April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

கொம்புத் தேன்(சிறுகதை)/ கடையம் பாலன்

1 min read

kombudeen/ short story by Kadayam Balan

அந்த நகரத்தில் உருவாகியுள்ள வர்த்தக வளாகம் மக்கள் மத்தியில் பிரபலம். அங்கு எல்லா பொருட்களையும் வாங்கிக் கொள்ள லாம். விலையும் பெருநகரங்களில் விற்கப்படும் விலைதான். இந்த வணிக வளாகம் வந்தபின்னர் மற்ற சிறு கடைகளுக்கு கொஞ்சம் பாதிப்புதான். ஆனாலும் கொள்ளை லாபம் அடைய விரும்பவில்லை அருண்குமார். தான் வாழவேண்டும் அதே நேரத்தில் எல்லோரும் வாழவேண்டும் என்பதை குறிக் கோளாக கொண்டவன் அவன்.


ஒரு காலத்தில் சாதாரண பெட்டிக் கடைத்தான் வைத்திருந்தான். அங்கு விற்கப்படும் வெற்றிலைப் பாக்குகூட மற்றக் கடைகளில் இருந்து கணிசமாக இருக்கும். அதனுடையே டீக்கடையும் குளிர் பான கடையும் திறந்தான். பின்னர் மளிகை கடை ஆரம்பித்தான்.
அப்போதுதான் பெருநகர வியாபாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் கடையை சுற்றியுள்ள காலி இடங்களை விலைக்கு வாங்கினான். அவனின் கடைகள் புதிதுபுதிதாக உருவாக உருவாக ஊரும் விரிவடைந்தது. இன்று ஊருக்குள் அவனது வணிக வளாகம் பரந்து விரிவடைந்து காணப்படுகிறது.
அவனின் தொழில் திறமையைக் கண்டு பத்திரிகையாளர்கள் பேட்டி காணவந்தனர். அருண்குமார் அங்கே இல்லை.
“அண்ணாச்சி எப்போ வருவாரு?”
“சரக்கை சாம்பிள் பாக்க போயிருக்கான். செத்த நேரம் உட்காருங்க. வந்துருவான்”
“பெரியவரே நீங்க யாரு?”
“நம்ம மவன்தான் அருண்குமார்.’
உங்க மகனைப்பத்தி கொஞ்சம் சொலுங்களேன்”
“ஐயா நாங்க எங்க பூட்டன் காலத்திலே இருந்தே ஏழைங்க தான். எம்மவனும் கருப்பட்டித் தண்ணிய குடிச்சித்தான் வளந்தான். நானும் எம்பொஞ் சாதியும் வேலை பார்த்து கஞ்சியத்தான் குடிக்க முடிஞ்சது. நோவுநொடி வந்தா கடனத்தான் வாங்கணும். இவன் தலை யெடுத்த பிறகு நிம்மதியாக கஞ்சி குடிச்சோம். ராப்பகலா தூங்காம கொள்ளாம உழைச்சான். இப்ப நல்ல நிலமையில இருக்கோம். மூணு தலைமுறை பட்ட கஷ்டத்துக்கு இன்னிக்கு கடவுள் நல்லபடியாக படியளக்கிறாரு.”
அந்த நேரத்தில் ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து நாலுமுழ வேடியும் வெள்ளை சட்டையும் போட்டபடி அருண்குமார் இறங்கி வந்தான். அவன் ஒரு காலை தென்னித்தென்னி நடந்தான். இடது கை சற்று வளந்து தனது இயலாமையை வெளிப்படுத்தியது.
பத்திரிகையாளர்கள் அவனை சூழ்ந்து உட்கார்ந்து கொள்ள… அருண்குமார் தனது நிறுவனங் கள் பற்றியும் தன்னுடைய உழைப்புக்கு உறுதுணையா இருக்கும் தொழிலாளர்கள் பற்றியும் பெருமையாக கூறினான்.
தொழில் வளத்தைப்பற்றி எல்லா விசயங்களையும் கேட்டனர் செய்தியாளர்கள்.
“அண்ணாச்சி நாங்க கேட்கிறோம்ன்னு தப்பா நினைக்காதீங்க… உங்களுக்கு ஒரு கையும் காலும் சரியா இல்லாத நிலையிலேயே இப்படி முன்னேறி இருக்கீங்கன்னா… எந்தக்குறையும் இல்லாம இருந்தீங்கன்னா… இதைவிட உங்க முன்னேற்றம் பல மடங்கு இருந்திருக்குமே?” என்றார் ஒரு பத்திரிகையாளர்.
“அப்படி இல்லை.. எனக்கு கை, கால் நல்லபடியா இருந்திருந்தா நான் இன்னும் கல்லுடைக்கும் தொழிலாளியாத்தான் இருந்திருப்பேன்” என்றான்.
“என்ன அண்ணாச்சி?” என்று தங்களது ஆச்சரியத்தை புருவத்தை கேள்விக்குறியாக மாற்றி காட்டினார்கள்.
“ஆமா சார்… எங்க அப்பாவால என்ன எட்டாங்கிளாசுக்கு மேல படிக்க வைக்க முடியல. அதனால் என்ன கல்குவாரியில வேலைக்கு சேத்துவிட்டாரு. அங்க பெரிய மெஷின் வாங்கினாங்க. அதில பெரிய பாறங்கல்லை தூக்கிப்போடும்போது அது எம்மேல விழுந்து இப்படி நான் ஊனமாகிவிட்டடேன். அவங்க நஷ்ட ஈடு கொஞ்சம் கொடுத்தாங்க. அந்தப் பணம் வைத்திய செலவுக்குகூட பத்தல.. அதுக்கப்புறம் எனக்கு அங்க வேலையில்லை. அதனால சின்னதா பெட்டிக்கடை வச்சி… இப்போ இவ்வளவு தூரத்துக்கு முன்னேறி இருக்கேன்.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா என்பார்கள் நான் ஆசைப்பட்டேன்… முயன்றேன். இன்று ருசிக்கிறேன். பிறரையும் ருசிக்க வைக்கிறேன்.”
&ஆம் கடவுள் ஒரு கதவை மூடினால் பல கதவுகளை நமக்காக திறக்க காத்திருக்கிறார்.. ஆனால் நாம் விடா முயற்சியையும் உழைப்பையும் கடவுளாக மதித்தால் அவர் அத்தனை கதவுகளையும் திறந்துவிடுவார். அப்படித்தான் அருண்குமார் முன்னேற்றத்திற்கு கடவுள் உதவினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.