப்போருக்கும் நினைவுக்கு வருபவை, திருநெல்வேலி அல்வாவும், தாமிரபரணி ஆறும் தான். திருநெல்வேலியின் அடையாளங்களாக இவையிரண்டும் காலங்காலமாக நிலைத்திருக்கின்றன.
நெல்லுக்கு வேலி
வேணுவனம், திருநெல்வேலியான கதை
வயல்வெளிகள் நிரம்பிய திருநெல்வேலியின் பண்டைய பெயர் “வேணுவனம்” என்றும், கொட்டித்தீர்த்த மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படாமல் “நெல்லுக்கு வேலியிட்டு நெல்லையப்பர் (இறைவன்) காத்ததால் நெல்வேலி என்று பெயர் பெற்று, அதுவே பின்பு “திருநெல்வேலி” என நிலைத்திற்று” என்றும் பெயர்க்காரணம் வழங்கப்படுகிறது.
நெல்லையின் பிரதான அடையாளம், நெல்லையப்பர்-காந்திமதியம்மன் ஆலயம். ஆனி மாதந்தோறும் நடைபெறும் நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் சிறப்பு வாய்ந்தது. தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், திருவாரூர் தியாகராஜர் தேர்களுக்கு அடுத்து 3-வது பெரிய தேர், நெல்லையப்பர் தேராகும்.
500 ஆண்டுகளுக்கு மேல் ஓடிய இத்தேர், இவ்வாண்டு கொரோனா பரவலால் ஓடாதது, நெல்லை மக்களுக்கு வருத்தம் தந்த நிகழ்வாகிப்போனது.
தமிழர்களால் “திருநெல்வேலி” என அழுத்தந்திருத்தமாகவும் , ஆங்கிலேயர்களால் “தின்னெவேலி” (TINNEVELLY) என்றும் அழைக்கப்படும் இந்நகரம் தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரமாகும். தலைநகர் சென்னையில் இருந்து 625 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
திருநெல்வேலிக்கு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் அத்தனை பெருமைகளுக்கும் காரணம், தாய்ப்பால் ஊட்டும் தாய்க்கு நிகராக, தாகம் தீர்க்கும் “தாமிரபரணித்தாய்” தான். பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாட்டங்களை செழிக்க வைப்பது மட்டுமல்ல; என்றோ பிரிந்து அண்டை மாவட்டமாகி விட்ட விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி மக்களின் தாகம் தீர்ப்பதும் தாமிரபரணித்தண்ணீர் தான். தாகம் தணிப்பது மட்டுமா; சுவையிலும் அதற்கு நிகர் வேறேதும் கிடையாது.
திருநெல்வேலி அல்வாவின் அலாதி சுவைக்கும் தாமிரபரணித்தண்ணீரே காரணமாகும்.
இருட்டுக்கடை அல்வா
உலகத்தில் எத்தனையோ வகை அல்வா இருக்கலாம். ஆனால் திருநெல்வேலி அல்வா எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விடும்.
திருநெல்வேலி நகருக்குள் எத்தனையோ அல்வா கடைகள் இருக்கின்றன..
ஆனால் நெல்லையப்பர் கோவில் எதிரில் இருக்கும் “இருட்டுக்கடை அல்வா” வுக்கு இருக்கும் மவுசு வேறு எதற்கும் இல்லை. அந்த கடையில் நூறு கிராம் அல்வாவை வாங்கி நெல்லையப்பர் கோவில் கோபுரத்தை பார்த்துக்கொண்டே சாப்பிடுவதில் ஒரு தனி இன்பத்தை அனுபவிக்கலாம்.
‘நெல்லைத்தமிழ்‘
தமிழகத்தில் பல வட்டார வழக்குகள் வழக்கத்தில் இருக்கின்றன. மதுரை, கோவை, சென்னை, தஞ்சை, குமரி என்று பல பகுதி மக்களால் வித்தியாசமான உச்சரிப்புகளில் அவை பேசப்படுகின்றன. இவற்றுக்கு மத்தியில், நெல்லை, தூத்துக்குடி வட்டார பகுதிகளில் வழங்கும் “நெல்லைத்தமிழ்” தனித்துவம் வாய்ந்தது. அண்ணாச்சி, ஏலே, மக்கா, போன்ற சொற்கள் நெல்லைத் தமிழை முல்லைத் தமிழாக்குகின்றன. ஒரு திருநெல்வேலிக்காரர் வெளியூரில் போய் சாதாரணமாகப்பேசினாலே போதும். அவர் பேச்சை வைத்தே திருநெல்வேலிக்கார்ர் என்று கண்டுபிடித்து விடமுடியும்.
“தென்னகத்து ஆக்ஸ்போர்டு”
திருநெல்வேலி மாநகரப்பகுதிக்குள், திருநெல்வேலியும், பாளையங்கோட்டையும் ஒட்டிப்பிறந்த இரட்டை நகரங்களாக விளங்குகின்றன.
