April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை குழப்பிய முந்தானை முடிச்சு/நகைச்சுவை கதை/தபசுக்குமார்

1 min read

Kannayira’s confused Mundanai muduchi /Comedy story/Tapasukumar

9/6/2023
கண்ணாயிரம் குற்றாலத்திலிருந்து பாபநாசத்துக்கு சுற்றுலா பஸ்சில் சென்றபோது குற்றாலம் விலக்கில் பஸ்சை நிறுத்தி பதனீர் குடித்தார். பதனீரில் தேனீக்களும் எறும்பும் கிடந்ததால் ஊதி ஊதி குடித்த அவர் பின்னர் நுங்கு சாப்பிட்டார். கண்ணாயிரத்துடன் வந்தவர்களும் பதனீர் மற்றும் நுங்கு சாப்பிட்டுவிட்டு பஸ்சில் ஏறினார்கள். பதனீர் ரொம்ப நல்லா இருந்துச்சு என்று சப்புக்கொட்டிய கண்ணாயிரம்.. நுங்கு மட்டும் என் முகத்திலே அடிச்சிட்டு.. அதுக்கு என்ன கோபமோ என்று சொல்லியபடி பஸ்சில் ஏறினார்.
பூங்கொடி பதனீர் விற்பனை செய்த இளைஞரிடம் காசு கொடுத்துவிட்டு பஸ்சில் ஏற சுடிதார் சுதா மற்றும் இளைஞர்கள் மேல் பக்கம் மட்டும் சீவிய நுங்குகளை தூக்கியபடி பஸ்சுக்கு வந்தனர். அதைப்பார்த்த கண்ணாயிரம் அட..நாமும் நுங்கு வாங்கிட்டு வந்திருக்கலாம்.. மறந்துட்டு என்று நினைத்தார்.
பயில்வான் வந்து பஸ்சில் ஏறியபடி …என்ன எல்லோரும் வந்தாச்சா…பஸ் அடுத்து கடையத்திலேதான் நிக்கும்.. பக்கத்திலே உள்ளவங்க வந்துட்டாங்களான்னு சரிபார்த்துக்குங்க… என்றபடி பஸ்முழுவதும் சுற்றிப்பார்த்தவர்…டிரைவர்..ரைட்டு என்று சொன்னார்.
பஸ் புறப்பட்டு சென்றது.
கண்ணாயிரமும் அவர் மனைவியும் கடைசிக்கு முந்திய சீட்டில் உட்கார்ந்திருந்தனர். சுடிதார் சுதா கையிலிருந்த நுங்கை கைவிரலால் குத்தி.. தண்ணீரை உறிஞ்சி குடித்தவர் திரும்பிப்பார்த்து கண்ணாயிரத்திடம் வேண்டுமா என்று கேட்டார்.
கண்ணாயிரம் நாக்கில் எச்சில் ஊறினாலும் அடக்கிக்கொண்டு..ம்..வேண்டாம்..வேண்டாம் என்று கையை அசைத்தார். ஆனால் அந்த பாவனை வேண்டும் என்பதுபோல் இருந்தது.
இதை எதேச்சையாக பார்த்த பூங்கொடி..கோபத்தில்..என்ன சுடிதார்சுதாவைப் பார்த்து கைஅசைக்கிங்க..உங்களை என்ன செய்யுறன் பாருங்க..நீங்க ஜன்னல் பக்கம்போயி இருங்க..போங்க..என்று அதட்டினார்.
கண்ணாயிரம் மெல்ல..பூங்கொடி..நீ தப்பா நினைக்காதே..நான் அப்படி கையை அசைக்கல… என்க.. பூங்கொடி.. ஆத்திரத்தில்…அப்போ நான் கண்ணாலே பாத்தது பொய்யா..என்னை ஏமாத்தப்பாக்கிறீங்களா என்று கன்னத்தில் இடிக்க..கண்ணாயிரம்..ஆ என்று கத்தினார்.
பூங்கொடியோ..இனி பொய் சொல்லமாட்டேன்னு சொல்லுங்க..பொய்சொல்ல மாட்டேன்னு சொல்லுங்க என்று சொல்ல கண்ணாயிரமும் நான் பொய்சொல்லமாட்டேன் என்றார்.
உடனே பூங்கொடி..சரி அப்போ உண்மையை சொல்லுங்க என்க கண்ணாயிரம் மெதுவாக அது வந்து சுடிதார்சுதா நுங்கு வேணுமான்னு கேட்டுச்சு..நான் வேண்டாமுன்னு கையை அசைச்சேன் என்றார்.
அதைக்கேட்ட பூங்கொடி. அப்படியா சமாச்சாரம் ..இப்போ பாரு ஆட்டத்தை என்றபடி எழுந்து சுடிதாசுதா பக்கம் சென்றார்.
நுங்கு தின்றுகொண்டிருந்த சுடிதார் சுதாவைப் பார்த்து. ஏண்டி…நீ நுங்கு தின்னு திங்காம போ..என் கணவருக்கிட்டு நுங்கு வேணுமான்னு ஏண்டி கேட்டா. .அவரை புடவை முந்தானையிலே முடிச்சிப்போட்டிலாமுன்னு நினைச்சியா என்று கத்த சுடிதார் சுதா நுங்கை கீழேவைத்துவிட்டு…ஏங்க..சும்மா ஏங்கிட்ட சண்டைபோடக்கூடாது. .அவருதான் நான் நுங்கு சாப்பிடுறதை நாக்கில் எச்சில் ஊற பாத்துக்கிட்டு இருந்தாரு ..அவரை பாக்க வச்சிசாப்பிட்டா எனக்கு வயிறுவலிக்குக்மேன்னுதான் நுங்குவேணுமேன்னு அவரிடம் கேட்டேன் என்றார்

