July 22, 2024

Seithi Saral

Tamil News Channel

வளைகுடா நாடுகள் இந்தியா மீது பாய்வது ஏன்?

1 min read

Why are the Gulf countries flooding India?

7.6.2022
நமது ஊர்களில் “தென்னை மரத்தில் தேள்கொட்டினால் பனைமரனத்துக்கு நெறிகட்டுகிறது” என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இந்த பழமொழி இந்தியா மீது அபாண்டத்தை சொல்லும் அரபு நாடுகளுக்கு பொருந்தும்.
முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக செய்தித் தொடர்பாளர் பேசிய பேச்சுக்கு இந்தியா மீது கண்டனத்தை அரபு நாடுகள் தெரிவிப்பது ஆச்சரியமாக உள்ளது.
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, கியான்வாபி மசூதி தொடர்பான விவாதத்தின் போது முகமது நபிகள் குறித்து சர்ச்சையான முறையில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். அது மட்டுமின்றி அவர்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். புகாரின் பேரில் மும்பை போலீசார் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.
நுபுர்சர்மாவின் பேச்க்கு ஆதரவாக டெல்லி பாரதீய ஜனதாவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டால் டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர்களின் பேச்சுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அவர்கள் சார்ந்திருந்த பாரதீய ஜனதாவும் கண்டனம் தெரிவத்ததோடு நிற்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் கூறும்போது, “பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதைப் பாரதிய ஜனதா கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. எந்த ஒரு மதத்தினரையும் இழிவுபடுத்துவதைப் பா.ஜ.க.விரும்பவில்லை” எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்.
மேலும் நபிகள் குறித்ததான சர்ச்சை கருத்து காரணமாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பா.ஜ.க மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக நுபுர் சர்மாவுக்கு அனுப்பியுள்ள நோடீஸ்சில், உங்களின் கருத்து கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே, இது தொடர்பாக உங்கள் மேல் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், நீங்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறீர்கள் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் மற்றொரு செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிந்தாலுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ்சில், நீங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து கட்சியின் அடிப்படை கொள்கை மற்றும் சட்டத்திற்கு எதிரானது. எனவே, நீங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

நுபுர்சர்மாவின் செயல் உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. மதசார்பற்ற நாட்டில் அவர் இப்படி பேசியது மாபெரும் தவறு. அவர் விவரம் அறியாதவர் அல்ல. டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டமும், பல்கலைக்கழக சட்ட கல்லூரியில் பட்டமும் பெற்றுள்ளார். மேலும் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் சட்ட படிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
ஒரு மாணவர் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய நுபுர் சர்மா, இளைஞர் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் டெல்லி மாநில செயற்குழு உறுப்பினர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார். தற்போது தேசிய செய்தித் தொடர்பாளராக பதவி வகித்து வந்தார்.
இப்படி ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு பேசியது நாட்டின் இறையாண்மைக்கு உகந்தது அல்ல. அவர் கட்சியின் உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் அவர் மீது பாஜக நடவடிக்கை் எடுத்துள்ளது. மேலும் இந்தியாவே அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிதுள்ளது.
அப்படி இருக்கையில் இந்தியா மீது சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. சவுதி அரேபியா குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. மேலும் இந்தியாவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று கத்தாரில் இஸ்லாமியர்கள் போராட்டம் செய்ய தொடங்கியுள்ளனர். அதோடு மால்கள் பலவற்றில் இந்தியாவில் இருந்து வந்த பொருட்கள் துணி போட்டு மூடப்பட்டு, அதை புறக்கணிக்க வேண்டும் என்றும் நோட்டிஸ் ஒட்டியுள்ளனர்.
இதுதவிர கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மீட்டலிடம் விளக்கம் கேட்டு, கத்தார் வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதில், “இஸ்லாமியர்களை கோபம் அடைய செய்யும் வகையில் கருத்து தெரிவித்த உறுப்பினரை ஆளும் இந்திய அரசு நீக்கியதை வரவேற்கிறோம். அதே சமயம், இந்திய அரசாங்கம் , சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று கேட்டுள்ளது.
கத்தார் நாட்டின் இந்த நடவடிக்கை தேவையற்றது. இந்தியா போன்ற பெருந்தன்மையான நாடு. மேலும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் சொன்ன கருத்தை இந்தியாவே சொன்னதாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும். இந்தியாவில் உள்ள எத்தையோ கட்சிகளில் பாரதீய ஜனதாவும் ஒன்று. அதுவும் அந்தகட்சியோ சம்பந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதையும் மறந்து விடக்கூடாது.
மேலும் துணை ஜனாதிபதி தற்போது கத்தார் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த நாட்டின் துணை அதிபர் இவரது நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார். அவர் கொடுப்பதாக இருந்த விருந்து நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
தனிப்பட்டவர்களின் கருத்துக்கு ஒரு நாட்டின் மீது பழிபோடுவது நல்லதல்ல. அதுவும் மதசார்பற்ற நாட்டின் மீது மதசார்புள்ள நாடு இப்படி அபாண்டத்தை செய்வது அவர்களுக்குத்தான் நல்லதல்ல.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.