June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பதி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் 40 நிமிடங்களில் நிறைவடைந்தது

1 min read

Online booking of tickets is completed in 40 minutes at Thiruppathi

25.12.2021
திருப்பதி கோவில் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் வெளியிடப்பட்ட 22 நிமிடங்களில் நிறைவடைந்தது.

திருப்பதி கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஜனவரி மாதம் ஏழுமலையானை தரிசிக்க 40 நிமிடங்களில் 4.60 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஜனவரி மாதம் 1-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை தினமும் 12 ஆயிரம் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.

சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்துக்காக 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை தினமும் 20 ஆயிரம் ரூ.300 டிக்கெட்டுகளும், 23-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை தினமும் 12 ஆயிரம் ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.

இந்த டிக்கெட்டுகளை பெற ஒரேநேரத்தில் 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்தில் முயற்சி செய்தனர். இருப்பினும், ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்ட 22 நிமிடங்களில் 3 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு தொடங்கிய 40-வது நிமிடத்தில் 4 லட்சத்து 60 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன.

வரமுடியாதவர்கள்

இந்தநிலையில், அண்மையில் பெய்த கனமழையால் கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதியில் இருந்து இந்த மாதம் 11-ந்தேதி வரை ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்து தரிசனத்துக்கு வரமுடியாத பக்தர்கள், ஜனவரி மாதம் 10-ந்தேதியில் இருந்து ஜூலை மாதம் 10-ந்தேதி வரை 6 மாத காலத்துக்கு எப்போது வேண்டுமானாலும் பழைய தரிசன டிக்கெட்டுகளின் எண் மூலம் ஆன்லைனில் புதிய தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு தரிசனம் செய்யலாம், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

ஏற்கனவே 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தது. ஜனவரி மாதம் முதல் தினமும் 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனிலும், தினமும் 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாகவும் கவுண்ட்டர்களிலும் வழங்கப்படுகிறது.

மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அலிபிரி சோதனைச் சாவடியை கடக்கும் முன், 48 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததற்கான ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ், கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வந்து அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.
மேற்கண்ட சான்றிதழ்களை காண்பித்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்லவும், ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *