April 20, 2024

Seithi Saral

Tamil News Channel

கறை படிந்தவன் ( சிறுகதை/ கடையம் பாலன்)

1 min read

Karai Padinthavan / Short story by Kadayam Balan

“ஏம்பா அதோ சாவுகிராக்கி சண்முகம் நிக்கிறாம்பா… இந்த பஸ்சுக்கு அவன்தான் கண்டக்டரா?… அந்த பெட்டி கடையில போய் சில்லறை மாத்தி வைச்சிடுவோம்.”
“அவன்தான் இன்னிக்கு டூட்டின்னு எனக்கு நேத்தே தெரியும். வீட்ல இருந்தே கரைட்டா சில்லறைய எடுத்துக்கிட்டு வந்துட்டேன்.”
“பாவி மனுஷன் சில்லறைய கைவிளங்கி கொடுக்க மாட்டான். எவ்வளவு ஆட்டய போட முடியுமோ அவ்வளவு போட்டுருவான்.”
“பேசஞ்சருகிட்ட பகல் கொள்ளையடிச்சு கோட்டயவா கட்டப்போறான். ஆஸ்பத்திரிக்குத்தான் கொடுப்பான். விளங்கவே மாட்டான்.”
“நடராஜா ரெண்டு வயல்பழம் கொடுப்பா… அந்த சண்முகத்துக்கு வாய்ல போடறதவிட நம்ம வயித்துக்காவது போடுவோம்.”
“டிரைவர் பஸ்ல ஏறிட்டாரு… பஸ் புறப்படபோவுது ஏறி சீட் போடுப்பா..”
“பயணிகள் திமுதிமுவென்று பஸ்சுக்குள் ஏற அடுத்த சில நிமிடங்களில் நிறைந்துவிட்டது.”
கண்டக்டர் சண்முகம் சாவகாசமாக.. நடராஜன் பெட்டி கடைக்கு வந்து வாழைப் பழங்களையும் பிஸ்கெட் பாக்கெட்டுகளையும் வாங்கி ஒரு பஸ்சில் ஏறி பத்திரமாக வைத்துக்கொண்டார்.
“அண்ணாச்சி மார்களே.. அம்மா மார்களே… தம்பிமார்களே.. தங்கச்சி மார்களே… நீங்க சரியா சில்லறைய வச்சிக்கோங்க… இந்த கூட்டத்துக்குள்ள என்னால சில்லறை கொடுக்க முடியாது. பிறகு நாளைக்கு வந்துகேட்டா எனக்கு மறந்துபோகும்.” என்று பஸ்சுக்குள்ளே தலைவலி தைலம் விற்பவரைப்போல சண்முகம் பேசினார்.
“அடேங்கப்பா… யோக்கிய சொல்றாம்பா.. எல்லோரும் கேட்டுக்கோங்க..”
“இந்த மனுஷன் சரியான சில்லற பொறுக்கியா இருப்பானோ…”
“அரசாங்கம்தான் சம்பளம் கொடுக்குதே… இப்டியரு புழைப்பு தேவையா…”
இவையெல்லாம் பயணிகளின் புலம்பல்
“எல்லோரும் இந்த மனுஷனை கண்டமானிக்கு பேசறாங்களே. போன வாரம் நூறு ரூபா கொடுத்து டிக்கெட் வாங்கிக்கிட்டு மீதிய வாங்க மறந்துட்டேன். மறுநாள் அவரே ஞாபகத்துல வச்சி சில்லறய கொடுத்தாரே…”
“பெரிய அமவுண்ட ஆட்டய போட்டாருன்னா, மாட்டிக்கிடுவாருல்ல.. பயந்தாங்கொள்ளி பய… சில்லற பொறுக்கி…”
“இவனை செக்கிங் அதிகாரிங்க செக்பண்ண மாட்டாங்காளா?”
“அடப் போப்பா இந்த எச்ச, அவங்களுக்கு கொஞ்சம் எச்சப்போட்டுருவாம்பா”
“ஆனா ஒண்ணு… இந்த பஸ்சில பிச்சைக்காரங்களே பாக்க முடியலப்பா”
“இந்த பெரிய பிச்சக்காரன் இருக்கும்போது அவங்களால இங்க தலை காட்ட முடியுமா?”
-&பயணிகளின் இந்த அர்ச்சனை லேசாக காதில் விழுந்தாலும் சண்முகம் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் டூட்டி முடிந்து போகும்போது கொஞ்சம் கணிசமான தொகையோடுதான் வீட்டுக்குபோவார்.


பிரபா பக்கத்து ஊரில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். தந்தை இல்லை. அவளது தாய் பார்வதி தன்னால் இயன்றளவுக்கு உழைத்து குடும்பத்தை நடத்துகிறாள். அவள் படிக்கும் பள்ளிக்கூடம் என்னவோ மிகவும் பிரபலமானதுதான். ஆனால் பிரபா மாதிரி ஏழைகளால் அங்கு தலைகாட்ட முடியாது. பின்னர் எப்படி இவள்..
அவளது ஒன்றுவிட்ட தாய்மாமா சொக்கலிங்கம் சொன்னதால் அந்தப்பள்ளியில் சேர்ந்தாள். தனியார் பள்ளியில் ஏழைகளுக்கு குறிப்பிட்ட அவளவு சீட் கொடுக்க வேண்டுமே… அந்தப் பள்ளியில் இதுவரை எந்த ஏழைக் குழந்தைகளையும் அப்படி சேர்க்கவில்லை. ஆனால் ஏழைகளை சேர்த்ததாகவும் அவர்களிடம் இருந்து கல்விக்கட்டணம் எதையும் வாங்கவில்லை என்றும் கணக்கு குறிப்பு எழுதி விடுவார்கள்.
சமூகசேவகன் சொக்கலிங்கம் விடுவானா என்ன-? அக்காள் மகள் பிரபாவிற்கு போராடி அந்த சீட்டை வாங்கிக் கொடுத்துவிட்டான். ஆனாலும் என்ன பிரயோஜனம்… தேர்வு கட்டணம், ஸ்பெஷல் டியூஷன், ஆய்வுக்கூட கட்டணம் என எதைஎதையோ சொல்லி பிரபாவிடம் பணம் கறந்து கொண்டிருக்கிறார்கள்.
அதோடு… “நீ இலவசமாத்தான் படிக்கிறாய்” என்ற அவமானக்குரல் ஆசிரியர்களிடம் மட்டுமல்லாமல் சக மாணவ&மாணவிகளிடம் இருந்தும் வரும்.
அதுமட்டுமல்ல.. அடுத்த ஆண்டே அந்த ஏழை சலுகை கிடையாது என்று கூறி கல்விக்கட்டணம் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது அந்த மாமாவின் சமூக சேவகன் குரல் ஏனோ ஒலிக்கவில்லை. ஆனால் ஒரு தயாளன் பிரபாவின் கல்விக்கட்டணத்தை ஏற்று பிரபாவின் படிப்பு தொடர வழிவகுத்து வருகிறார்.
அன்றைய தினம் பிரபா வீட்டில் சோர்ந்து காணப்பட்டாள். காலையில் எழுந்து குளிக்காமல் கவலையாக இருந்தாள்.
“ஏண்டி பள்ளிக்கூடம் போகணுமே… இன்னும் குளிக்காம இருக்கியே?”& தாய் பார்வதி.
“இல்லம்மா… பீஸ்கட்டல, அதனால பள்ளிக்கூடம் போகல”
“ஏன் அந்த புண்ணியவாளன் பணம் கொடுக்கலியா?”
“ஏதாவது வேலையா இருக்கும்மா… அவரு கொடுத்தபிறகுதான் நான் பள்ளிக்கூடத்துக்கு போவேன்.”
“அரசாங்க பள்ளிக்கூடத்துலயாவது சேர்த்துருப்பேன். உங்க மாமன் பண்ணின வேலை அந்த இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திலே சேர்த்துவிட்டு எங்கேயோ போயிட்டான். சரி… சரி… வீட்டை பெருக்கி துணிய தோய்ச்சிப்போடு.”
பிரபா வீட்டை பெருக்கி குப்பைய வாசலுக்கு வெளியே தள்ளிக்கொண்டு இருக்கும்போது மாமா சொக்கலிங்கம் வந்தார்.
“அம்மா… மாமா வாராங்க”
“அக்கா… சோமா இருக்கியா?”
“இருக்கோம்பா… நீ என்ன ரொம்ப நாளா ஆளயே காணோம்”
(தேரை இழுத்து தெருவுல விட்டுட்டு போயிட்ட என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.)
