May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் வெளியே போக தடை / நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram is not allowed to go out / comic story / Tabasukumar

24.11.2023
அகத்தியர் அருவி அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்ததில் கண்ணாயிரம் காலில் காயம் அடைந்து பாளை ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காலையில் பேப்பரைப் பார்த்து விபத்து நடந்ததை அறிந்த அவர் தொடர்ந்து படித்த போது அவசர உந்துதல் காரணமாக பாத்ரூம் சென்றவர் அதற்கு லாக் இல்லாததால் குவா குவா குவா என்று பாட்டுப்பாடி குளிக்க.. சந்தேகம் அடைந்து
ஊழியர்கள் கதவை தள்ள உள்ளே விழித்தபடி இருந்தார் கண்ணாயிரம்.அவரிடம்.. ஏய்யா இங்கே எப்படிப்பா வந்த என்று ஊழியர்கள் கேட்க வெளியே போகணுமுன்னு கேட்டேன்.. வெளியே போகணுமா.. இந்தாக்க போங்கன்னாங்க.. அதான் இங்கே வந்தேன் கூட்டமா இருந்துச்சு. உள்ளே புகுந்துட்டேன் என்றார்.
ஊழியர்கள் அவரிடம் இது பப்ளிக் பாத்ரூம்..அதாம் கூட்டமாக இருக்கு..சரி..பப்ளிக் பாத்ரூமிலே போனது போனீங்க..குவா குவான்னு ஏன் பாடினிங்க.. வேற பாட்டு தெரியாதா என்று கேட்க.. கண்ணாயிரம்..அந்த நேரம் ஒரு கைக்குழந்தை அங்கே அழுதுகிட்டே இருந்துச்சு.. அதைக் கேட்டேன்.. அப்படியே பாத்ரூம் போனேன். அப்போ குவா குவா பாட்டுதான் நினைவுக்கு வந்துச்சு.. அதான் பாடினேன்.. கதவுக்கு லாக் இல்லையா..உள்ளே ஆள் இருக்குன்னு தெரியணுமில்லையா.. அதான் பாடினேன் என்றார்.
உடனே ஊழியர்கள் யோவ்..உள்ளேதான் பாத்ரூம் இருக்கே.. நல்லா சுத்தமா இருக்கும்.அங்கே போகவேண்டியதுதானே என்று சத்தம் போட கண்ணாயிரம்.. நான் வெளியே போகணுமுன்னு கேட்டப்ப இங்கேதான அனுப்புனாங்க.. என்க ஊழியர்கள் அவரிடம் வெளியே போனீங்களா இல்லையா என்று கேட்க..வெளியே போகல..உள்ளேதான் போனேன் என்றார் கண்ணாயிரம்.
அய்யோ..தலைசுத்துது..வெளியே போனீயான்னு கேட்டால் உள்ளே போனான்னு சொல்லுறான்.. நாம ஒண்ணு கேட்டா அவன் ஒண்ண சொல்லுறான்.. ஆஸ்பத்திரியை விட்டு ஏய்யா வெளியே போனே என்று கண்டிக்க கண்ணாயிரம் அப்பாவியாக வந்துச்சு அதான் போனேன் என்க ஊழியர்கள் அவரிடம்.. ஏய் இனி வெளியே போகக் கூடாது..என்றனர்.
கண்ணாயிரம் அதிர்ச்சி அடைந்து வந்தா என்ன செய்யுறது என்க ஊழியர்கள்.. அய்யா ஆளைவிடு… என்றபடி அங்கிருந்து சென்றனர்.
கண்ணாயிரம் என்ன..பதில் சொல்லாம போறாங்க.. வெளியே போகக்கூடாதுங்கிறாங்க.. இது டுமச் என்றபடி கால் தாங்கி தாங்கி நடந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றார்.
அங்கு கண்ணாயிரத்தை காணாமல் அனைவரும் தேட..கண்ணாயிரம் உள்ளே சென்றார்.
அங்கே நின்ற நர்ஸ் ஏங்க..டாக்டர்.. விசிட் வந்தார்.. எங்கே போனீங்க என்று கேட்க.. வெளியே போனேன் என்று கண்ணாயிரம் சொல்ல.. ஏன் வெளியே போனீங்க..இனி வெளியேப் போகக் கூடாது.. உள்ளே இருங்க என்று சொன்னார்.
கண்ணாயிரத்துக்கு ஒன்றும் புரியவில்லை. என்னம்மா உள்ளே இருக்க சொல்லுறாங்க.. அது சரிப்பட்டு வருமா என்ன.. சரி மற்றவங்ககிட்ட விவரமா கேட்போம்.. என்றபடி தனது படுக்கைக்கு சென்றார் கண்ணாயிரம்.
அவரைப்பார்த்த ஒருவர் யோவ் சீக்கிரமா.. காலை கட்டி தொங்கவிடு.. டாக்டர் மறுபடியும் வருவார் என்க கண்ணாயிரம் வேகமாக பெட்டுக்கு சென்று படுத்துக்கொண்டார். வலது காலை கட்டி தொங்க விட்டபடி அதை தாலாட்டுவது போல் அங்கும் இங்கும் அசைத்தார்.
