கண்ணாயிரம் கண்ட பகல்கனவு/ நகைச்சுவை கதை
1 min readKanaayiram’s Daydream/ Story by Thabasukumar
30.3.2022
கண்ணாயிரம் வடநாட்டில் காணாமல்போன கழுதைகளை கண்டுபிடிக்க போலீசாருடன் ரெயிலில் சென்றுகொண்டிருந்தார்.இரவு நேரத்தில் அவர் வைத்திருந்த மினரல்வாட்டர்கேனை திடீரென்று காணவில்லை.
அய்யோ என்மினரல்வாட்டர்கேன் என்று கத்தினார்.ரெயிலில் அதையார் எடுத்துட்டுபோகப்போறாங்க..நல்லா தேடிப்பாருங்க என்று கண்ணாயிரத்தை போலீசார் கண்டித்தார்கள்.கண்ணாயிரம் அங்கும் இங்கும் தேடிப்பார்த்தார். கிடைக்கவில்லை. கண்ணாயிரம் ஓ…என்று அழ ஆரம்பித்தார்.
போலீசார் அவரை சமாதானப்படுத்தினார்கள்.அவர் கேட்கவில்லை. இந்த நேரத்தில் கண்ணாயிரம் இருந்த இருக்கைக்கு கீழே போலீஸ்காரர் தேடிப்பார்த்தார். அங்கே
மினரல்வாட்டர்கேன் கிடந்தது. அதை எடுத்த போலீஸ்காரர் கண்ணாயிரம் கையில் கொடுத்தார். அழப்படாது…ஒருகயிறுவைத்து கட்டிதொங்கவிட்டுக்கொள்ளுங்கள் என்று ஒரு நைலான்கயிறையும் கொடுத்தார். கண்ணாயிரம் அந்த கயிற்றால் மினரல்வாட்டர்கேனை கட்டி கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டார். அவர் மனம் அமைதியானது.
ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்தது. கண்ணாயிரம் மினரல்வாட்டர்கேனை கட்டிப்பிடித்தபடி தூங்கினார். விடிந்தது. ரெயில் முக்கிய வழித்தடங்களில் நின்று மீண்டும் வேகமாக சென்றது. மாலை நேரம்…வடநாட்டை சென்றடைந்தது.
கண்ணாயிரம் மற்றும் போலீசார் ரெயிலில் இருந்து இறங்கி வேகமாக நடந்து ஒரு அலுவலகத்துக்கு சென்றார்கள்.கண்ணாயிரம் மினரல்வாட்டர் கேனை கழுத்தில் கட்டிதொங்கவிட்டிருந்தார்.இது என்ன புதுசா இருக்கு….என்று எல்லோரும் வேடிக்கைபார்த்தார்கள். கண்ணாயிரம் அவர்களைபார்த்து சிரித்தபடி நடந்தார். ஒரு கட்டிடத்துக்குள் போலீசார் நுழைந்தார்கள்.அங்கு உயர் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். காணாமல் போன கழுதைகளை எப்படி மீட்பது என்று அங்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. கழுதையை பாலுக்கா கடத்தியிருப்பார்களா..கழுதைபால் எங்கே அதிகம் விற்கிறதோ அந்த இடத்துக்கு சென்று கழுதைகளை பிடித்துவிடலாம் என்று யோசனை சொன்னார்கள்.
கண்ணாயிரம் அவர்களிடம் காணாமல்போனது ஆண்கழுதையா பெண்கழுதையா என்று தமிழில் கேட்டார்.மற்றொருவர் இந்தியில் அதை மொழிபெயர்த்து சொன்னார்.அதை கேட்டதும் அவர்கள்….புன்னகையுடன் ஆண்கழுதைதான்…என்றனர்.
உடனே….கண்ணாயிரம்..அப்படியா…ஆண்கழுதை என்றால் பாலுக்கு சம்மந்தம் இல்லை. பொதிசுமக்க பயன்படுத்துவாங்க…அப்படி எங்கே பொதி சுமக்காங்கன்னு பாக்கணூம்…கழுதைக்கு என்ன இரை போட்டாங்கன்னு கழுதைக்கு சொந்தகாரங்கிட்ட கேளுங்க என்றார் கண்ணாயிரம்.
உடனே கழுதைக்கு சொந்தகாரங்களை கூப்பிட்டு போலீஸ்காரர்கள் கேட்டனர்.அதற்கு அவர்கள்…அதுவா ..அதுக்கு இரையின்னு தனியா எதுவும் போடல…நகரத்திலே ஒட்டியிருக்கிற சினிமா போஸ்டரை ஒண்ணுவிடாம தின்னும்…அந்த பசைவாசம் அதுக்கு ரொம்பபிடிக்கும்…என்றனர்.
அதைகேட்டதும்…கண்ணாயிரம் உற்சாகமானார்.கொஞ்சம் மினரல்வாட்டர் கொடுங்க என்றார்.
அவர்வைத்திருந்த மினரல்வாட்டர்கேனில் மினரல்வாட்டரை நிரப்பிகொடுத்தார்கள். மூடியைதிறந்து கொஞ்சம் மினரல்வாட்டரரை குடித்த கண்ணாயிரம் உற்சாகமாக பேசதொடங்கினார்.
அதாவது…காணாமல்போன கழுதைகளுக்கு போஸ்டர் ஒட்டுற பசைபிடிக்கும். அப்படி என்றால் நாம முக்கிய இடங்களில் பசையை காய்ச்சி வாளியில் வைப்போம்.அந்த வாசத்தைபிடிச்சி கழுதை எங்கிருந்தாலும் ஓடிவரும்…அப்போ நாம் அதை மடக்கிபிடிக்கலாம்…எப்படி ஐடியா என்று கேட்டார்.
நல்லாத்தான் இருக்கு….இது நல்ல தொலைநோக்கு திட்டம்தான்…முயற்சி பண்ணலாம் என்றனர் அதிகாரிகள். அதன்படி வாளியில் பசையைகாய்ச்சி…பல்வேறு இடங்களில்வைத்தனர். காணாமல்போன கழுதைவருகிறதா என்று பைனார்குலர் மூலம் போலீசார் பார்த்தார்கள். இதுதான் தொலைநோக்கு பார்வையா…நாமளும் ஊருக்கு போயி பைனார்குலர் வாங்கி காணாமல்போன பொருள்களை தேடி கண்டுபிடிக்கணும் என்று கண்ணாயிரம் முடிவு செய்தார். அந்த நேரத்தில் ஒரு கொட்டகையில் அடைத்துவைத்திருந்த கழுதைகள் பசை வாசத்தை மோப்பம்பிடித்து கயிற்றை அறுத்துகொண்டு வெளியே ஓடிவந்தன. அதை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. கண்ணாயிரமும் நமக்கு பரிசு கிடைக்கும் என்ற ஆசையில் வாயெல்லாம் பல்லாக இருந்தார்.
ஓடிவந்த கழுதைகளை பார்த்த அதன் சொந்த காரர்களுக்கு அதிர்ச்சி. இவ்வளவு பக்கத்திலே இருந்து நமக்கு தெரியாம போச்சே…ஒருவேளை இவங்களே இங்கே அடைச்சிவச்சிட்டு..நம்மகிட்ட ஏமாத்துறாங்களா…என்று சந்தேகப்பட்டனர்.
அவ்வளவுதான் அவர்களுக்கு கோபம் தலைக்கேறியது.கண்ணாயிரத்தை நோக்கி அவர்கள் வேகமாக வந்தார்கள். கண்ணாயிரம் அவர்களை பார்த்து ..என்யோசனைபடி உங்களது கழுதை கிடைச்சிட்டு…நீங்களா பாத்து பரிசா எது கொடுத்தாலும் வாங்கிக்கிறேன்…இது நமக்குள்ளே இருக்கட்டும்..வேறு யாரிடமும் சொல்லவேண்டாம்..போலீஸ்காரர்கள் தனியா எதாவது தருவாங்க…அதை. அப்புறம் பாத்துக்கலாம் என்றார். அதைகேட்ட கழுதைக்கு சொந்தகாரர்கள்…பரிசா…நீங்கமட்டும்வாங்க…தர்ரோம் என்றனர். கண்ணாயிரம் மினரல்வாட்டர்கேனை தொங்கவிட்டபடி…அவர்கள் சொன்ன மறைவான இடத்துக்கு போனார்.அங்கே அவர்கள்..
இந்தியில்..ஏண்டா ..கழுதையை கடத்தி நீங்களே..இங்கே அடைச்சிவச்சிட்டு அதைபிடிச்சமாதிரி நாடகமாடி பரிசு கேட்கிறீர்களா..என்று ஆவேசமாக கண்ணாயிரத்தை தாக்கினார்கள்.
கண்ணாயிரம் தமிழில் ஏதோ பதில் சொன்னார். அவர்கள் அது புரியாமல் அரிவாளால்வெட்டுவதற்கு துரத்தினார்கள்.கண்ணாயிரம் ஆளைவிட்டா போதுமுன்னு மினரல்வாட்டர் கேனோடு தலைதெறிக்க ஓடினார். நீங்களும் வேண்டாம் உங்க பரிசும் வேண்டாம் என்று கத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு போலீசார் ஓடிவந்து அவர்களை விரட்டினார்கள். கண்ணாயிரத்தை நில்லுங்கள் நில்லுங்கள் என்று கையில் லத்தியுடன் விரட்டிவந்தனர். இவர்களும் நம்மை அடிக்கத்தான் வருகிறார்கள் என்று நினைத்த கண்ணாயிரம் நாலு கால்பாய்ச்சலில் ஓடிவந்தார் என்ன அடிக்காதீங்க…என்னை அடிக்காதீங்க என்று கத்தியபடி கட்டிலிலிருந்து கீழே உருண்டுவிழுந்தார்.
அந்த சத்தம் கேட்டு அவரது மனைவி ஓடிவந்தார். என்னங்க…ஆச்சு…என்று கேட்டார். கண்ணாயிரம் கண்களை துடைத்தபடி…ஒரு கனவு கண்டேன்…அதிலே..என்ன அடிச்சுப்புட்டாங்க என்றார்.
பகல்கனவு பலிக்காது…பயப்படாம இருங்க. யாரும் உங்களை ஒண்ணும் செய்யமாட்டாங்க…தைரியமாக இருங்க…நீங்க சாதாரணமான ஆளா…வடநாட்டுக்கு போயி கழுதையையெல்லாம் மீட்கணும்…வடநாட்டுக்கு எப்போபோகப்போறீங்க என்று கேட்டார்.
கண்ணாயிரத்தை கனவு பயமுறுத்த மீண்டும் போர்வையை இழுத்துமூடி படுத்துக்கொண்டார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.