நடுவில் ஓடும் தாமிரபரணி ஆறு, புவியியல்ரீதியாக இரு நகரங்களையும் பிரித்தாலும், தன் நீர் வளத்தால் இணைத்தே வைத்திருக்கிறது. அதோடு, திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் 178 ஆண்டு பழமை வாய்ந்த “சுலோசனா முதலியார்” ஆற்றுப்பாலமும் இம்மாநகரின் தன்னிகரில்லா தனித்த அடையாளமாக விளங்குகிறது.
நெல்லையோடு இணைந்த பாளையங்கோட்டைக்கு தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற சிறப்புப் பெயரும் உண்டு. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்விப்பணியில் தமிழகத்திலேயே சிறந்து விளங்கி வருகிறது, பாளையங்கோட்டை.
இங்கு சாலைகள் தோறும் கல்விச்சாலைகளை காண முடியும். ஒரு நகரத்தில் பள்ளி, கல்லூரிகள் இருப்பது இயல்பு. ஆனால் பள்ளி, கல்லூரிகளுக்காகவே ஒரு நகரம் இருப்பது இங்கே நெல்லையில் தான். 55 ஆண்டு பெருமை வாய்ந்த திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியும், அதனுடன் இணைந்து சமீபத்தில் தொடங்கப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனையும் (Super Speciality Hospital) அமைந்திருப்பது, பாளையங்கோட்டையில் தான்.
திருநெல்வேலியில் இருந்து எந்தத் திசையில் சென்றாலும் வெறும் 50-80 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சுற்றுலா தலமோ, கோவிலோ வந்துவிடும். உதாரணத்திற்கு ,
கிழக்கே – திருச்செந்தூர், தூத்துக்குடி துறைமுகம், உவரி, மணப்பாடு;
மேற்கே – பாபநாசம், தென்காசி, குற்றாலம்;
தெற்கே – நாகர்கோவில், கன்னியாகுமரி;
வடக்கே – கழுகுமலை, சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர்.
இப்படி சுற்றிச் சுற்றி சுற்றுலா தலங்களையும், கோவில்களையும் கொண்டதாக விளங்குகிறது, நெல்லை மாவட்டம்.
தாமிரபரணி ஆற்றுக்கு மத்தியில் குறுக்குத்துறை முருகன் கோவில் அமைந்திருப்பதும் நெல்லையின் சிறப்புகளில் ஒன்று.
நவ கைலாச கோவில்கள், தாமிரபரணி கரையோரம் வரிசையாக அமைந்திருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் நூற்றுக்கணக்கான பழம்பெரும் கோவில்கள், தொன்மையான கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் என ஆன்மிக மணம் நெல்லை மண்டலம் முழுவதும் வீசிக்கொண்டு இருக்கிறது.
“மத நல்லிணக்க மாநகரம்”
திருநெல்வேலி மாநகரின் மிகப்பெரும் சிறப்பு என்ன தெரியுமா? 1995-க்கு முன்பு வரை, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் என 3 நகராட்சிகள் (Municipal Councils) இயங்கி வந்தன.
இவற்றில், திருநெல்வேலியில் இந்துக்கள் அதிகம்; பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் அதிகம்; மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை. இந்த 3 நகராட்சிகளையும் இணைத்துத்தான், “திருநெல்வேலி மாநகராட்சி” (Tirunelveli Municipal Corporation) உருவாக்கப்பட்டது. அவ்வகையில் மும்மத மக்களும் ஒற்றுமையாக வாழும் “மத நல்லிணக்க மாநகராட்சி” என்ற பெருமையும் நெல்லை மாநகராட்சிக்கு உண்டு.
“நீராருங்கடலுடுத்த…” எனத்தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் இம்மண்ணுக்குச் சொந்தக்காரர் என்பதும், அவர் பெயரால் இங்கே “நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்” இயங்கி வருவதும் நெல்லைக்கு சிறப்பு சேர்க்கும் கூடுதல் அம்சமாகும்.
ஆசியாவிலேயே 2-வது பெரிய ஈரடுக்கு மேம்பாலம், 47 ஆண்டுகளுக்கு முன்பே அமையப்பெற்றதும் நெல்லையில் தான்.
இன்னும் எண்ணற்ற பெருமைகள், நெல்லைக்கு உண்டு. பக்கம் பக்கமாக சொல்லிக்கொண்டே போகலாம்.
மாவட்டமாக உருவெடுத்து இன்று 230-வது பிறந்தநாள் காணும் “திருநெல்வேலிச்சீமை” யின் புகழ் திக்கெட்டும் பரவட்டும்! வாழ்க!வளர்க!!
–“திருநெல்வேலிக்காரன்” என்ற பெருமையுடன்
மணிராஜ்.