May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

மகாபாரதக் கதைகள் / அமுதன் என்ற தனசேகரன்

1 min read

Stories of the Mahabharata / Dhanasekaran alias Amuthan

1.4.2023
தினத்தந்தி தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றிய தனசேகரன் அவர்கள் செய்தி சாரலுக்காக அமுதன் என்ற பெயரில் எழுதியது இது…

……..


இதிகாசம்
இதிகாசம் என்றால் அன்ன?
இதி ஹ அசம், அதாவது, இது இப்படி நடந்தது என்பதுதான் இதிகாசம் என அழைக்கப்படுகிறது.
நமது பாரத தேசத்தில் எழுதப்பட்ட இதிகாசங்கள் மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகும்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட மகாபாரதமும், ராமாயணமும் வெறும் கதைகள் அல்ல. அவை உண்மையில் நடந்த சம்பவங்கள் என்பதால், அவை இதிகாசங்கள் எனப் பெயர் பெற்றன.
லட்சக்கணக்கான மந்திரங்களைக் கொண்ட வேதத்தை, தற்போதைய காலத்தில் எவர் ஒருவரும் அப்படியே படித்துப் பாராயனம் செய்வது மிகச் சிரமம் என்பதால்,
அவற்றை ருக், யஜுர், சாம, அதர்வணம் என்ற நான்கு வேதங்களாக ஆக்கித் தந்தவர், வியாசர்.
அவரே, பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடந்த போரையும், அது தொடர்பான நிகழ்வுகளையும் மகாபாரதம் என்ற பெயரில் இதிகாசமாகப் பதிவு
செய்தார்.
வியாசர் சொல்லச் சொல்ல அந்தச் சம்பவங்களை விநாயகர் எழுதிக் கொடுத்ததாகச் சொல்வது உண்டு.
உறவினர்களைக் கொல்வதா என்று, போர்க்களத்தில் வாட்டத்துடன் இருந்த அர்ச்சுனனுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், பகவான் கிருஷ்ணர் அருளிய பகவத் கீதையையும் உள்ளடக்கிய மகாபாரதம், 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்லோகங்களைக் கொண்டது.
ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்கள் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் கதாபாத்திரங்களில் பலர், அந்தந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, மற்ற கதாபாத்திரங்களிடம் கதைகளைச் சொல்வதாக வியாசர் எழுதி இருக்கிறார். எனவே, மகாபாரதத்தில் ஏராளமான கிளைக் கதைகள் காணப்படுகின்றன.
இந்தக் கிளைக் கதைகள், மகாபாரத நிகழ்வுகளை ருசிகரமாக நகர்த்திச் செல்ல உதவுவதுடன், சிந்தனையைத் தூண்டி, நீதியைப் போதிப்பதாகவும் உள்ளன.
அவற்றில் சில கதைகளை இங்கே காணலாம்….

முதல் கதை

குளத்தின் உடைந்த கரையை விசித்திரமாக அடைத்த சீடர்

கங்கை நதியின் தாராள குணத்தால் அந்தப் பகுதி வனப்பு மிக்கதாக இருந்தது.
அங்கே மிகப் பெரிய குளம். அந்தக் குளத்தில் இருந்து சற்றுத் தொலைவில் ஒரு ரிஷியின் அழகான ஆசிரமம் அமைந்து இருந்தது. அந்த ஆசிரமத்தின் தலைவர் தவுமியர் என்ற புகழ் பெற்ற ரிஷி. அவரிடம் உபமன்யு, ஆருணி, பைதன் என்ற மூன்று பேர் சீடர்களாக இருந்தார்கள்.
ஒரு நாள், பலத்த மழை காரணமாக அங்கு இருந்த குளம் நிரம்பி, கரையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுவிட்டது. இது பற்றிய தகவல் அந்த ரிஷிக்குத் தெரிய வந்தது.
உடனே அவர், தனது சீடர்களில் ஒருவரான ஆருணியை அழைத்து, “நீ அங்கே போய், உடைந்த குளக் கரையை அடைத்து விட்டு வா” என்று உத்தரவிட்டார்.

அங்கே சென்ற ஆருணி, குளத்தின் உடைந்த கரை வழியாகத் தண்ணீர் வெகு வேகமாக வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவசரம், அவசரமாக மண்வெட்டியை எடுத்து மண்ணை அள்ளி அந்த இடத்தில் போட்டு, உடைந்த கரையைச் சரி செய்ய முயன்றார்.
அவர், ஒவ்வொரு முறை அங்கே போட்ட மண்ணையும் தள்ளிக் கொண்டு தண்ணீர் வெளியேறியபடியே இருந்தது.
ஆருணி எவ்வளவோ போராடியும் அவரால் அந்த உடைப்பை சரி செய்ய முடியவில்லை.

குருவின் கட்டளையை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ஆருணி, உடைந்த கரையை அடைக்கும் விதமாக அந்தப் பள்ளத்தில் அணை
கட்டியது போல அதன் குறுக்கே திடீர் என்று படுத்துக் கொண்டார். அதன் பிறகுதான் அங்கே தண்ணீர் வெளியேறுவது கட்டுப்படுத்தப்பட்டது.
அந்த இடத்தில் இருந்து எழுந்தால், மீண்டும் குளத்தின் தண்ணீர் வெளியேறிவிடும் என்பதால் ஆருணி, அந்த மடையின் குறுக்கே படுத்தபடி இருந்தார்.
அங்கே ஆசிரமத்தில், நீண்ட நேரமாக ஆருணியைக் காணவில்லை என்பதை அறிந்த ரிஷி தவும்யர், தனது மற்ற சீடர்களிடம் ஆருணி எங்கே என்று கேட்டார்.
அதற்கு அந்த சீடர்கள், ‘’குருவே தாங்கள் தான் உடைந்த குளக் கரையை அடைப்பதற்காக ஆருணியை அனுப்பினீர்கள்’’ என்று அவருக்கு நினைவுபடுத்தினார்கள்.
உடனே அந்த ரிஷி,” இவ்வளவு நேரமாக ஆருணி திரும்பாதது கவலை அளிக்கிறது. நாமெல்லாம் ஆருணி சென்ற இடத்திற்குப் போய் அவரைத் தேடலாம்’’என்று கூறி, அவசரமாக அந்தக் குளக்கரைக்குச் சென்றார்.
தூரத்தில் நின்று பார்த்தபோது, குளக்க கரை அருகே ஆருணி எங்கும் நிற்பதாகத் தெரியவில்லை.

குளத்தின் ஒரு பகுதியில் நின்ற ரிஷி, ‘’ஆருணியே, நீ எங்கே இருக்கிறாய்? இங்கே வா’’ என்று சப்தம் போட்டு அழைத்தார்.
குளத்தில் இருந்து வெளியேறும் வெள்ளத்தைத் தடுப்பதற்காக, மடையின் குறுக்கே படுத்து இருந்த ஆருணி, குருவின் அழைப்பைக் கேட்டதும், குளத்தின் மடையில் இருந்து எழுந்து, குரு இருந்த இடத்திற்கு வேகமாகச் சென்றார்.
‘’குளத்தின் உடைந்த கரையில் மண்ணைப் போட்டு அடைக்க முயன்றேன். ஆனால் தண்ணீர் வெளியேறுவது நின்றபாடாக இல்லை. எனவே வேறு வழி இல்லாமல், அந்த மடையின் குறுகே நானே படுத்து தண்ணீர் வெளியேறுவதைத் தடுத்தேன். தங்கள்
குரலைக் கேட்டு அந்த மடையைப் பிளந்து கொண்டு இங்கே வந்தேன்’’ என்று ஆருணி விளக்கமாகக் கூறினார்.
குருவின் கட்டளைக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஆருணியைப் பார்த்து மகிழ்ந்த ரிஷி தவும்யர், ‘’நீ மடையைப் பிளந்து கொண்டு வந்ததால் இன்று முதல் உத்தாலகன் (பிளந்தவன்) என்று அழைக்கப்படுவாய். எல்லா வேதங்களும் தர்ம
சாஸ்திரங்களும் உனக்குத் தானாகவே பிரகாசிக்கும்’’ என்று ஆசி கூறினார்.
(உத்தாலக ஆருணி என்ற இந்தச் சீடரின் மகன் பெயர் ஸ்வேதகேது. வேதங்களின்
சாரமான உபநிஷத்தில் உத்தாலக ஆருணி வெகுவாகப் போற்றப்படுகிறார்.
சபரிமலையில் உள்ள ஐயப்பசாமி கோவிலுக்குச் சென்றவர்கள், 18 படி ஏறியதும்
எதிரே தென்படும் கோவிலின் முன் பகுதியில் பொறிக்கப்பட்ட “தத்வமஸி” என்ற
சொல்லைப் பார்த்து இருக்கலாம்.
‘’நீயே இறைவனாக இருக்கிறாய்’’ என்று பொருள்படும் அந்தச் சொல், சாந்தோக்கிய உபநிஷத்தில் மகா வாக்கியம் என்ற பெருமையுடன் காணப்படுகிறது.
உத்தாலக ஆருணி, தனது சீடரும் மகனுமான ஸ்வேதகேதுவுக்கு 9 முறை திரும்பத்
திரும்பக் கூறி அருளியது தான் “தத்வமஸி” என்ற பிரபலமான அந்தச் சொல் என்பது
குறிப்பிடத்தக்கது.

(அடுத்த கதை வரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.