April 24, 2024

Seithi Saral

Tamil News Channel

வேலைப்பளு/ சிறுகதை/ கடையம் பாலன்

1 min read

Veelai pazhu/ short story By Kadayam Balan

மகாலட்சுமி கதைவைத் திறந்ததும் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போன்று முகத்தில் பிரகாசம். மகள் வாணி சூட்கேசோடு வந்து நின்றிருந்தாள். “என்னம்மா மாப்பிள்ளை வரலியா?”
“இல்லம்மா… அவருக்கு ஒரே வேல. எனக்கு ஒன்ன பாக்கணுமோன்னு தோணிச்சி… வந்துட்டேன்”
மகளுக்காக பரபரப்பானாள். பெரிய பட்டிலையே போட்டு அதை வாங்கி வரும்படி வயதான கணவருக்கு கட்டளை பிறப்பித்தாள். எப்போதும் சண்டித்தனம் பிடிக்கும் அந்த மூத்த குடிமகன் லட்சுமணன் , இன்று இளைஞனாகி பாய்ந்து சென்றார்.
மகளுக்கு பிடித்தமான பொரியரிசி மாவு உப்புமா செய்து கொடுத்தாள். மதியம் சாப்பாட்டுக்கு முருக்கைக்காய் சாம்பார், பீட்ரூட் பொறியல், காலிபிளவர் பக்கோடா பால்பாயாசனம் செய்து கொடுத்ததோடு அல்லாமல் மகள் ருசித்து ருசித்து சாப்பிடுவதை பார்த்து ஆனந்தம் அடைந்தாள். மதிய சாப்பாட்டுக்குப் பிறகு தன் தோழியரை பார்த்து விட்டு வருதவதாக கூறி பறந்து சென்றாள்.
“என்னம்மா வந்தா நம்மக்கூட பேசிக்கிட்டு இருப்பான்னு பாத்தா பிரண்ட பாத்துட்டு வர்றேன்று ஓடுறாளே…”
என்னங்கள் கல்யாணம் முடிஞ்சி எட்டுமாசம் ஆகுது. வரும்போ தெல்லாம் மாப்பிள்ளையோட வாறா. வெளியே எங்கேயும் போகமுடியல. இப்பத்தானே தனியா வந்திருக்கா. போயிட்டுத்தான் வரட்டுமே.
அன்று இரவு ஏழு மணிக்குத்தான் வாணி திரும்பி வந்தாள். இரவு ஸ்பெஷலாக செய்து வைத்திருந்த உணவையும் ருசித்து சாப்பிட்டாள். அம்மா மகாலட்சுமியின் முகம் வாடி இருப்பதை பார்த்தாள்.
என்னம்மா ஒரு மாதிரி இருக்க..
என்னமோ தெரிய ஒரே அலுப்பா இருக்கு… எல்லா சரியாயிடும். சரி நல்லா படுத்து தூங்கு.
அப்பா மகளுக்கு தேவையான சமுக்காளம், தலையணை எடுத்து கொண்டு வந்து கொடுத்தார்.
காலையில் பொழுது விடிந்தது.
“அம்மா… காபி” என்று கண்களை திறக்காமலே அன்பு கட்டளையிட்டாள் வாணி.
பதிலுக்கு சத்தம் ஏதும் வரவில்லை. மீண்டும் அம்மா காபி என்று கொஞ்சம் சத்தமாக கேட்டாள்.
பதிலுக்கு மகாலட்சுமியின் முக்கலும் முனகலும்தான் வந்தது. இத னால் படபடப்புன் எழுந்த வாணி, அம்மாவிடம் சென்று “என்னம்மா செய்யுது-?” என்றுக் கேட்டாள்.
என்னமோ தெரியல… ஒரே மேல் வலியாக இருக்கு… உன்னை சரியா கவனிக்க முடியலியே…”
பரவாயில்லம்மா… நானே சமைக் கிறேன் என்று அன்றைய வேலை முழுவதையும் வாணியே செய்தாள்.
மறுநாள் காலையில் மகாலட்சுமி, தன் மகளை அழைத்தான்.
அம்மா வாணி நான் இன்னிக்கு பக்கத்து ஊர்ல இருக்கிற முருகன் கோவிலுக்கு போயிட்டு வர்றேன். நீ நம்ம அப்பாவுக்கு கொஞ்சம் சமைச்சி கொடுத்துடு. நான் வர்றதுக்கு ராத்தியாயிடும்.
அம்மாவின் வேண்டுகோளை நிறைவேற்றினாள்.
அதற்கு அடுத்த நாள்…
வாணி.. எங்க அக்காவுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லயாம். உங்க பெரியம்மா வந்துட்டு போகச் சொன்னாள். போயிட்டு வர்றேம்மா. கொஞ்சம் அப்பாவ பாத்துக்கோ..
மூன்று நாட்களும் வாணிக்கு கடுமையாக வேலை. அப்பாவுக்கு வென்னீர் போடணும், துணிகளை எல்லாம் துவைக்கணும், வீட்டை சுத்தம் பண்ணனும், கடைக்குப் போகணும்.. அப்பப்பா அவள் இதுவரை இப்படி செஞ்சதே இல்லை.
நான்காம் நாள் அம்மாவின் உத்தரவு வரும்முன் காலையிலே எழுந்து குளித்து கணவர் வீட்டுக்கு புறப்பட தயாராக இருந்தாள் வாணி.
என்னம்மா பத்துநாளாவது இருந்துட்டு போகணும்ன்னு சொன்னே. திடீன்னு கிளம்பிட்டே..
இல்லம்மா அவருக்கு நான் இல்லாம இருக்க முடியலியாம். அதோட எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..
என்று சொன்னவள் காலை டிபனுக்கு கூட எதிர்பார்க்காமல் புறப்பட்டு விட்டாள்.
என்ன இப்படி திடுதிப்புன்னு போயிடாளே இப்படி லட்சுமணன் வருத்தப்பட்டாலும், மகாலட்சுமியின் முகத்தில் இப்போது மகிழ்ச்சி அதிகரித்தது.
என்னடி சிரிக்கிற…
ஆமாங்க நம்ம சம்மந்திக்கு உடம்புக்கு கொஞ்சம் சரியில்லயாம். அதோடு நம்ம வாணியோட நாத்தனாரு அங்க வந்திருக்கா. அங்க இருந்தா வேலைப்பளு இருக்கும்ன்னு நினைச்சி இங்கே வந்துட்டா.. இது தப்புல்ல… அதான் அவள கிளப்ப நான் நாடகம் ஆடினேன். பொட்டப்புள்ள வீட்டு வேலைக்கு சுணங்கக்கூடாங்க..
இன்னொரு தடவை மகளையும் அவளோட மாமியாரையும் நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு ஒரு மாதம் தங்க வைச்சி அனுப்புவோம்.
கணவனின் முகத்திலும் இப்போது மகிழ்ச்சி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.