May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

குழந்தையால் கண்ணாயிரத்துக்கு வந்த சிக்கல் / நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

ouble brought to the eye by a child / comedy story / Tabasukumar

25.11.2023
கண்ணாயிரம் சுற்றுலா பஸ் விபத்தில் காலில் காயமடைந்து பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பாத்ரூம் சென்றவர் கதவு லாக் இல்லாததால் குவா குவா குவா பாட்டுப்பாட சந்தேகம் அடைந்து ஊழியர்கள் கதவைத் தள்ள அது பரபரப்பானது. உள்ளே வந்த கண்ணாயிரத்தை இனி வெளியே போகக் கூடாது என்று நர்சு கண்டிக்க கண்ணாயிரம் வந்தா என்னப் பண்ணுறது என்று யோசனையில் இருந்தார்.
அந்த நேரத்தில் குழந்தை ஒன்றை காணவில்லை என்று கண்ணாயிரத்திடம் போலீசார் விசாரிக்க அவர் ஓ என்று அழுதார். போலீசார் அவரிடம் குழந்தையைப் பாத்து கை அசைச்சிங்களா இல்லையா என்று போலீசார் கேட்க கண்ணாயிரம் கண்களை துடைத்துவிட்டு.. அது அந்த குழந்தை அழுதுகிட்டே இருந்துச்சா.. அதை சிரிக்க வைப்பதற்காக கையை அசைச்சேன்.. அதும் சிரிச்சிட்டு.. அப்புறம் நான் பாத்ரூம் போய் குவா குவா குவான்னு பாட்டுபாடிட்டு இருந்தேன் என்றார்.
நீங்க பாத்து கையசைச்சது ஆண் குழந்தையா..பெண் குழந்தையா என்று போலீசார் கேட்க.. கண்ணாயிரம்.. அது .. பெண் குழந்தை என்றார்.
எப்படி தெரியும் உங்களுக்கு என்று போலீசார் மடக்க.. தலையிலே பூவச்சிருந்துச்சே.. என்று கண்ணாயிரம் சொல்ல போலீசார் திணறினர்.
காணாமல் போனது ஆண் குழந்தை ஆச்சுதே.. இவரு பெண் குழந்தைன்னு சொல்லுறாரு.. ஒரே கன்ப்யூஷா இருக்கே என்று போலீசார் சிந்திக்கத் தொடங்கினர்.
குழந்தையை காணவில்லை என்று புகார் கொடுத்த பெண்ணிடம்.. என்னம்மா.. இவரு பெண் குழந்தையைப் பார்த்துதான் கை அசைச்சதா சொல்லுறாரு.. நீங்க ஆண் குழந்தையை காணவில்லை என்று சொல்லுறீங்க என்று போலீசார் அந்த பெண்ணிடம் கேட்டனர்.
அவரோ..என் ஆண் குழந்தையைத்தான் காணம். அவனை பெண் குழந்தை மாதிரி வளர்த்தோம். தலையில் பூவச்சி பொட்டுவச்சி காலிலே கொலுசு போட்டிருந்தோம். அழுதுகிட்டே இருந்தான். இவரு கையை அசைச்சவுடன் அழுகையை நிப்பாட்டிட்டான்.. அவனை அங்கே உட்காரவச்சிட்டு பக்கத்தில் உள்ள கடைக்கு போய் மிட்டாய் வாங்கிட்டு வந்து பாக்கிறேன்.. காணம்.. இவருதான் கையசைச்சு சிரிக்கவச்சார். அதனால இவர் மீதுதான் சந்தேகமாக இருக்கு என்றார்.
உடனே கண்ணாயிரம் ஏங்க அழுத குழந்தையை சிரிக்கவச்சது ஒரு தப்பா என்று கேட்டார்.
அதற்கு அந்த பெண் கோபமாக சிரிக்கவச்சது தப்பில்ல.. குழந்தையை காணலைய.. அதுதான் தப்பு என்று சொல்ல.. கண்ணாயிரம்.. இது என்னடா வம்பா போச்சு என்று விழிக்க போலீசார் அவரிடம்.. குழந்தை கடத்தல் கும்பலுக்கு நீ ஏஜெண்டா .. குழந்தையை கடத்தியது யார் என்று விசாரணை செய்ய.. கண்ணாயிரம்.. ஏங்க.. நானே..கள்ள நோட்டு கும்பல் தலைவனை தேடிக்கிட்டு இருக்கன்.. என்னைப் போயி என்று இழுத்தார்…
என்னைய்யா கதை விடுறீயா என்று போலீசார் நெருக்க கண்ணாயிரம் .. போலீசார் காதில் தான் ஒரு இன்பார்மர் என்பதை சொன்னார்.
