April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

13 வகை சாபங்கள்

1 min read

13 types of Shabam

20.2.2021
இந்து தர்மத்தின்படி 13 வகை சாபங்கள் உள்ளன. முதலில் சாபம் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
விசுவாமித்திரர் சபித்துவிட்டார், துர்வாசர் சபித்து விட்டார் என்றெல்லாம் புராணத்தில் வரும். நல்லவர்கள் மனம் வருந்தி உனக்கு ஒரு தீமை நடக்கட்டும் என்று சொன்னால் அது அப்படியே பலித்து விடும் என்பது நம்பிக்கை அதைத்தான் சாபம் என்று சொல்கிறோம். யார் யாரை சபிக்கலாம்? யார் சாபம் பலிக்கும் என்று சிந்தித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இந்தச் சாபங்களை பதின் மூன்று வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை…

1) பெண் சாபம்,
2) பிரேத சாபம்,
3) பிரம்ம சாபம்,
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம்,
6) கோ சாபம்,
7) பூமி சாபம்,
8 கங்கா சாபம்,
9) விருட்ச சாபம்,
10) தேவ சாபம்
11) ரிஷி சாபம்
12) முனி சாபம்,
13) குலதெய்வ சாபம்
இவற்றைச் சற்று விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

1.பெண் சாபம்

பெண் சாபம் என்பது, ஒரு பெண் மனம் வருந்தி ஆண்களுக்குக் கொடுக்கும் சாபம். பெண்களை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து ஏமாற்றுவன், திருமணம் செய்து கொண்டபின் அவளைக் காப்பாற்றாமல் விடுபவன், உடன்பிறந்த அக்கா தங்கையரை ஆதரிக்காமல் திண்டாட விடுபவன், மனைவியைக் கைவிட்டு ஒழுக்கம் தாழ்பவன் ஆகியோருக்கு பெண் சாபம் வந்து சேரும். பெண் சாபம் ஏற்பட்டால் அவனுடைய வம்சம் விருத்தி அடையாது. அவனுடைய வம்சம் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் வருங்காலத்தில் சிறிது சிறிதாக அழிந்து போகும்.

  1. பிரேத சாபம்.

உயிர் உள்ளவன் மட்டும்தான் சபிக்க முடியுமா? இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், இறந்த உடலைத் தாண்டுவதும், இறந்தவருக்கான இறுதிக் காரியங்களைச் செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை அவருக்கு வேண்டியவர்களைப் பார்க்க அனுமதி மறுப்பதும் ஒருவனுக்கு பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்திற்கு உள்ளாகும் ஒருவனுக்கு ஆயுள் குறையும்.

  1. பிரம்ம சாபம்- பிரம்ம சாபம் என்பது குருக்களால் ஒருவனுக்கு விளைவு. தனக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, அவருக்கு எதிரான காரியங்களைச் செய்வது குருவிடம் கற்ற அரிய வித்தைகளைத் தவறாக அதாவது தீமைக்குப் பயன்படுத்துவது, கற்ற வித்தைகளை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, கல்வி இல்லாமல் போகும்.போய் விடும் கல்விக்கு தடை ஏற்பட்டு விடும்.

4.சர்ப்ப சாபம்.

பாம்புகளை அவசியமில்லாமல் விரட்டிக் அடுத்துக் கொல்வதாலும் பாம்புகள் வாழும் புற்று போன்ற அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், ஏற்படுவதுதான் சர்ப்ப சாபம் என்று அழைக்கப்படுகிறது.
இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு அதன் விளைவாக த் திருமணத் தடை ஏற்படும்.

  1. பித்ரு சாபம்:

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், மேற்கண்ட பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.
பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, பிறந்த குழந்தைகள் இறந்துபோவது புத்திர சோகம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

  1. கோ சாபம்.

பசுவை வதைப்பது, பால் தர மறுத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7.பூமி சாபம்.

ஆத்திரத்தில் பூமியைச் சதா காலால் உதைப்பதும், நல்ல நிலத்தை பாழ்படுத்துவதும், பூமியில் தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் நிலத்தின்மீது ஆசைப்படுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் வாழ்கிற காலத்திலேயே நரகவேதனையைக் கொடுக்கும். செத்த பின்பும் நரகத்தைத் தரும்

8.கங்கா சாபம்.

பலர் அருந்தக்கூடிய பொது நீரை நீர்நிலையைப் பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் வீட்டிலும் விளைநிலங்களில் நீரில்லாமல் கெட்டுப்போகும். எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9.விருட்ச சாபம்.

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தைப் பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

  1. தேவ சாபம்:

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

  1. ரிஷி சாபம்.

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

12.முனி சாபம்:

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13.குலதெய்வ சாபம் .

இது நமது முன்னோர்கள் வழிபட்டு வந்த நம் குல தெய்வத்தை மறப்பது வழிபாடு நடத்தாமல் விட்டுவிடுவது இக்காரணங்களால் ஏற்படும் சாபம்.குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். எவ்வளவு வசதி இருந்தாலும் ஏதாவது ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.