கொரோன தடுப்பூசி பற்றி எளிய மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்; மோடி வேண்டுகோள்
1 min read
Ordinary people also need to understand about the corona vaccine; Modi request
30/11/2020
கொரோனா தடுப்பூசி குறித்து ஒரு எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் விளக்க வேண்டும் என பிரதமர் மோடி விஞ்ஞானிகளை கேட்டுக்கொண்டார்.
மோடி ஆய்வு
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. பல நாடுகள் தடுப்பூசிகள் உருவாக்கி பரிசோதித்து வருகின்றன.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்ப்பது, 2 மற்றும் 3-வது கட்டங்களில் இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கத்தில் கூடுதல் அக்கறை காட்டி வருகிறார். நேற்று முன்தினம்( சனிக்கிழமை) அவர் ஆமதாபாத், ஐதராபாத், புனே நகரங்களுக்கு சென்று அங்கு தடுப்பூசி உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள 3 நிறுவனங்களை ஆய்வு செய்தார்.
கலந்துரையாடல்
இந்த நிலையில், தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிற மேலும் 3 நிறுவனங்களான ஜெனோவோ பயோபார்மா, பயாலஜிக்கல் இ, டாக்டர் ரெட்டிஸ் ஆகியவற்றின் குழுவினருடன் இன்று ( திங்கட்கிழமை) காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார். மேலும் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள தகவலில் கொரோனா தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி தொடர்பான மூன்று குழுக்களுடன் பிரதமர் மோடி காணொலி சந்திப்புகளை நடத்தினார்.
கொரோனா தொற்றை சமாளிக்க ஒரு தடுப்பூசி கொண்டு வர அந்த நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டினார்.
தடுப்பூசி வளர்ச்சிக்கான பல்வேறு தளங்களின் சாத்தியங்களும் விவாதிக்கப்பட்டன, பிரதம மந்திரி, கூட்டங்களின் போது, தடுப்பூசி பற்றி ஒரு எளிய மொழியில் சாதாரண மனிதர்களுக்கு தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் செயல்திறன் போன்ற தொடர்புடைய விஷயங்களையும் வலியுறுத்தினார் என கூறி உள்ளது.