டாக்டர் வந்ததும் கண்களை மூடிபடுத்துக்கொண்டார்.
டாக்டர் வந்து கண்ணாயிரத்தை செக் பண்ணினார். ஆல்ரைட் என்றபடி அங்கிருந்து சென்றார்.
அப்பாட..ஊசி..கீசி போடாம தப்பிச்சேன் என்றபடி கண்ணாயிரம் மெல்ல கண்களை திறந்தார்.
தனது பெட்டில் மடக்கி வைத்த பேப்பரை மெல்ல திறந்து படித்தார். ம்..எங்கே விட்டேன்.. பஸ்சு கவிழ்ந்தது..ம்.. அப்புறம்..
இருபது பேர் காயம்.. சுற்றுலா பஸ்சில் இருபது பேர் காயம் அடைந்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு.. கண்ணன், சிதம்பரம், காயத்திரி, மோகன், நந்தினி, பாலா,பரமேஸ்வரன்.. அப்புறம்.. கணேசன், காயத்திரி, பத்தொன்பது சீலன், இருபது இனியன்..
அவ்வளவுதான்..ஆ..என் பெயரைக் காணோம.. மீண்டும் நல்லா பாத்துக்குவம்..ம்..இல்லவே இல்லை.. எனக்குத்தான் தொடையிலே காயம் இருக்கே..பின்ன ஏன் பெயர் ஏன் போடலை..இது அநியாயம்..இது அக்கிரமம் என்று கண்ணாயிரம் குரல் கொடுத்தார்.
அருகில் உள்ள பெட்டில் படுத்திருந்தவர்.. என்ன சத்தம் போடுற.. என்று கேட்க..கண்ணாயிரம் உடனே.. காயமடைந்தவங்க லிஸ்டில் என் பெயரு இல்லை என்றார்.
அருகில் இருந்தவர்…கண்ணாயிரம் அவசரப்படாதே.. கீழே படி என்றார்.
அப்படியா என்றபடி கண்ணாயிரம் படிக்கத் தொடங்கினார்.ம்..அப்புறம்..நாலு பேர் உயிர் ஊசல்..ம்.. புதுவையைச் சேர்ந்தவர் கண்ணாயிரம் (வயது90) .விவசாயி. நகைச்சுவைப் பேச்சாளர். விபத்தில் இவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மயக்க நிலையில் இருக்கிறார். இவரது உயிர் ஊசலாடுகிறது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் மூன்று பேர் உயிருக்குஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்..
இவ்வாறு தொடர்ந்து படித்த கண்ணாயிரம் ஓ..என்று
அழுதார். அருகில் இருந்தவர்.. ஏம்பா என்ன ஆச்சு என்று கேட்க கண்ணாயிரம்..ம் பேப்பரில தப்பா போட்டிருக்காங்க..என்று சிணுங்க..என்னப்பா தப்பா போட்டிருக்கு என்று கேட்டார். அதற்கு கண்ணாயிரம்..எனக்கு ஆடி பிறந்தாதான்.. ஐம்பது வயசு பிறக்கு..பேப்பரில எனக்கு எனக்கு தொண்ணூறு வயசுன்னு போட்டிருக்காங்க.. எனக்கு தொடையிலே காயம். ஆனா காலிலே காயமுன்னு போட்டிருக்காங்க..என்றார்.
அது அவசரத்திலே போட்டிருப்பாங்க..விடு விடு என்றார் அருகில் இருந்தவர்.
கண்ணாயிரம் விடவில்லை. என் உயிர் ஊசலூன்னு போட்டிருக்காங்க..நான் இப்பதான் நடந்து பாத்ரூம் போயிட்டு வந்தேன்.. பூங்கோடி படிச்சா என்ன நினைக்கும்..ஆமா பூங்கொடி எங்கே என்று கண்ணாயிரம் அழ அங்கிருந்தவர்கள் அவரை அமைதிப்படுத்தினர்.
பூங்கொடி வெளியே நிப்பாங்க..வருவாங்க..டாக்டர் போனபிறகு வருவாங்க என்க.. கண்ணாயிரம் வாசலையேப் பார்த்தபடி இருந்தார்.
அப்போது போலீஸ்காரர்கள் உள்ளே நுழைந்தனர். ஒரு குழந்தையை காணோம். அதைத் தேடுறோம். அந்த குழந்தை அழுதுகிட்டு இருந்த போது நீங்க பாத்தீங்களாம். குழந்தையைப் பாத்து கையை அசைச்சீங்களாம்.. அப்புறம் தான் குழந்தையைக் காணலாம். உங்க மேலதான் சந்தேகமாம்.. குழந்தையோட தாய் புகார் பண்ணியிருக்கு..எங்கே குழந்தை என்று போலீஸ்காரர் கேட்க..கண்ணாயிரம் ஓ..என்று அழுதது அங்கு எதிரொலித்தது.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.