April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

அறிவோம் தேர்தல் வரலாறு/ 2006: ஐந்தாவதுமுறையாக கருணாநிதி ஆட்சி/ மணிராஜ், திருநெல்வேலி

1 min read

Arivom Election History / 2006: Karunanidhi’s rule for the fifth time / Maniraj, Tirunelveli

7/4/2021

2001-06க்கு இடைப்பட்ட காலத்தில் தமிழக அரசியல் களம் படுசூடாக இருந்தது. ஆட்சிக்கு வந்ததுமே, திமுக தலைவர் கருணாநிதியை கைது செய்ய உத்தரவிட்டார், ஜெயலலிதா. கருணாநிதி கைது, தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் நீதிமன்றமே சொந்த ஜாமீனில் கருணாநிதியை விடுவித்தது.
அரசியலிலும், கலையுலகிலும் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசன், 21-7-2001-ல் மரணம் அடைந்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் விடுதலைப்புலிகள் ஆதரவு நிலையை சுட்டிக்காட்டி, அவரை பொடா சட்டத்தில் கைது செய்தார், ஜெயலலிதா. (இந்த வழக்கில் வைகோ விசாரணைக் கைதியாகவே 500 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது).
தமிழ்நாடு முழுவதும் மதுபான விற்பனையையும், மணல் விற்பனையையும் அரசே ஏற்றது. அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டம் நடத்தினார்கள். இதற்காக 1.75 லட்சம் ஊழியர்களை ஒரே நாளில் நீக்கினார்,

ஜெயலலிதா. அதோடு, கிராமக் கோவில்களில் ஆடுகோழிகளை பலியிட தடை, மதமாற்றத்தடைச்சட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்தார். இதனால் அரசுக்கு எதிரான அதிருப்தி அதிகரித்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் 2004-ல் வந்தது.
இந்தத் தேர்தலில் பாரதீய ஜனதாவை கூட்டணியில் இருந்து வெளியேற்றிய திமுக, காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. அதில், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ முதலான கட்சிகள் இடம் பெற்றன.
மத்தியில் ஆண்ட பாஜகவுடன் தமிழகத்தை ஆண்ட அதிமுக கூட்டு சேர்ந்தது.
‘நாற்பதும் நமதே’ தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம்,
திமுக தலைவர் கருணாநிதி, “நாற்பதும் நமதே” என உறுதி அளித்தார். அவரது வாக்குப்படியே, தமிழகம்-புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும்
திமுக-காங்கிரஸ் கூட்டணி வென்றது.
இந்தத்தேர்தலின் போது பாமகவுடன் நடிகர் ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட உரசல் காரணமாக அவர், பாமக போட்டியிடும் தொகுதிகளில் இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் என்று ரசிகர்களுக்கு கட்டளையிட்டு இருந்தார். ஆனால் அதிமுக- பாஜக கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை.
தேர்தலில் கிடைத்த படுதோல்வியையடுத்து, முதல்&அமைச்சர் ஜெயலலிதா முந்திய தன் சில முடிவுகளில் இருந்து பின்வாங்கினார். அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட்டதுடன், ஆடு-கோழி பலியிட தடை, மதமாற்றத்தடைச்சட்டம் போன்றவற்றில் இருந்து பின்வாங்கினார்.
வைகோ, சரத்குமார் தாவல் அடுத்த 2 ஆண்டுகளில் சட்டமன்றம் பொதுத்தேர்தலை சந்தித்தது. தேர்தல்
நெருக்கத்தில் அணிகள் எதிர்பாராதவிதமாக மாறி அமைந்தன.

திமுக அணியில் இருந்த வைகோ, ஜெயலலிதா பக்கம் தாவினார். பொடா சட்டத்தில் அவரை கைது செய்தவர் பக்கமே அவர் தாவியது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அடுத்த திருப்பமாக, நடிகர் சரத்குமார் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். அதிமுக அணியின் வெற்றிக்காக வைகோவும், சரத்குமாரும் பிரசார பீரங்கிகளாக தமிழகத்தை வலம் வந்தனர். விடுதலைச்சிறுத்தைகள், காங்கிரஸ் சார்பு தொழிற்சங்கமான ஐஎன்டியூசி, தேசிய லீக் ஆகிய கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றன.
திமுகழக அணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் சேர்ந்து இருந்தன. கூட்டணி கட்சிகள் அதிக இடங்கள் கேட்டதால் திமுகழகம் போட்டியிட்ட இடங்களை 126 ஆக குறைத்துக்கொண்டது.
அதன் பிரதான எதிரியான அதிமுகவோ 182 இடங்களில் போட்டியிட்டது.
2005&ல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை திருப்பரங்குன்றத்தில் தொடங்கிய நடிகர் விஜயகாந்தும் 3-வது அணியாக களம் கண்டார். 234
தொகுதிகளிலும் அவர் வேட்பாளர்களை நிறுத்தினார்.
8-5-2006 அன்று வாக்குப்பதிவு நடந்தது. 70.70 சதவீத வாக்குகள் பதிவாயின.
(முந்திய 2001 தேர்தலை விட இது 11 சதவீதம் அதிகமாகும்).
யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தலுக்கு முந்திய, பிந்திய கருத்துக்கணிப்புகள் சொன்னது போலவே திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் கிடைக்கவில்லை. 126 இடங்களில் போட்டியிட்ட திமுக, 96 இடங்களை வென்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. கட்சிகளின் வெற்றி நிலவரம்:
திமுக 96, காங்கிரஸ் 34, பாமக 18, மார்க்சிஸ்ட் 9, இந்திய கம்யூ 6.
திமுக அணி வாக்குகள் 1,47,62,647 (44.75 சதவீதம்)
அதிமுக 61, மதிமுக 6, விடுதலைச்சிறுத்தைகள் 2.
அதிமுக அணி வாக்குகள் 1,31,66,445 (39.91 சதவீதம்). தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும், கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன்
முதல்-அமைச்சராக கருணாநிதி பதவி ஏற்றார். அவர் தலைமையில் அமைச்சரவை அமைந்தது இது 5-வது முறையாகும். தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போலவே, பதவி ஏற்பு மேடையிலேயே ரூ.7
ஆயிரம் கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி, ரேஷன் கடைகளில் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி முதலான திட்டங்களை அமல்படுத்தும் உத்தரவில் கருணாநிதி கையெழுத்திட்டார். ஏழைக்குடும்பங்களுக்கு இலவச கலர் டிவி, இலவச
சமையல் எரிவாயு இணைப்புடன் அடுப்பு ஆகியவற்றையும் சொன்னது போலவே
வழங்கினார்.
அவரது ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஜெயலலிதா அடிக்கடி விமர்சித்தார். அதை அவர் பொருட்படுத்தாமல் கூட்டணிபொருட்படுத்தாமல் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் முழுபதவிக்காலமும் பதவியில் இருந்தார்.
(அடுத்து 2011 தேர்தல் நிலவரத்தை காண்போம்).
—-======
கருணாநிதி
(13-5-2006 முதல் 15-5-2011 வரை)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.