May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

பிளாஞ்சேரி கோவிலில் நடக்கும் யாகத்தின் சிறப்பு

1 min read

Specialty of the Sacrifice at the Blancheri Temple
14.6.2021

ஒரு சமயம் உலகத்தில் பெரிய பிரளயம் ஏற்பட்டது. அப்போது உலகை காக்க வேண்டி முனிவர்கள் அனைவரும் சிவனை நோக்கி தவம் புரிய தொடங்கினார்கள். அவர்கள் இப்படி தவம் இருந்த இடம் திருவிடைமருதூர் அருகே உள்ள அம்மாசத்திரம் என்ற இடம். எல்லா முனிவர்களும் தவம் இருந்த இடத்திற்கு சற்று தாமதமாக பிராச முனிவர் வந்தார். தாமதமாக வந்ததால் அவரை மற்ற முனிவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இதனால் கோபம் கொண்ட பிராச முனிவர் தனியாக தவம் செய்ய முடிவு செய்தார்.
அப்போது அவருக்கு சிவபெருமானே அசரீரியாக முனிவரே உனது கர்ம வினைகளை போக்க முதலில் சூலினி துர்க்கையை பிரதிஷ்டை செய்து வணங்கி அதன்பின் தவம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அதன்படி பிராச முனிவர் சூலினி துர்க்கையை பிரதிஷ்டை செய்து ஜெயமங்களா யாகம் நடத்தினார். அப்போது அவர் முன்பு சூலினி துர்க்கை காட்சி கொடுத்தாள். அவள் முனிவரே உமது தவத்திற்கு நான் துணையாக இருந்து உதவுவேன் என்றாள். அதன்படி பிராசமுனிவரின் தவத்திற்கும் பூஜைக்கும் காவலாக நின்று அருள்புரிந்தாள். முனிவரின் தவத்தின் பலனாக சிவபெருமான் பிராச முனிவருக்கு காட்சி கொடுத்தார். பின்னர் அவ்விடத்தில் சிவபெருமான் தேவியுடன் இருந்து அருள்புரிவதாக கூறினார்.
இப்படி சிறப்பு பெற்ற இடம்தான் பிளாஞ்சேரி. இது கும்பகோணத்தில் இருந்து திருநாகேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள சிவபெருமான் கைலாசநாதர் என்று அழைக்கப்படுகிறார். அம்மன் காமாட்சி அம்மன். இந்த கோவிலில் சூலினி துர்க்கை தனி சன்னதில் இருந்து அருள் பாலிக்கிறாள். அந்த சூலினிதுர்க்கை, சரப சூலினி என்றும் அழைக்கப்படுகிறாள்.
இந்த சரபசூலினிக்கும் தனி வரலாறு உண்டு.
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் மிக வித்தியாசமானது. கடும் தவம் இருந்து இரணியன் பெற்ற வரம்தான் அதற்கு காரணம். அவன் தனக்கு மனிதனும் மிருகமும் இல்லாத ஒன்றால்தான் மரணம் வரவேண்டும். இரவும் அல்லாத பகலும் அல்லாத வேளையில், வீடும் அல்லாத வெளியிலும் அல்லாத இடத்தில் மரணம் நிகழவேண்டும் என்ற இக்கட்டான வரத்தை பெற்றான். இப்படி வரம் பெற்றால் தனக்கு மரணம் என்பதே நிகழாது என்ற எண்ணத்தில் இந்த கோரிக்கையை வைத்து வரம் வாங்கினான். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனின் சக்தி இருக்கும் என்பதை அவன் உணரவில்லை. அதனால், தானே இறைவன் என்றும் தன்னையே அனைவரும் வணங்க வேண்டும் என்றும் கட்டளையிட்டான். ஆனால் அவனுக்கு பிறந்த மகன் பிரகலாதனோ மகாவிஷ்ணுவின் பக்தன். அவனையும் எதிரியாக கொண்ட இரணியன், மகன் என்றும் பாராது அவனை கொல்ல உத்தரவிட்டான். அவனை மகாவிஷ்ணு காப்பாறினார். ஒரு கட்டத்தில் அந்த சிறுவனுக்காக மகாவிஷ்ணு தூணில் இருந்து நரசிம்மராக வெளிவந்து இரணியனை வதம் செய்தார். அதாவது மனிதனும் மிருகமும் இல்லாத உருவத்தில் இரவும் அல்லாத பகலும் அல்லாத கருக்கல் பொழுதில் வீடும் அல்லாத வெளியும் இல்லாத வாசலில் வைத்து இரணினை கொன்று ரத்தத்தை குடித்து குடலை மாலையாக போட்டுக்கொண்டார்.
ஆனால் அதன்பின்னரும் நரசிம்மரின் கோபம் தணியவில்லை. இதனால் உலகத்துக்கே ஆபத்து வருமோ என்ற அச்சம் உருவானது. எனவே தேவர்கள் பிரம்மா தலைமையில் சிவனிடம் சென்று மகாவிஷ்ணுவின் கோபத்தை தணிக்க வேண்டும் என்று வேண்டினர். சிவபெருமானும் அதனை ஏற்றுக் கொண்டு சரபேஸ்வரராக உருவெடுத்து வந்து நரசிம்மரின் கோபத்தை தணித்தார்.
சிவபெருமான், சரபேஸ்வரராக உருவெடுத்த போது, அவரது இரண்டு இறக்கைகளிலும் இரு சக்திகள் வெளிவந்து அவருக்கு துணையாக இருந்தார்கள். அவர்களின் ஒன்றுதான் ஞான சக்தி. இன்னொன்று பத்திரகாளி.
அந்த ஞான சக்திதான் பிராச முனிவரின் தவத்தை காத்த சரபசூலினி. பிராச முனிவரால் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் இந்த இடம் பிரானஞ்சேரி என்று அழைக்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில் இப்பெயர் மறுவி பிளாஞ்சேரி என்ற அழைக்கப்படுகிறது.
சரபசூலினிக்கு முனிவர் நடத்தியதுபோல் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் ஜெய மங்களா யாகம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டால் நமக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இந்தக் கோவிலில் நாம் பிராத்தனை செய்து அம்பாளிடம் வைக்கும் எலுமிச்சை பழமானது தானாகவே கீழே இறங்கி வரும் காட்சியை காணலாம்.
சரபசூலிக்கு ஜெய மங்களா யாகம் செய்வதால் எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை, கர்ம வினை, பில்லி சூனியம் ஏவல் விலகும். மேலும் வழக்குகளில் வெற்றி கிடைக்கஅரசியல் செல்வாக்கு பெற மற்றும் திருமணத் தடை விலகும் என்பது ஐதீகம். -ஆ.பாலன்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.