பாடும் நிலாவே வா/ கவிஞர் முல்லை குமார்
1 min readPadum nelaavee / Mullai kumar
25—-/9/2020
பாடும் நிலாவே வா
பன்னீர் துளி குரலால்
எங்களை குளிரவைத்த குயிலே இன்று கண்ணீர் குளத்தில் தள்ளிவிட்டு சென்றாயே
வார்த்தை நங்கைக்கு
நாத கிரீடம்சூட்டி
வசந்த ஊர்வலம் வைத்தாயே மூச்சுவிடாமல்பாடி எங்களை மூச்சிரைக்க வைத்தாயே
இன்று மூச்சை நிறுத்திவிட்டு எங்கே சென்றாய் காற்றலையை
இனிப்பாக்கிய நீ காற்றோடு ஏன்கலந்தாய்
ஆயிரம் நிலவே வா என்று பாடிபறந்து வந்தபறவையே
எந்த கூட்டில் குடிபுகுந்தாய் பாட்டுக்கு வைசேர்த்த நீ இன்று பாதியில்விட்டுசென்றது ஏன் இசைதெரிந்தவர்கள்
இதயத்தில் குடியிருந்த நீ
இசைவு பெறாமல்
இடம்பெயர்ந்து ஏன் காலனுக்கு இசைதெரியாது, கன்னித் தமிழ்சுவைபுரியாது, எங்கள் இசைகுயிலை
எடுத்துசென்றான்
காலம் மாறும்
பாடும்நிலாவே நீ மீண்டும்
பாடவருவாய்
- கவிஞர் முல்லைக்குமார் என்ற தபசுகுமார்
==
நான் ஏன் அழ வேண்டும்?
(இது இன்னொரு கவிஞர் பாடியது) ஐம்பது ஆண்டுகளாக
உன் குரல் என் வசம்.
உன் குரல் கேட்காது
ஒரு நாள் இருந்ததில்லை.
எனக்கு உன்னைத் தெரியும்
உனக்கு என்னைத் தெரியாது.
உன் குரலை காதலித்தவன்
நான்..
நீ மரணம் அடைந்து விட்டதாக
செய்தி..
உன் குரலுக்கு ஏது மரணம்?
எனக்கு பழக்கமானது
உன் குரல்தானே.
அது மரணம் அடையாதே
அது என்றும்
என்னோடு
வாழ்ந்து கொண்டு தானே
இருக்கும்..
அப்புறம் நான் ஏன்
அழ வேண்டும்?
நீ இருப்பாய் என்னோடு
நான் இருக்கும் வரை..
உன்னோடு பழகியவர்க்கு
உன் இறப்பு இழப்பு..
உன் குரலோடு வாழும்
எனக்கு ஏது இழப்பு?
நீ எப்போதும்
என்னோடு தானே…
அப்புறம் நான் ஏன்
அழ வேண்டும்?
உடலை இறைவன்
மறைத்திருக்கலாம்
உன் குரலை
எந்த இறைவனும்
மறைக்க முடியாது…
நீ
இறைவனையே பாடியவன்
பாட்டில் இறைவனானவன்.
தூரத்தில் இருக்கும் எனக்கு
நீ இன்னும் கொஞ்சம் தூரம்
அவ்வளவு தான்..
என்னைப் பொறுத்தவரை
நீ என்னோடு
இருக்கிறாய்..
இசையாக.. பாடலாக..
அப்புறம் நான் ஏன்
அழ வேண்டும்?
இன்று முதல்
இன்னும் அதிகமாக
உன் குரலை கேட்பேன்..
இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்..
இவர் போல யார் என்று
ஊர் சொல்ல வேண்டும்….
இதில் நடித்தவர்
இதை பாடியவர்
இதை எழுதியவர்
இசையமைத்தவர்
இன்றில்லை…
இந்த வரிகள்
உனக்கும் பொருந்தும்…
பொன் மாலைப் பொழுதில்
இயற்கை எனும் இளைய மகளை
பனிவிழும் மலர் வனத்தில்
ஆயிரம் நிலவே வா என அழைத்து
அவள் ஒரு நவரச நாடகம் என்றாய்..
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்… என்று
பாடிய நீ என் இதயத்தில்
கோவில் கொண்டு அமர்ந்துள்ளாய்..
பிறகு
நான் ஏன் அழ வேண்டும்?
உன் பாடல்
என்னை
எழ வைக்கும்…
வாழ்க உன் புகழ்..
ஒரு வீட்டில் இருந்த நீ
இன்று
எல்லோரது இதய வீட்டில்…