அவர்கள் நம்பாத நிலையில் மேல்சட்டைப் பைக்குள் வைத்திருந்த போட்டோவை எடுத்துக் காட்ட.. அந்த படத்தைப் பார்த்த போலீசார்.. ம்..சாரி… ரைட் முன்னமே சொல்லியிருக்கலாமே.. நாங்க வர்ரோம் என்ற போலீசார் புகார் கொடுத்த பெண்ணிடம்..ஏம்மா.. நல்லா தேடிப்பாரு.. குழந்தையை சிரிக்கவச்சவரை குற்றம் சாட்டி எங்களை மாட்டிவிடப் பாத்தியே…. என்று அதட்டினர்.
அதற்கு அந்தப் பெண் அவரைப் பாக்குறதுக்கு கோக்கு மாக்கா இருந்தாரா அதான் சந்தேகப்பட்டிட்டேன்..சார் என்றார்.
அதற்கு போலீசார்.. நல்லா நினைச்சே போ….குழந்தையை இந்த பக்கமா தேடு.. நாங்க அந்தப் பக்கமா தேடுறோம் என்றபடி போலீசார் தீவிர சிகிச்சை பிரிவு கண்ணாடி கதவை பூட்டிவிட்டு சென்றார்கள்.
அப்பாட.. நம்மளை எந்த உருவத்திலாவது துன்பம் துரத்துதே என்றபடி கண்ணாயிரம் புலம்பியபடி சேலையை போர்த்தி படுத்துக்கொண்டார். சிறிது தூங்கினார்.
அப்போது யாரோ அவரது பெட்டை தட்டுவது போல் சத்தம் கேட்க கண்ணாயிரம் சேலையை விலக்கிவிட்டு யாரு என்று எட்டிப்பார்த்தார்.
காணாமல் போன அந்த மூன்று வயது ஆண் குழந்தை தலையில் பூவுடன் நெற்றியில் பொட்டுடன் சிரித்துக்கொண்டு நின்றது.
கண்ணாயிரம் திகைத்துப் பார்க்க..அது கண்ணாயிரத்தைப் பார்த்து கையை அசைத்தது. பழக்க தோஷத்தில் கண்ணாயிரம் கையை அசைக்க முயல அடி ஆத்தாடி.. ஏற்கனவே கையை அசைச்சதற்கே போலீசார் துருவி துருவி விசாரிச்சாங்க.. இது வேற வம்பா என்று திரும்பி படுத்துக்கொண்டார்.
அந்த குழந்தை அவர் பக்கம் திரும்பி வந்து மீண்டும் கையசைச்சது.. கண்ணாயிரத்துக்கு வியர்த்தது. அப்போது அங்கு வந்த நர்ஸ் கண்ணாயிரத்தைப் பார்த்து.. ஏங்க.. குழந்தையை யெல்லாம் ஆஸ்பத்திரி வார்டுக்கு கூட்டிட்டு வந்திரிக்கீங்க.. என்று சத்தம் போட கண்ணாயிரம் அய்யோ என் குழந்தை இல்லைங்க.. என்க நர்சு என்னங்க சொந்த குழந்தைய இல்லங்கிறீங்க என்று சொல்ல கண்ணாயிரம் ஆடிப்போனார்.
எனக்கு குழந்தையை இல்லங்க என்று சொல்ல நர்சு அவரிடம். அப்போ இது யார் குழந்தை என்று கேட்க கண்ணாயிரம்.. இது போலீசார் தேடிய காணாமல் போன குழந்தை என்றார்.
உடனே போலீசாருக்கு நர்ஸ் தகவல் சொல்ல போலீசார் விரைந்துவந்தனர். கண்ணாயிரம் பெட்டை சுற்றி சுற்றி வந்த குழந்தையை தூக்கினர். கண்ணாயிரத்தை பார்த்து போலீசார் சிரித்தனர். குழந்தை காணாமல் போன ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிச்சி கொடுத்திட்டியளே.. பலே கில்லாடி நீங்க என்று கண்ணாயிரத்தின் கையை குலுக்கிப் பாராட்டினர்.
குழந்தையின் தாயும் கண்ணாயிரத்தைப் பார்த்து.. நான் சொன்னதை ஒண்ணும் தப்பா நினைக்காதீங்க.. நீங்க பாக்க.. பயங்கரமாத்தான் இருக்கீங்க என்க.. கண்ணாயிரம் தன்னை பாராட்டுவதாக நினைத்துக்கொண்டு சிரித்தார்.
தாயின் தோளில் படுத்துக்கொண்ட குழந்தை கையசைக்க.. கண்ணாயிரம் திரும்பிக்கொண்டார். இதைப்பார்த்து குழந்தை அழ அதன் தாய் அதை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்.
கண்ணாயிரம்..அப்பா..என்ன பிரச்சினை..என்ன பிரச்சினை.. நாம கையை அசைச்ச குற்றத்துக்காக..நாம பாத்ரூம் போயிட்டு வந்தபோது இந்த குழந்தையும் நம்ம பின்னால வந்துட்டுப் போல.. இங்கே எங்கேயோ பெட்டுக்கு கீழே பதுங்கியிருந்து வேலையைக் காட்டிட்டு..அம்மாடி.. என்றபடி நாளிதழை மீண்டும் கையில் எடுத்தார்.(தொடரும்)
-தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.