வாசுதேவநல்லூரில் 102 பவுன் நகை, கொள்ளை: கணவன், மனைவி, மகள் கைது
1 min read102 pound jewelry robbery in Vasudevanallur: husband, wife, daughter arrested
26.7.2023
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் தொழிலதிபர் வீட்டில் 102 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மகன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
சூப்பர் மார்க்கெட்
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் எஸ்.டி.நகர் புதுமனை 3ம் தெருவில் வசிப்பவர் சமுத்திரவேலு மகன் மணிவண்ணன். இவர் வாசுதேவநல்லூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி அதிகாலை மணிவண்ணன் மற்றும் குடும்பத்தினர் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் 19ம் தேதி இரவு 10 மணியளவில் வீடு திரும்பினர்.
அப்போது வீட்டு காம்பவுண்ட் கேட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டு பீரோ திறந்து கிடந்தது. அதில் அவைத்திருந்த 102 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப் பட்டிருப்பது, தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தொழிலதிபர் மணிவண்ணன், வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அசோக்குமார், இன்ஸ்பெக்டர்கள் (வாசு) சண்முக சுந்தரம்,சிவகிரி சண்முகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான பதிவுகளை ஆய்வு செய்தனர்.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில்
தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா மலைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன்
நட்ராஜன் (எ) நிக்கல்சன் (வயது 50), இவரது மனைவி லலிதா ( 45 ), மகன் நவீன்குமார் (27)
ஆகிய மூவரை கைது செய்து அவர்களிடம் இருந்து 20 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
மேலும் இதில் தொடர்புடைய மற்றொருவரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்தக் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் பஸ்ஸில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல டிக்கெட் எடுத்து விட்டு இடையில் ஏதாவது ஒரு ஊரில் இறங்கி அங்கு பூட்டப்பட்டிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவு அந்த வீடுகளின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகைகளை கொள்ளை அடிப்பது வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதை விசாரணையில் தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட மூவரும் சிவகிரி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இதில் தொடர்புடைய கொள்ளைகளை பிடிக்க
எஸ்ஐ வேல்முருகன் தலைமையிலான தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.