June 11, 2023

Seithi Saral

Tamil News Channel

ராகுல் காந்தி பாதயாத்திரை பலன் அளிக்குமா?

1 min read

Will Rahul Gandhi’s padayatra pay off?

8.9.2022
காங்கிரஸ்கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். ராஜீவ்காந்தி நினைவிடம் ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த பாதயாத்திரையின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி முந்தைய நாளே சென்னை வந்துவிட்டார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி பிரார்த்தனை செய்தார். அங்கு மரக்கன்று நட்டதோடு, கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். அதன்பின்னரே யாத்திரையை தொடங்கினார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு வழங்கி பாதயாத்திரையை தொடங்கிவைத்தார். அதை பெற்றுக்கொண்ட அவர் அங்கிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பேசினார். இதில் பாதயாத்திரையின் நோக்கம் பற்றி விரிவாக பேசினார். மேலும் ஆளும் பாரதீய ஜனதாவை கடுமையாக தாக்கினார்.
“ஒரு காலத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் இன்று இந்தியாவின் பொருளாதாரத்தை சில முதலாளிகள் கையில் வைத்துள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., விவசாயிகள் விரோத சட்டம் ஆகியவை பெரும் முதலாளிகளுக்கு உதவுவதற்காகவும், ஏழைகளின் வளமான வாழ்க்கையை திருடவும் பயன்படுகிறது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம் தயாரிப்பது உள்பட அத்தனை தொழில்களும் சில தொழில் அதிபர்களின் கையில் சிக்கி உள்ளது. அவர்கள் இல்லாமல் நமது பிரதமரால் அரசியல் ரீதியாக ஒருநாள் கூட உயிர் வாழ முடியாது. எதிர்க்கட்சிகளை சி.பி.ஐ., வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை வைத்து அச்சுறுத்த எண்ணுகிறார்கள். எனவே வரலாற்றில் இல்லாத மோசமான கால கட்டத்துக்கு நாம் தள்ளப்பட்டு உள்ளோம். எனவே இந்த தருணத்தில் ஒற்றுமையாக இணைய வேண்டும். மக்களை ஒருமுகப்படுத்த வேண்டிய தருணம் வந்து இருக்கிறது. அதுதான் நான் ஏற்றுக்கொண்டுள்ள நெடும் பயணத்தின் நோக்கம் ஆகும்.” என்று தெளிவுபடுத்தினார்.
ராகுலின் பேச்சு உணர்ச்சிகரமாகவும், ஆழம் நிறைந்ததாகவும் இருந்தது. அவரது குறிக்கோளுக்கு வலுசேர்க்கும் விதமாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை கொடுத்தார். இதில் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. பாரதீய ஜனதா கட்சியினர் எதோ தங்களுக்கு மட்டுமே தேசிய உணர்வு இருப்பதாவும், தேசிய கொடியை தங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் இருப்பதாகவும் நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் தேசிய கொடியை கொடுத்தார். மேலும் அந்த கொடி கதர் துணியில் செய்யப்பட்டது. பாலியஸ்டர் துணியில் தேசியகொடியை உருவாக்க பிரதமர் மோடி அனுமதி கொடுத்ததை கண்டிக்கும் வகையில் இந்த நுணுக்கத்தை முதல் அமைச்சர் கையாண்டு உள்ளார். இது ராகுல்காந்திக்கு உத்வேகத்தை கொடுக்க வேண்டும்.
ராகுல்காந்தி பேசும்போது ஒற்றுமையாக இணைய வேண்டும் என்றும் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். இந்த விசயத்தில் அவர் பேச்சோடு நின்றுவிடக்கூடாது. காங்கிரஸ்கட்சி வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதை அனைவரும் அறிவோம். இந்த நேரத்தில் பல தலைவர்கள் கட்சியை விட்டு விலகிச் செல்கிறார்கள். சிலர் தனிக்கட்சி தொடங்குகிறார்கள். இல்லையென்றால் பாரதீய ஜனதாவில் சேர்ந்து விடுகிறார்கள். இதை தடுக்க ராகுல்காந்தி முனைய வேண்டும். அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமானால் அதை களைய வேண்டும். இல்லை என்றால் கட்சியில் உள்ள நியாயத்தை எடுத்துக்கூற வேண்டும். பாரதீய ஜனதா வைக்கும் குற்றச்சாட்டைவிட கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் சொல்வதுதான் மோசமானது. இதை தடுக்க வேண்டும். ஒரு நல்ல தலைவர் கட்சியில் இருந்து விலகிச் சென்றால் அவரை நேரில் சந்தித்து பேச ராகுல் தயங்ககூடாது.
பாரதீய ஜனதாவின் ஊழல் மற்றும் பொருளாதார வீழ்ச்சி பற்றி ராகுல்காந்தி விளக்கியுள்ளார். அதே நேரம் தங்கள் கட்சியில் உள்ள ஊழலை ஒழிக்க வேண்டும். தங்கள் கட்சியில் உள்ள தலைவர்கள் செய்த ஊழல் குற்றச்சாட்டுகளை அலசி ஆராய வேண்டும். அவர்கள் மீது தவறு இருந்தால் அவர்களுக்கு எச்சரிக்கை விட வேண்டும். தேவையானால் அவர்களை களையெடுக்கவும் தயங்ககூடாது. இளம் தலைவர்களை உருவாக்கி அவர்களுக்கு புத்துணர்வு கொடுக்க வேண்டும்.
மேலும் மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் போற்றும் தலைவர்களை உருவாக்க வேண்டும். அவர்கள் மூலம் மாநில பிரச்சினைகளை பேச வேண்டும். மக்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறி போராட வேண்டும். அடிமட்ட தொண்டர்கள் பலரை கட்சியில் சேர்க்க வேண்டும். கிராம அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். காங்கிரஸ் என்ற பெயர் மக்கள் மத்தியில் இருந்து இன்னும் அகலவில்லை. எனவே அக்கட்சியை அவர்களிடம் கொண்டு செல்வது மிக எளிது. இதுதவிர கிராம அளவில் பூத் கமிட்டிகளை உருவாக்க வேண்டும். அப்படியானால்தான் பாமர மக்களிடம் கட்சியை எடுத்துச் செல்ல முடியும்.
ஆளும் கட்சியினர் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாது தாங்கள் நினைத்த எந்த காரியத்தையும் தடையின்றி நிறைவேற்றி வருகிறார்கள். தேசிய அளவில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு போட்டியாக திகழ வேண்டுமானால் அது காங்கிரசால் மட்டுமே முடியும். மற்ற தேசிய கட்சிகள் எல்லாம் பெயர் அளவுக்குத்தான் இருக்கின்றன. எனவே பாரதீய ஜனதாவுக்கு எதிராக பலமான ஒரு அணி உருவாக வேண்டுமானால் அது காங்கிரஸ் தலைமையில்தான் இருக்க வேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது.
காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாத குறை உள்ளது. இந்த விசயத்தில் சோனியா குடும்பத்துக்குள்ளேயே பிரச்சினை இருப்பதாகவும் பேசப்படுகிறது. ராகுல்காந்தியே தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும். அதன்பின் கட்சியை வலுப்படுத்த துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவரது செயல்பாடுகள் மூலம் பலரை தன்பால் இழுக்கலாம். இப்படி செய்தால்தான் அவரது பாதயாத்திரைக்கு பலன் கிடைக்கும். இல்லை யென்னால் இது ஒரு சம்பிரதாய யாத்திரையாகத்தான் முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *