தமிழகத்தில் ஒரே நாளில் 6,110 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
1 min readIn Tamil Nadu, 6,110 people recovered from Corona one day
3-8-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,110 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று( வியாழக்கிழமை) மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 5,892 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில், 5,855 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 37 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,45,851 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 154 ஆய்வகங்களில் இன்று மட்டும் 82,901 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 48 லட்சத்து 80 ஆயிரத்து 769 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,447 பேர் ஆண்கள். 2,445 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,69,135. பெண்களின் எண்ணிக்கை 1,76,687 . மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29.
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 6,110 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 86 ஆயிரத்து 173 ஆக உள்ளது.
92 பேர் சாவு
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 92 பேர் இறந்தனர். இவர்களில் 58 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 34 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளியிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 7,608 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 52,070 பேர் பல் வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் . இதில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 20 ஆயிரத்து 322 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 67 ஆயிரத்து 416 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 58 ஆயிரத்து 113 பேர்.
சென்னையில்…
சென்னையில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 968 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் இதுவரை 1,38,724 பேர் கொரோானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர கோவையில் 593 பேருக்கும், கடலூரில் 590 பேருக்கும், செங்கல்பட்டில் 378 பேருக்கும், திருவள்ளூரில் 358 பேருக்கும், சேலத்தில் 214 பேருக்கும், திருநெல்வேலியில் 163 பேருக்கும், ராணிப்பேட்டையில் 157 பேருக்கும், காஞ்சிபுரம், விழுப்புரத்தில் 150 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்று 61 பேருக்கும், திருநெல்வேலியில் 89 பேருக்கும், தூத்துக்குடியில் 53 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் 29 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 7 பேரும், சேலத்தில் 4 பேரும், கோவை, நாகப்பட்டினம், திருவாரூர், திருப்பூரில் தலா 3 பேரும், கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகரில் தலா 2 பேரும், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, தென்காசி, திருப்பத்தூரில் தலா ஒருவரும் இன்று கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,444 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,23,851. கோவையில் 486 பேரும், சேலத்தில் 350 பேரும், திருவள்ளூரில் 335 பேரும், செங்கல்பட்டில் 323 பேரும், கடலூரில் 315 பேரும், தேனியில் 211 பேரும், காஞ்சிபுரத்தில் 201 பேரும் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.