சென்னையில் கடத்தப்பட்ட கடற்படை அதிகாரி எரித்துக் கொலை
1 min readAbducted naval officer burnt to death in Chennai
7.2.2021
சென்னையில் இருந்து கடத்தப்பட்ட கடற்படை அதிகாரி மராட்டிய மாநிலத்தில் எதிர்த்து கொலை செய்யப்பட்டார்.
கடற்படை அதிகாரி
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் மிதிலேஷ் துபே (வயது 27). கடற்படை அதிகாரியான இவர், தமிழகத்தின் கோவையில் உள்ள கடற்படை பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 31ந் தேதி ஜார்க்கண்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, 3 பேர் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரை கடத்தி சென்றுள்ளனர். ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தப்பட்ட அதிகாரியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடத்தப்பட்ட கடற்படை அதிகாரி சூரஜ் குமார் மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
சூரஜ் குமாரின் கை கால்களை கட்டி தீ வைத்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். தீக்காயங்களுடன் அலறித் துடித்த சூரஜ் குமார், அப்பகுதியைச் சேர்ந்த சிலரின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு 90 சதவீதத்திற்கும் அதிகமாக தீக்காயம் இருந்ததால், அங்கிருந்து மும்பை கடற்படை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது.
பணத்திற்காக கடற்படை அதிகாரியை கடத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.