உடனே பூங்கொடி கண்ணாயிரம் பக்கம் திரும்பி. .ஏங்க அங்கேதான் நுங்கு சாப்பிட்டியளே..பிறகு எதுக்கு நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு.. இனி வாயை திறந்தீங்க. நாக்கிலே அடிப்பேன் என்று எச்சரிக்க. .கண்ணாயிரம் மெல்ல..நீ தப்பா பேசுற பூங்கொடி. .என்றார்.
நான் என்ன தப்பா பேசுனேன்னு பூங்கொடி கேட்க..கண்ணாயிரம் அதுவா. .சுடிதார் போட்டிருக்கிற சுடிதார் சுதாவை பாத்து ..ஏண்டி. என் கணவரை புடவை முந்தானையில் முடிச்சி போடலாமுன்னு நினைச்சியா என்று கேட்கிற… அது தப்புதானே.. நியாயப்படி. துப்பாட்டாவுல முடிச்சு போடலாமுன்னுதானே கேட்டிருக்கணும் என்க… பூங்கொடி. .வழக்கமாக முந்தானையிலே முடிச்சுப்போடலாமுன்னு பாத்தியான்னுதானே கேட்பாங்க. நான் சொன்னது பெரிய தப்பா என்று கேட்க. கண்ணாயிரம் சின்ன தப்பு என்று சொன்னார். பூங்கொடி அவர் முதுகில் இரண்டுபோடு போட்டு..இது ஒண்ணும் குறைச்சல் இல்லை ..இனி பஸ்சுக்கு வெளியேத்தான் பாக்கணும் உள்ளே பாக்கக்கூடாது என்று கட்டளையிட்டார்.
கண்ணாயிரம் பஸ்சில் ஜன்னலோரத்தில் அமர்ந்து..இயற்கை காட்சிகளை ரசித்தபடி வந்தார். அப்போது..முன்சீட்டில் இருந்த ஒருவர் ஜன்னல்வழியாக கொட்டிய தண்ணீர்..காற்றில் பறந்து கண்ணாயிரம் முகத்தில்வந்து அடிக்க.. கண்ணாயிரம் எழுந்து யாருங்க..அது..யாருங்க அது.. பஸ் நின்னபிறகு தண்ணியை கொட்டவேண்டியதுதானே..ஓடுற பஸ்சிலே எப்படிங்க தண்ணியை கொட்டினீங்க.. என் முகம் என்ன தண்ணி தொட்டியா..ஆ…என்று திட்ட ஒரு இளைஞர் எழுந்து சாரிங்க..என்றார்.
கண்ணாயிரம் பதிலுக்கு..என்ன சாரி..பூரின்னுக்கிட்டு..இது தண்ணிங்கிறதாலே சரியாபோச்சு..வேறு எதுவும் இருந்தா என்ன ஆவது பார்த்து ஊத்த வேண்டாமா என்று கத்தினார்.
அதற்கு அந்த இளைஞர்..இனி சரியா பாத்து ஊத்திரேன்னு சொன்னார்.