“நம்ப பிரபாவுக்கு அந்த பள்ளிக்கூடத்துல போராடி சீட் வாங்கிக் கொடுத்தேனே. அது சென்னை வரைக்கு தெரிஞ்சி அங்க இருக்கிற சமூகநல அமைப்பு என்ன சென்னைக்கு கூப்பிட்டாங்க.. அங்க நிறைய புகார் மனு கொடுத்து பல சீர்திருத்தங்களை செய்தேன். எனக்கு நிறைய பாராட்டு கிடைச்சுது. இப்போக்கூட… இந்த ஊருல கண்டக்டர் ஒருத்தன் ரொம்ப அடாவடித்தனம் பண்ணிக்கிட்டு இருந்தான். டிக்கெட் கொடுத்தா மீதிய கொடுக்குறதே கிடையாது. எனக்கு தகவல் கிடைச்சுது. நான் விடுவேனா.. ஜே.இ. வரைக்கும் போயி.. இப்போ சஸ்பெண்டாயி கிடக்கிறான். இதுக்காக இந்த ஊரு பஸ் பயணிகள் சங்கம் எனக்கு பாராட்டு விழா வைக்கிறாங்க. அதான் வந்தேன்.”
இதையெல்லாம் கேட்டுக்கொண்டே பிரபா தன் வேலையை செய்து கொண்டிருந்தாள். முற்றத்தில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருக்க… அங்கே கண்டக்டர் சண்முகம் வந்து நின்றார்.
“வாங்க அங்கிள்… வாங்க. அம்மா… நம்ம அங்கிள் வந்திருக்காங்க”
“வாங்க அண்ணாச்சி.. வாங்க… என்ன காலங்காத்தால வந்திருக்கீங்க… வேலைக்கு போகலியா?”
“பாப்பா.. நீ ஏன் பள்ளிக்கூடத்துக்கு போகலன்னு தெரியும். இப்போ பணம் கொஞ்சம் டைட். இன்னும் ரெண்டு நாளையில எப்படியாவது பணத்தை புரட்டி கட்டிடறேன்.”
“அண்ணாச்சி உங்களுக்குத்தான் ரொம்ப சிரமத்தைக் கொடுக்கிறோம். ஆமா என்ன அண்ணாச்சி மொகமெல்லாம் வாடி இருக்கு?”
“ஒண்ணுமில்லம்மா.. என்ன சஸ்பெண்டு பண்ணிட்டாங்க. அதான் பணத்தை கட்ட முடியல”
“என்ன அண்ணாச்சி ஒங்களயா வேலையில இருந்து நிப்பாட்டிட்டாங்க.. என்ன அநியாயம். எம் பொண்ண மாதிரி எத்தன பேருக்கு உதவி பண்ணியிருக்கீங்க.. உங்களுக்கா இந்த கதி?”
“நான் எங்கம்மா உதவி செஞ்சேன். உங்க மகளுக்கு என் பணத்துல இருந்து கொடுக்கல… பஸ்சில பயணம் செய்றவங்க சில்லறைய சேத்துத்தான் கொடுத்தேன். பிச்சை எடுத்தாவது படிக்கணும்ன்னு சொல்லுவாங்க. நான் இப்படி பிச்சை எடுத்து இந்த குழந்தைக்கு பணம் கட்டினேன். அது கடவுளுக்கே பொறுக்கல.. இன்னிக்கு வேலை இல்லாம…”
“அண்ணாச்சி நீங்க கவலைப் படாதீங்க. கடவுள் நம்மள காப்பாத்துவாரு.. இந்த வருஷம் பிரபாவோட படிப்ப நிறுத்திட்டு அடுத்த வருஷம் கவர்மெண்ட் பள்ளிக்கூடத்துல சேத்துடுவோம்.”
“வேண்டாம்மா.. இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துல படிச்சிக்கிட்டு இனி வேற பள்ளிக்கூடத்துல படிச்சா பாடங்கள் எல்லாம் மாறியிருக்கும். அது நம்ம பாப்பாவுக்கு சரிவராது. வேற எதாவது ஒருவழியில பணத்தை புரட்டி பார்க்கிறேன்.”
-சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார் சண்முகம். கண்ணீர் தோய்ந்த முகத்துடன் தாயும் மகளும் அவரை கண்கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தனர்.
“அக்கா இந்த மாதிரி ஆளுங்களயெல்லாம் நம்பாத… அவன் தில்லுமுல்லு பண்ணிக்கிட்டு நமக்காக பண்ணினேன்னு சொல்றான் பாரு.. நீ கவலைப்படாத அந்த பள்ளிக்கூடத்துக்கு நாளைக்கே போயி, அவங்கள உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்.”
“தம்பி எனக்கு ஒரேயரு நல்லகாரியம் பண்ணுப்பா”
“என்னக்கா?”
“நீ தயவு செஞ்சி எங்களுக்கு ஒரு உதவியும் பண்ணவேண்டாம். கண்டிப்பா அந்தப் பள்ளிக்கூடத்துக்குபோக வேண்டாம்.”

