கவர்னருடன் விஜய் சந்திப்பு; அண்ணாமலை வரவேற்பு
1 min read
Vijay meets Governor; Annamalai welcomes him
30.12.2024
‘தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, கவர்னர் ரவியை விஜய் சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம்’ என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தார். இது குறித்து அண்ணாமலை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலை மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், பா.ஜ.க, தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும், தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, கவர்னரை சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம். வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் தி.மு.க., அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.