கல்வித் துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?- அண்ணாமலை கேள்வி
1 min read
Promoting privatization in the education sector? – Annamalai Question
23.8.2025
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாலைப்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் கட்டிடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, போதிய வசதிகள் இன்றி இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்
இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர், இன்று அதிகாலையில் இடிந்து விழுந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, அதிகாலை என்பதால், குழந்தைகள் யாரும் இல்லாமல், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், பள்ளிகளுக்கு முறையான கட்டிடங்கள் இல்லை. திமுக ஆட்சியில் கட்டப்படும் கட்டிடங்களும், முதல்-அமைச்சர் திறந்து வைத்த அடுத்த நாளே இடிந்து விழுகின்றன. அடிப்படைக் கல்வி வழங்கும் அங்கன்வாடி மையங்கள், வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. ஒட்டுமொத்தமாக, கல்வித் துறையில் தனியார்மயத்தை ஊக்குவித்து, தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழக சமூக நலத்துறையும், பள்ளிக் கல்வித்துறையும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
உடனடியாக, தமிழகம் முழுவதும், தனியார் கட்டிடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கி, அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும். திமுகவினர் சம்பாதிப்பதற்காக, ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பாதுகாப்பைப் புறக்கணிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.