April 20, 2024

Seithi Saral

Tamil News Channel

அறிவோம் தேர்தல் வரலாறு / 2001: கூட்டணி பலத்தில் வென்ற ஜெயலலிதா-/ மணிராஜ், திருநெல்வேலி

1 min read

Arivom Election History / 2001: Jayalalithaa won in coalition strength- / Maniraj, Tirunelveli

1967&ல் திமுகவும், 1977&ல் அதிமுகவும் ஆட்சியைப்பிடித்தாலும், இவ்விருகட்சிகளுமே முழுபதவிக்காலமும் (5 ஆண்டு) பதவியில் இருந்ததில்லை என்ற நிலையை, 1991&96 கால கட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மாற்றினார். அடுத்து ஆட்சியைப்பிடித்த திமுக தலைவர் மு.கருணாநிதியும் 1996 முதல் 2001 வரை முழு பதவிக்காலத்திலும் ஆட்சியில் இருந்தார்.
1996&க்கும், 2001&க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழகம் 3 பெரிய தேர்தல்களை சந்தித்தது. முதலாவதாக, 1996&ல் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி உள்ளாட்சித்தேர்தலை கருணாநிதி நடத்தினார். இதில் திமுகழகம் அமோக வெற்றி பெற்றது. அன்று தமிழகத்தில் இருந்த 6 மாநகராட்சிகள், அனைத்து மாவட்ட பஞ்சாயத்துகள், பெரும்பாலான ஒன்றியங்கள், நகராட்சிகள், பேருராட்சிகள், கிராம பஞ்சாயத்துகள் என திமுக கோலோச்சியது.
அடுத்து, மத்தியில் தேவேகவுடா, ஐகே குஜ்ரால் ஆட்சிகள் கவிழ்ந்ததால் 1998&ல் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பெரும் திருப்பமாக தமிழகத்தில் அதிமுக&பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
எனினும், மத்தியில் வாஜ்பாயின் ஆட்சி, அதிமுகவால் கவிழ்க்கப்பட்டதால், 1999&ல் நாடாளுமன்றத்துக்கு மீண்டும் தேர்தல் நடந்தது. இந்தத்தேர்தலில் அணிகள் மாறின. திமுகவுடன் பாஜகவும், அதிமுகவுடன் காங்கிரசும் கூட்டு சேர்ந்தன. தமிழ் மாநில காங்கிரஸ் தனித்து விடப்பட்டது. வெற்றி, திமுக&பாஜக கூட்டணிக்கு கிடைத்தது.
அணிகளின் தலைகீழ் மாற்றம் இதே கூட்டணி, அடுத்து 2001&ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத்தேர்தலிலும் தொடர்ந்தது. திமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, எம்ஜிஆர் அதிமுக (திருநாவுக்கரசு), எம்ஜிஆர் கழகம் (ஆர்எம் வீரப்பன்), விடுதலைச்சிறுத்தைகள், தொண்டர் காங்கிரஸ் (குமரி அனந்தன்), தமாகாவில் இருந்து ப.சிதம்பரம் பிரிந்து தொடங்கிய காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை முதலிய கட்சிகள் இடம் பெற்றன.
எண்ணிக்கையில் தான் இந்தக்கூட்டணி பெரிதாக காட்சியளித்ததே தவிர, எதிரில் அதிமுக அமைத்த கூட்டணி வலுவாக அமைந்தது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா, பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக், தேசிய லீக் முதலான கட்சிகள் இடம் பெற்றன.
“மதவாத பாஜகவுடன் திமுக அணி சேர்ந்தது தவறு” எனக்கூறி, இக்கட்சிகள் அதிமுகவுடன் அணி சேர்ந்தன.
இந்தத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னதாக, டான்சி நிலபேர ஊழல் வழக்கிலும், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கிலும், ஜெயலலிதா முறையே, 2 ஆண்டு, 1 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று அப்பீல் செய்து இருந்தார்.
4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு இந்த வழக்குகள் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும், சில சட்டநிபுணர்கள் அளித்த ஆலோசனையின்படி அவர், 4 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். அதாவது, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி, ஆண்டிப்பட்டி ஆகிய 4 தொகுதிகளுக்கு வேட்பு மனு அளித்தார். ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக்கூடாது என்ற விதியின்படி, 4 தொகுதிகளிலும் அவருடைய வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
இதுபற்றி கருத்து தெரிவித்த சட்ட நிபுணர்கள் சிலர், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு விட்டது என்ற பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர் 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் தாக்கல் செய்து நிராகரிப்புக்கு ஆளாகிக் கொண்டார் என்று தெரிவித்தனர்.

இதையே ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்திற்கும் பயன்படுத்திக்கொண்டார். “வேட்பு மனுக்களை நிராகரித்ததன் மூலம் தேர்தலில் போட்டியிட விடாமல் திமுக அரசு என்னை தடுத்து விட்டது” என்று தமிழகம் முழுக்க அவர் பிரசாரம் மேற்கொண்டார். அவர் அமைத்த கூட்டணியும் அவருக்கு பலம் சேர்த்தது.
எதிர்முகாமில், திமுக அமைத்த கூட்டணி வலுவற்று இருந்ததுடன், பாஜகவுடன் சேர்ந்ததால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி, சிறுபான்மையினர் மத்தியிலும் கசமாக ஆதரவை இழந்தது.
இவ்வாறான சூழ்நிலையில், 10&5&2001&ல் தேர்தல் நடைபெற்றது. 59.07 சதவீத வாக்குகள் பதிவாயின. இத்தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியை ஈட்டியது.
அதிமுக 132, தமாகா 23, காங்கிரஸ் 7, பாமக 20, மார்க்சிஸ்ட் கம்யூ 6, இந்திய கம்யூனிஸ்டு 5, பார்வர்டு பிளாக் 1, சுயே.2.
அதிமுக அணி வாக்குகள் 1,40,43,980 (50.09 சதவீதம்).
திமுக 31, பாஜக 4, எம்ஜிஆர் அதிமுக 2, காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை 1.
திமுக அணி வாக்குகள் 1,08,41,157 (38.67)
தேர்தலில் போட்டியிடாதநிலையிலும் கட்சிக்கு கிடைத்த வெற்றியையடுத்து, ஜெயலலிதா எம்எல்ஏக்களால் முதல்&அமைச்சராகத் தேர்வு பெற்று, 14&5&2001 அன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
(2006 தேர்தல் நிலவரத்தை அடுத்து காணலாம்).

ஜெயலலிதா
(14&5&2001 முதல் 21&9&2001 வரை;
2&3&2002 முதல் 12&5&2006 வரை)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.