June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் உத்தரவு

1 min read

Prime Minister orders increase in oxygen production

16.4.2021

இந்தியாவில் அடிக்கும் 2வது கொரோனா அலையில் அதிகம் பேர் பாதிக்கப்படும் நிலையில், நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனவும், ஆக்சிஜன் நிரப்பும் ஆலைகள் 24 மணி நேரமும் செயல்படவும் பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், டெல்லி, சண்டிகார், கர்நாடகம், கேரளா, தமிழகம், பஞ்சாப், அரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கொரோனா அதிகளவில் பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் விநியோகம், அடுத்த 15 நாட்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பது குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார். மாவட்ட வாரியாக நிலவும் சூழ்நிலை குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

ஆக்சிஜன் தேவை குறித்து மத்திய மாநில அரசுகள் தொடர்பில் உள்ளன. ஏப்ரல் 20, 25, 30 ஆகிய தேதிகளில் தேவைப்படும் அளவு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேற்கண்ட மாநிலங்களுக்கு மேற்கண்ட தேதிகளில், 4,880 மெட்ரிக் டன், 5,619 மெட்ரிக் டன், 6,593 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நாட்டில், ஆக்சிஜன் தேவை குறித்தும், இந்தியாவின் உற்பத்தி திறன் குறித்தும் பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது, பிரதமர், ஒவ்வொரு ஆலையிலும் எவ்வளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியுமோ அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய வேண்டும். இரும்பு தொழிற்சாலைகளில் அதிகம் உள்ள ஆக்சிஜனை மருத்துவ பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆக்சிஜன் கொண்டு செல்லும் டேங்கர்கள், நாடு முழுவதும் தடையின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளை கேட்டு கொண்டார். டேங்கர்கள் நாடு முழுவதும் எளிதாக செல்வதற்கு வசதியாக, மாநிலங்களுக்கு இடையே செல்வதற்கு பதிவு செய்ய வேண்டும் என்ற விதியில் இருந்து விலக்க அளிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

தேவையான அளவு ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கு கிடைக்க ஏதுவாக, டாங்கர்களை 24 மணி நேரமும் இயக்கவும், அதற்கு ஏற்ப டிரைவர்களை பணியில் அமர்த்தவும் மாநில அரசுகள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளன. ஆக்சிஜன் நிரப்பும் தொழிற்சாலைகளும் 24 மணி நேரமும் செய்ல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. டேங்கர்கள் பற்றாக்குறையை போக்க, நைட்ரஜன் டேங்கர்களை, ஆக்சிஜன் டேங்கர்களாக மாற்றவும் அனுமதி அளிக்கப்படுகிறது. மருத்துவ தர ஆக்சிஜன் இறக்குமதி குறித்தும் பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *