May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

அர்ஜுனனின் அகந்தையை அகற்றிய ஆஞ்சநேயர்

1 min read

Anjaneyar who removed Arjuna’s arrogance

14.6.2021

ஆஞ்சநேயர் இந்துக்களின் சக்தி மிகுந்த தெய்வம். இவர் யுகம் கடந்து வாழந்த சஞ்சீவி. ராமர் காலத்தில் பிறந்து அவருக்கு தாசனாக வாழ்ந்த ஆஞ்சநேயர் அடுத்த யுகத்தில் மகாவிஷ்ணு, கண்ணனாக அவதாரம் எடுத்த போதும் இப்பூமியில் நிலைகொண்டு ராம நாமத்தை பாடிக் கொண்டிருந்தார்.
ஒருநாள் அவர் இலங்கையில் இருந்த சீதையை மீட்பதற்காக கடலில் பாலம் கட்ட தொடங்கிய இடமான சேது கடற்கரை ஓரம் அமர்ந்து ராம மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது வில்வித்தையில் வல்லவனான அர்ஜுனன் அங்கு வந்தான். அவன் புனித தீர்த்தமான கடலில் நீராட சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் ‘‘இந்த இடத்தில் ராமர் வானரப்படைகளை கொண்டு பாலம் அமைத்துள்ளார். நானாக இருந்திருந்திருந்தால் அம்புகளாலே பாலம் அமைத்திருப்பேன்’’ என்று தனக்குள் பேசிக்கொண்டிருந்தான். இது யோக நிலையில் இருந்த ஆஞ்சநேயருக்கு கேட்டுவிட்டது. ஆத்திரம் கொண்டார். ஆனாலும் அதை அடக்கி கொண்டு பாண்டுவின் புதல்வன் அர்ஜுனனை அழைத்தார். ராமரை பற்றி ஏன் இப்படி கூறினாய் என்று கேட்டார். அதற்கு அர்ஜுனன், மானிடனான என்னாலேயே அம்புகளினால் பாலம் அமைக்க முடியும். ராமரால் ஏன் அப்படி பாலம் கட்ட முடியவில்லை என்றான். அதற்கு அம்பினால் பாலம் கட்டினால் அது வானரப்படைகளை தாங்காது என்றார். நான் அமைத்தால் தாங்கும் என்று அர்ஜுனன் கூற, உன் பாலம் என்னையே தாங்காது என்றார் ஆஞ்சநேயர். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தார்கள்.
ஆஞ்சநேயர், நீ அமைக்கும் பாலம் என்னை தாங்கினால் நீ சொன்னபடி நான் கேட்கிறேன். தாங்கவில்லை என்றால் நீ என்ன செய்வாய் என்று கேட்டார். அதற்கு அர்ஜுனன் என் அம்புபாலம் தாங்கவில்லை என்றால் உடனே தீ வளர்த்து அதில் குதித்து என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றார்.
அடுத்த நொடியில் அர்ஜுனனில் வில்லில் இருந்து அம்புகள் பாய்ந்து வந்தன. சிறிது நேரத்தில் அம்பினால் புதிய பாலம் அமைந்தது. அதனை கண்ட அனுமன் ஒரு தாவு தாவி அதன் மேல் ஏறினார். அவர் அதில் ஏறியதுதான் தாமதம், பாலம் சரிந்துவிழுந்து நொறுங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்து அர்ஜுனன் தன் உயிரை மாய்த்துக் கொள்ள நெருப்பு வளர்த்து அதில் பாய முயன்றான். அப்போது கிருஷ்ணன் ஒரு அந்தணர் வேடம் பூண்டு அங்கு வந்தார். அவர் அர்ஜுனன் தீக்குளிக்க முயல்வதை தடுத்து நிறுத்தினார். அவரிடம் அர்ஜுனன் என்னை ஏன் தடுக்கிறீர்கள். பந்தயத்தில் தோற்ற என்னை உயிரை மாய்க்க விடுங்கள் என்றார்.
அதற்கு அந்தணர் வேடத்தில் இருந்த கிருஷ்ணன் நீங்கள் இருவரும் யாரை நடுவராக கொண்டு இந்த பந்தயத்தை நடத்தினீர்கள். உங்கள் வெற்றி தோôல்வியை நிர்ணயித்தது யார்? எனவே என் முன்னால் இன்னும் ஒரு முறை போட்டியை நடத்துங்கள். அதில் நீ தோல்வி அடைந்தால் உன் இஷ்டபடி உயிரை மாய்த்துக்கொள் என்றார்.
அதற்கு அர்ஜுனன் சம்மதிக்க மேலும் தன் அம்புகளால் புதியதோர் பாலம் அமைத்தார். அதில் ஆஞ்சநேயர் முன்பு போல் ஏறி குதித்தார். ஆனால் இப்போது அந்த பாலம் உடையவில்லை. ஆஞ்சநேயர் தன் பலத்தை முழுவதையும் காட்டி அழுத்தினார். அப்படியானாலும் பாலம் அசையவில்லை. ஆஞ்சநேயருக்கு ஏதோ மாயம் நடக்கிறதோ என்று சந்தேகம் எழுந்தது. அவர் பாலத்திற்கு அடியில் குனிந்து எட்டி பார்த்தார். அங்கு கிருஷ்ணர் தன் ஆள்காட்டி விரலால் பாலத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருந்தார். அது கிருஷ்ணர் என்பதை புரிந்து கொண்டார். ஆனால் அர்ஜுனனுக்கு அவர் நிற்பதே தெரியாது. பாலத்திற்கு அடியில் இருந்து வெளியே வந்த கிருஷ்ணரின் காலில் விழுந்து வணங்கி சுவாமி என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் தாங்கி நிற்க நான் அந்த பாலத்தின் மேல் நிற்கும் நிலை ஏற்பட்டுவிட்டது என்றார். கிருஷணர் நிற்பது அர்ஜுனனுக்கு தெரிவில்லை என்பதால் ஆஞ்சநேயரின் செயலை கண்டு குழம்பிக் கொண்டிருந்தான். அப்போது கிருஷ்ணர் தன் ரூபத்தை அவனுக்கு காட்டினார். அவரின் காலில் விழந்து வணங்கினான். அவனிடம் உன் அரிய செயலை ஆணவம் இன்றி செய் என்று அறிவுரை கூறினார். -ஆ.பாலன்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.