-&விடைபெற்று வீட்டைவிட்டு வெளியேறிய சொக்கலிங்கம் பஸ்நிலையம் சென்றான். அங்கே அவனது படம் இடம்பெற்ற பாராட்டு விழா போஸ்டர் நடராஜன் பெட்டி கடையில் ஒட்டப்பட்டிருந்தது. அங்கே சண்முகம் நின்று கொண்டிருந்தார்.
“தம்பி இந்த மாத பாக்கி பணம் இந்தாப்பா”
“வேற ஏதாவது வேணுமா சார்?”
“இல்ல… இனிமே சம்பளம் வராது. கடன் வாங்க மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே பதிலுக்கு எதிர்பாராமல் சென்று கொண்டிருந்தார்.
கடையில் மூன்று வாழைப்பழங்கள் வாங்கி தின்றான் சொக்கலிங்கம்.
“ஏம்பா கடைக்காரா என்ன உன் கடையில் ஈ அதிகமா மொய்க்குதே. எனக்கு சுகாதாரத்துறை அதிகாரி தெரியும். சொல்லிடவா?”
“ஐயா… என்ன சொல்றீங்க…”
“இல்ல எனக்கு எல்லா அதிகாரிகளும் தெரியும்ன்னு சொன்னேன். பழத்துக்கு பணம் எவ்வளவு?”
-&என்று சொல்லியபடி காசு இல்லாத சட்டைப் பையில் விரல்களை துளாவிக் கொண்டிருந்தான்.
“பணமா… உங்கக்கிட்டேயா… வேணாம்.-..” என்று சொன்னபடி சர்பத் கிளாஸ் கழுவிய பழைய தண்ணீரை வெளியே கொட்டுவதுபோல் அந்த போஸ்டரில் சிந்தினான்.
போஸ்டரில் சொக்கலிங்கத்தின் சிரித்த முகம் இப்போது அழுக்கு படிந்து காணப்பட்டது.
தொலைவில் சென்று கொண்டிருந்த சண்முகத்தின் வெள்ளை சட்டை கண்களை பொங்க வைத்தது.

Karai Padinthavan / Short story by Kadayam Balan


About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.