April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

பழம்/சிறுகதை/ தபசுகுமார்

1 min read

Palam/Short story by thabasu kumar

கண்ணாயிரம் எதையும் சரியாக செய்யவில்லை என்று வீட்டில் ஏகப்பட்ட புகார். அவருக்கு வருத்தமாகத்தான் இருந்தது. எப்படியும் நல்ல பெயர் வாங்கிடவேண்டும் என்றுநினைத்தார்.
அன்று அவர் மனைவி ஆப்பிள்வாங்க புறப்பட்டார். கண்ணாயிரம், என்ன ஆப்பிள்தானே. நான்வாங்கிட்டுவரமாட்டேனா, என்றார்.
அதற்கு அவரது மனைவி, “உங்களுக்கு பார்த்துவாங்க தெரியாது. சொதப்பிடுவிங்க. நானே வாங்கிட்டு வர்ரேன்” என்றுசொன்னார்.
கண்ணாயிரத்துக்கு தன்மானம் ஏய் கண்ணாயிரம் விடாதே என்றது. அவர், “ஆப்பிள் வாங்கிறது பெரிய விசயமா, காசுகொடு”, என்றார்.
“ஏங்க குறைத்து நல்லபழமாக வாங்கிட்டு வாங்க” என்று பணம் கொடுத்து அனுப்பினார். கண்ணாயிரம் கையில் பையுடன் ஆப்பிள் வாங்க புறப்பட்டார். எதிரே நாய் குறுக்கே ஓடியது. இது நல்ல சகுனமா, தெரியலையே, முன்வைத்த காலை பின்வைக்க கூடாது கண்ணாயிரம் என்றது மனசாட்சி. அதுசரிதான் என்று சொல்லியபடி சைக்கிளை எடுத்துக் கொண்டுபுறப்பட்டார்.
அவர் மனைவி திட்டினார் “பக்கதில் இருக்கிற கடைக்கு நடந்தே போயிட்டுவரலாமே. வயதான காலத்துல வாக்கிங் போயிட்டு வந்த மாதிரி இருக்கும்” என்றார்.
கண்ணாயிரம் அவர் முடிவில் உறுதியாக இருந்தார்.
சைக்கிளில் போவதும் நல்ல உடற்பயிற்சிதான் என்று வாதாடினார்.
“சரி, பார்த்து நல்லதா வாங்கிட்டுவாங்க” என்றுஅவரது மனைவி வேண்டா வெறுப்பாக அனுப்பி வைத்தார்.
கண்ணாயிரம் பெல் அடித்துக் கொண்டு சைக்கிளில் பறந்தார். மார்க்கெட் வந்ததும் ரோட்டின் ஓரத்தில் சைக்கிளை நிறுத்தினார். மார்க்கெட்டுக்குள் சென்று சுற்றிப்பார்த்தார். ஆப்பிள் குவிக்கப்பட்ட கடையில் கேட்டார்.
கிலோ 200 ரூபாய் என்றார்,கடைக்காரர். உடனேகண்ணாயிரம் கிலோ, எனக்கு வேண்டாம் ஆப்பிள் மட்டும் போதும் என்று ஜோக் அடித்தார்.
யாரும்சிரிக்கவில்லை. தன்னைத்தானே சிரித்துகொண்டார்.
விலையை குறைத்துவாங்க வேண்டும் என்றுஅவர் மனைவி சொன்னது நினைவுக்கு வந்தது. ஆமா இந்த குறைத்து என்பது குறைத்தா அல்லது குரைத்தா என்று சந்தேகம்வந்தது. இதைபோய்திருப்பி கேட்கவா முடியும், அதிகம் குரைத்து விலை குறைத்துவாங்க வேண்டும் என்று முடிவு செய்தார். முயற்சி செய்தார் பலன் இல்லை.
மார்க்கெட்டைவிட்டுவெளியே வந்தார். பாட்டியம்மா ஆப்பிள் விற்றுக்கொண்டிருந்தார்