கண்ணாயிரம்..ம்.அந்த பயம் இருக்கணும்..புரியுதா என்று முகத்தை கையால் தடவியபடி உட்கார்ந்தார்.
அவரிடம்..ஏங்க வெளியே பார்த்துட்டுவாங்கன்னு சொன்னா..கழுத்தை வெளியே நீட்டிப்பாத்துட்டு வருவீங்களா… என்னகொடுமை.. உங்களை வச்சிக்கிட்டு..கழுத்தை வெளியே நீட்டாதீங்க எதிர்த்தாப்படி கிரசர் மண்ண ஏத்திக்கிட்டு நிறைய லாரி வரும் என்று பூங்கொடி எச்சரித்தார்.
கண்ணாயிரம் சரி..சரி..என்றபடி கழுத்தை உள்ளே வைத்தபடி ரோட்டை பார்த்தபடி இருந்தார். பூங்கொடி ..அவரை கண்காணித்தபடி .இருக்க..கண்ணாயிரம் பூங்கொடி பார்க்கவில்லை என்று நினைத்து கழுத்தை மெல்ல நீட்ட பூங்கொடி..அவர் காதை திருகினார். ஆ..காது.காது..என்று கண்ணாயிரம் கதற.. பூங்கொடி அவரிடம்..ம்..நீங்க சரிப்பட்டுவரமாட்டீங்க…ஜன்னல்பக்கத்திலிருந்து எழுந்து இங்கேவாங்க…கையை காலைவச்சிக்கிட்டு சும்மா இருக்கணும் புரியுதா என்றார்.
கண்ணாயிரம்..ம்..சரி என்றபடி எழுந்து சீட்டில் இடம்மாறினார்.

நம்ம டெக்னிக் பலிச்சிட்டு ஜன்னலோர சீட்டிலிருந்து இங்கே வந்திட்டோம்..இனி சுடிதார் சுதாவை பாக்கலாமுன்னுஎன்று கண்ணாயிரம் நினைத்தபோது..துண்டை எடுத்து அவர் கண்களை கட்டினார் பூங்கொடி.ஏங்க மெட்ராஸ்ஐ வந்திருக்கு உங்களுக்கு..கண்ணை மூடியே இருங்க..இல்லாட்டி மற்றவங்களுக்கு பரவிவிடும் என்க..கண்ணாயிரம்..என்ன இது என்று திணறினார்.என்ன ..குற்றாலத்திலே இருக்கோம்..அப்படின்னா குற்றாலம்ஐன்னு தானே சொல்லணும்..ஏன் மெட்ராஸ் ஐன்னு சொல்லுறா..என்று கேள்வி கேட்க..பூங்கொடி..அமைதியா இருங்க..உங்க அறிவைபார்த்து மற்றவங்க கண்பட்டுறபோகுது…பேசாம தூங்குங்க என்றார்.
கண்ணாயிரம் ஒன்றும் புரியாமல் விழித்தார்.
-வே.தபசுகுமார், புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.