அறிவோம் தேர்தல் வரலாறு(1996): இமாலய வெற்றியுடன் திமுக ஆட்சி
1 min read
Arivom Election History (1996): DMK rule with Himalayan victory
=======
கட்டுரையாளர் மணி ராஜ், திருநெல்வேலி.
5.5.2021
தமிழக தேர்தல் களம், தேர்தலுக்குத் தேர்தல் மாறி மாறி அமைவது போல் முடிவுகளும் ஒரு குறிப்பிட்ட அணிக்கு தாராளமாகவே வெற்றியை அளிக்கும் வகையில் அமைகின்றன.
1991&ல் ஆட்சியைப்பிடித்த ஜெயலலிதா 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி தந்தாலும், கூட்டணி கட்சியான காங்கிரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தார். இதனால் சிறிது காலத்திலேயே அதிமுக&காங்கிரஸ் கூட்டணி உடைந்து விட்டது. சட்டமன்றத்தில் 60 எம்எல்ஏக்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்த காங்கிரசும், ஆளுங்கட்சியான அதிமுகவும் “எதிரிக் கட்சி”களாக கடுமையாக மோதிக்கொண்டன. இதனால் முதல்&அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்ற காங்கிரசை உடைத்து, கோவை செல்வராஜ் உள்ளிட்ட 5 எம்எல்ஏக் களை அதிமுக பக்கம் பேச வைத்தார்.
மறுபக்கம் திமுகவும் பெரும்பிளவை சந்திக்க நேரிட்டது. திமுகவின் முக்கிய தூணாக செயல்பட்டு வந்த வைகோ வெளியேற்றப்பட்டு, மதிமுகவை தொடங்கினார். கிட்டத்தட்ட 8 மாவட்டச்செயலாளர்கள் வரை அவர் பக்கம் சென்றனர். திமுகவுக்கு இருந்த 2 எம்எல்ஏக்களில் துறைமுகம் செல்வராஜும் வைகோ பக்கம் தாவினார்.
இதற்கு மத்தியில் வளர்ப்பு மகனாக சுதாகரனை தத்து எடுத்து ஆடம்பரமாக திருமணம் நடத்தி வைத்தது, பல்வேறு ஊழல் புகார்கள், சொந்தக்கட்சி எம்எல்ஏக்களே அடியாட்களால் தாக்கப்பட்டது போன்ற காரணங்களால் ஜெயலலிதாவுக்கு எதிரான அலை மவுனமாகத் தோன்றிக்கொண்டு இருந்தது.
அப்போதைய கவர்னர் சென்னாரெட்டி&ஜெயலலிதா இடையே வெடித்த மோதல், தலைமைத் தேர்தல் ஆணையர் டிஎன் சேஷன் மீதான தாக்குதல் போன்றவற்றையும் எதிர் அணியில் இருந்த திமுக, தீவிர பிரசாரத்தால் மக்கள் மத்தியில் அழுத்தமாகப்பதிய வைத்தது.
இதுபோன்ற மவுனமான எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் 1996 மே மாதம் தமிழக சட்டமன்றமும், நாடாளுமன்றமும் தேர்தலை சந்தித்தன. தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்பட்ட இறுதிக்கட்டத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறின.
தமாகா உதயம்
காங்கிரசுடன் கூட்டணியைத் தொடர விரும்பினார், ஜெயலலிதா. அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், இதற்கு சாதகமாக இருந்தார். ஆனால் தமிழ்நாடு காங்கிரசில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு காட்டினர். ஆனால் எதிர்ப்பை புறந்தள்ளி விட்டு, அதிமுக&ணீனீஜீ;காங்கிரஸ் கூட்டணி, டெல்லி மேலிட ஆதரவுடன் அமைந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மூப்பனார் தலைமையில் காங்கிரசில் பெரும்பகுதியினர் வெளியேறினர். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி உதயமானது. தேர்தல் நெருக்கத்தில் பிறந்த இக்கட்சி, திமுகவுடன் கூட்டணி சேர்ந்தது. இதற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்தும் குரல் கொடுத்தார்.
வலுவாக களம் இறங்கிய திமுக&தமாகா கூட்டணி, ஜெயலலிதா ஆட்சியில் நடந்த முறைகேடுகளை சுட்டிக்காட்டி, ஊழலுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்தது. அப்போது நேரடியாக தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வராவிட்டாலும், தொலைக்காட்சியில் தோன்றி பேசினார். “டெல்லியை விலைக்கு வாங்கலாம்; தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது” ,
“ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது” என அவர் நறுக்கெனப்பேசிய பஞ்ச் டயலாக்குகள் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
தேர்தல் ஆணையமும் பெரும் மாற்றங்களை வகுத்து நடத்திய இந்தத்தேர்தல் 66.75 சதவீத வாக்குப்பதிவுடன் அமைதியாக நடந்து முடிந்து, அதிரடியான தீர்ப்பையும் அளித்தது.
திமுக&தமாகா கூட்டணி இமாலய வெற்றியைப்பெற்றது. அதிமுக&காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.
திமுக 173, தமாகா 39, இந்திய கம்யூ 8, பார்வர்டு பிளாக் 1.
திமுக அணி வாக்குகள் 1,46,00,748 (53.77 சதவீதம்)
அதிமுக 4, காங்கிரஸ் 0
அதிமுக அணி வாக்குகள் 73,54,723 (27.08 சதவீதம்)
பாமக 4, ஜனதாதளம் 1, ஜனதா (டாக்டர் கிருஷ்ணசாமி) 1, பாஜக 1, சுயேச்சை 1,
மதிமுக 0.
சட்டமன்றம் போலவே நாடாளுமன்றத்துக்கும் திமுக&தமாகா கூட்டணி 100 சதவீத வெற்றியைப்பெற்றது.
தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் (திமுக 17, தமாகா 20, இந்திய கம்யூ 2) இதே கூட்டணி வென்றது.
1991&ல் அடைந்த தோல்வியில் இருந்து கம்பீரமாக மீண்டெழுந்த திமுகழகம், கருணாநிதி தலைமையில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. மே 13&ந் தேதி கருணாநிதி முதல்&அமைச்சராகப் பதவி ஏற்றார்.
(2001 தேர்தல் நிலவரத்தை அடுத்து காண்போம்).
கருணாநிதி
(13-5-1996 முதல் 13-5-2001 வரை).