பாட்டியம்மா ஆப்பிள் என்ன விலை என்று கேட்டார் கண்ணாயிரம். ஆப்பிளா கிலோ 200 ரூபா என்றார். பாட்டி ஆப்பிளா கிலோ 200 ரூபா என்றார் பாட்டி. கண்ணாயிரம் தனது வாத திறமையை காட்டதொடங்கினார். என்ன பாட்டி ஆப்பிளுக்கு விலை சொல்கிறாயா, இல்லை ஆப்பிள் தோட்டத்துக்கு விலைசொல்கிறாயா.
விலை ரொம்ப அதிகமாக இருக்கே, விலையை குறைக்க முடியுமா என்றுகேட்டார்.
பாட்டிமுடியாதுஎன்றுவிட்டார். கண்ணாயிரம் மெல்ல, பாட்டி நான்வேற இடத்தில் வாங்கிக்கொள்கிறேன் என்று புறப்பட தயாரானான். பாட்டி தனது வியாபார யுக்த்தியை பயன்படுத்த தொடங்கினார்.
ஏம்பா, ஏன் கோபப்படுற பத்து ரூபா குறைச்சு வாங்கிட்டு போ என்றார்.
கண்ணாயிரத்துக்கு மகிழ்ச்சி. மேலும் விலை குறைச்சு வாங்கணுமுன்னு நினைத்தார்.
பாட்டி 150 ரூபாய்க்கு தாங்க. இல்லை என்றால் வேறு இடத்தில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னார் கண்ணாயிரம்.
உடனே பாட்டி, ரொம்ப குறைக்காதே கட்டுபடியாகாது என்றுசொன்னார்.
கண்ணாயிரம், அப்டினாகிளம்புரேன் என்றார்.
பாட்டிவிடவில்லை. கோபப்படாதே லாபத்தை கழிச்சு தரேன். வாங்கிட்டு போஎன்றார்.
கண்ணாயிரத்துக்கோ சந்தோசம்.
சரிஎன்றுஏற்றுக்கொண்டார்

ஆப்பிள்பழங்களை பாட்டி பார்த்து எடுத்தார். பாட்டி நல்ல பழங்களா எடுங்க, அடிபட்ட பழங்கள் வேண்டாம் எனறார் கண்ணாயிரம்.
பாட்டி அதை கேட்டது போல் தெரியவில்லை. கண்ணாயிரம், பாட்டி, நீங்க பழம் எடுக்காதீங்க, எல்லாம் அடிபட்டது போலிருக்குது. நான் நல்ல ஆப்பிள் பழங்களை எடுத்துதாரேன் என்றார். மஞ்சள் நிறத்தில் இருந்த சின்ன ஆப்பிள் பழங்களை எடுத்துகொடுத்தார். பாட்டி அவைகளை வாங்கி எடை போட்டார். கண்ணாயிரத்துக்கு வாயெல்லாம் பல். குறைந்த விலையில் நல்ல பழங்களா வாங்கிட்டோம் என்று நினைத்தார். பாட்டி நல்லா எடை போட்டிங்களா என்று கேட்டார்.
பாட்டி முறைத்தார்.
சரி பாட்டி கோப்படாதீங்க பழங்களை கொடுங்க என்றார். ஒரு பையில் ஆப்பிள் பழங்களை வாங்கிக்கொண்டு பாட்டியிடம் 150 ரூபாயைகொடுத்தார். அப்போது பக்கத்து வீட்டு பரமசிவம் அங்கே வந்தார்.
என்ன, கண்ணாயிரம், குறைந்தவிலையிலே ஆப்பிள் வாங்கிட்டீங்க, ரொம்ப புத்திசாலி நீங்க என்று புகழ்ந்தார். கண்ணாயிரத்துக்கு உடம் புல்லரித்தது. நம்ம சாமர்த்தியத்தை வீட்டில் யாரும் பாராட்ட மாட்டேங்கிறாங்க, நீங்களாவதுபாராட்டிறீங்க என்றார் கண்ணாயிரம்.
அவரிடம், அதைபற்றி கவலைப்படாதீங்க, வாங்க பேசிக்கிட்டேவீட்டுக்கு போவோம் என்று அழைத்தார் பரமசிவம். கண்ணாயிரமும் சரிபோலாம் என்றார் உற்சாகமாக. இருவரும் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசிக்கொண்டே சிரித்தபடி நடந்து வீட்டுக்குவந்தார்கள்.
கண்ணாயிரம் ஆப்பிள் பையை மனைவியிடம் கொடுத்தார். 150 ரூபாய்க்கு பழம் வாங்கிய திறமையை எடுத்து சொன்னார். அவர் சரி,சரி,சைக்கிளை எங்கே விட்டீங்க,பூட்டினீயளா இல்லையா என்று கேட்டாள்.
அப்போதுதான் கண்ணாயிரத்துக்கு சைக்கிளை மார்க்கெட்டிலே விட்டுட்டு மறந்துவந்தது தெரிந்தது. அச்சோ, இதோ போய் உடனே எடுத்துட்டுவரேன் என்றுமார்க்கெட்டுக்கு ஓடினார்.
அங்கு சைக்கிளை காணவில்லை. கண்ணாயிரம்கலங்கிநின்றார்.

  • வே. தபசுக்குமார், புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.