14.7.2025 தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரத்தில் ஆதிநாராயணன்-சந்திரலீலா மாலைநேர இலவச படிப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது. தோரணமலை முருகன்கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தன்னுடைய பூர்வீக வீட்டை தந்தை-தாய் பெயரில் இந்த இலவச படிப்பகத்தை அமைத்துள்ளார். இங்கு நூறுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் உள்பட பல்வேறு பாடங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியையும் நியமிக்கப்பட்டு உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு படிக்க நூல் நிலையமும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இணையதளம் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர இளைஞர்கள் விளையாட தனது இடத்தில் விளையாட்டு மைதானமும் அமைத்து கொடுத்துள்ளார். இன்று மாலைநேர படிப்பகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாப்பட்டது. காமராஜர் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மாலை அணிவித்து வணங்கினார்கள். மேலும் காமராஜரின் சாதனைகளை மாணவிகள் எடுத்துக்கூறினார்கள்.
இதில் மாணவ-மாணவிகள் கீழ்கண்ட உறுதிமொழியை எடுத்தனர். கல்விக்கண் திறந்த காமராஜரை போற்றுவோம். கிராமங்கள் தோறும் பள்ளிச்சாலைகள் திறந்த பெருந்தலைவர் புகழை பாடுவோம். மதிய உணவு திட்டம் மூலம் பாமரனையும் படிக்க வைத்த மாமேதையை வணங்குவோம். அணைகள் பல கட்டி ஆலைகள் பல அமைத்து நாட்டை வளமாக்கிய நல்லவரை நினைவில் கொள்ளுவோம். நாட்டு மக்களையே தன்பிள்ளையாய் நினைத்து வாழவைத்த நல்லவரை என்றென்றும் மறவாமல் இருப்போம். நம்மைப் போன்ற கிராம மக்கள் படித்து முன்னேறுவதே காமராஜருக்கு செலுத்தும் நன்றிகடன் இவ்வாறு அவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
இதற்கான எற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.