ஒன்றிய மந்திரி சபை நாளை மறுநாள் விரிவாக்கம்?
1 min read
Union Cabinet expansion tomorrow?
6/7/2021
ஒன்றிய மந்திரி சபை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விரிவாக்கம் நாளை மறுநாள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஒன்றிய மந்திரி சபை
ஒன்றிய மந்திரிசபையில் 81 பேர் வரை நியமிக்க முடியும். ஆனால் தற்போது 53 மந்திரிகள்தான் இருக்கிறார்கள். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை நாளை மறுநாள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வருகிற 13-ந்தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக மந்திரிசபையை மாற்றி அமைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யார்-யாரை மந்திரிகளாக நியமிப்பது என்பது பற்றி கடந்த 2 நாட்களாக மூத்த தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். உள்துறை மந்திரி அமித்ஷா, கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தினார். அதில் யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
யார்-யார்?
காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு பதவி வழங்கப்படும் எனத்தெரிகிறது. அதேபோல அசாம் முன்னாள் முதல்-மந்திரி சர்பானந்த் சோனாவால், பீகார் மாநில மூத்த தலைவர் சுஷீல்மோடி ஆகியோரும் மந்திரி சபையில் இடம் பெறலாம் என பரவலாக செய்திகள் வெளியாகின்றன.
கூட்டணி கட்சிகள் சிலவற்றுக்கும் மந்திரி பதவி வழங்கப்படுகிறது. நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 2 மந்திரி பதவிகள் வழங்கப்பட இருப்பதாகவும் லோக்ஜனசக்தியின் புதிய தலைவராகி உள்ள பசுபதி குமார் பராஸ், அப்னா தளத்தை சேர்ந்த அணுபிரியா படேல் ஆகியோரும் மந்திரி சபையில் இடம் பெற வாய்ப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.