ஆலங்குளம் தொகுதியில் களம் இறங்க காத்திருக்கும் காங்கிரஸ்
1 min readCongress waiting to take the field in Alangulam constituency
9/12/2020
வருகிற சட்டசபைத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பலர் காத்திருக்கிறார்கள்.
ஆலங்குளம் தொகுதி
வருகிற ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை அரசியில் கட்சிகள் இப்போதே தொடங்கிவிட்டன.
நடிகர் ரஜினிகாந்த் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்து விட்டார். இதனால் இப்போது அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.
கடந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்று இருந்தது. இந்த தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று நம்பப்படுகிறது.
ஆலங்குளம் தொகுதியை பொறுத்தவரை கடந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது தி.மு.க.வைச் சேர்ந்த பூங்கோதை ஆலடி அருணா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
காங்கிரஸ்
ஆனால் வருகிற சட்டசபைத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியை காங்கிரஸ் கேட்கிறது. ஆங்குளம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் வேட்பாளர் யார் என்று அந்தக் கட்சிக்குள் பரபரப்பாக பேசப்படுகிறது. மொத்தம் 5 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
எம்.எஸ்.காமராஜ்
அதில் ஒருவர் எம்.எஸ்.காமராஜ். இவர் மறைந்த எம்.பி.யான வசந்தகுமார் மனைவியின் தம்பி ஆவார். இவரது சொந்த ஊர் ஆலங்குளம். ஆனால் தற்போது சென்னையில் வர்த்தகம் செய்த வருகிறார்.
ரவிஅருணன்
கடையத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான ரவி அருணன் பெயரும் அடிபடுகிறது. இவர் 1989-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அம்பைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதன்பின் 1996 –ம் ஆண்டு நடந்த தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
ராமசுப்பு
ஆலங்குளத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ராமசுப்பு பெயரும் களத்தில் உள்ளது. இவர் 1989 –ம் ஆண்டு ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பின் 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் இருந்தார்.
எஸ்.கே.டி.பி.காமராஜ்
பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த எஸ்.கே.டி.பி.காமராஜுக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என்று பேசப்படுகிறது. இவர் கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருந்தவர். தொடர்ந்து 20 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றிபெற்று பதவி வகித்தவர்.
மாரிக்குமார்
கடையத்தைச் சேர்ந்த மாரிகுமாரும் களம் காணலாம் என்று பேசப்படுகிறது. இவர் மாணவர் காங்கிரசின் தேசிய செயலாளராக இருக்கிறார். ஆந்திர மாநில பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
மேற்கண்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்திலும் தனித்துவம் பெற்றவர்கள். இதில் எம்.எஸ்.காமராஜ் தொழில் அதிபர் என்பதால் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அதிக அளவில் பணம் செலவு செய்வார் என்று பேசப்படுகிறது. அதை கருத்தில் கொண்டால் அவருக்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்பு உண்டு.
ரவிஅருணன் அம்பை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த்போது மதுரா கோட்ஸ் பிரச்சினையில் தொழிலாளர் பக்கம் நின்று வெற்றி கண்டார். தென்காசிக்கு தாமிரபரணி தண்ணீர் கொண்டுவர பெரும் முயற்சி எடுத்தவர் இவர்தான். தென்காசி புது பஸ்நிலையம் உருவானதற்கும் இவரது பங்கு முக்கியமானது. இவர் பதவியில் இருந்தபோது கறைபடியாக கரத்துக்கு சொந்தக்காரர் என்று பெயர் பெற்று இருந்தார். இதை எல்லாம் நோக்கினால் இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம்.
ராமசுப்பு சிறந்த பாராளுமன்றவாதியாக திகழ்ந்தார். 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில்போட்டியிட்டு எம்.பி. ஆனார். பாராளுமன்ற கூட்டங்களில் அதிகமாக கலந்து கொண்டவர் என்று பெயர் பெற்றவர். அதேபோல் அதிகமான கேள்விகளை கேட்டவர் என்றும் பெயர் வாங்கினார். இவைகளை நோக்கினால் இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம்.
எஸ்.கே.டி.பி.காமராஜ் யூனியன் தலைவராக இருந்தபோது பல்வேறு பணிகளை சிறப்பாக செய்தார். மக்களிடம் எளிமையாக பழகக்கூடியவர். பிரதிபலனை பாராது சேவை செய்பவர். இவர் மறைந்த காங்கிரஸ் தலைவரான எஸ்.கே.டி.ராமச்சந்திரனின் தம்பி மகன் ஆவார். இப்படி பார்த்தால் இவருக்கும் போட்டியிட டிக்கெட் கிடைக்கலாம். மாரிகுமார் மிகவும் சுறுசுறுப்பான இளைஞர். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியி்ல் அகில இந்திய பதவி வகிப்பவர் இவர் ஒருவரே. முதுகலை பொறியியல் பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது முனைவர் பட்டம் பெற படித்து வருகிறார். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக இருந்தாலோ அதிகமாக படித்தவர் என்று நோக்கினாலோ இவருக்கு சீட் கிடைக்கலாம்.