சங்கரன்கோவில் அருகே அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து 42 பேர் காயம்
1 min read
42 injured as government bus hits electric pole near Sankarankovil
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து வாசுதேவநல்லூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கண்டிகைப்பேரி அருகே மின்கம்பத்தில் மோதிய விபத்தில் 42 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த
அரசு பேருந்தை செந்தட்டியாபுரம் புதூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 30) ஓட்டினார். டி. இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சிவபெருமான் நடத்துனராக பணியாற்றினார். இந்த அரசு பேருந்தில் சங்கரன்கோவில், கண்டிகைப்பேரி, பாறைப்பட்டி, பெரியூர், நெற்கட்டும் செவல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயணம் செய்தனர். அரசு பஸ் கண்டிகைபேரி அருகே சென்றுகொண்டிருந்த போது பேருந்து ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள உயர் மின் கம்பத்தில் மோதியது.
இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 40 பேர்
மற்றும் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 42 பேர் காயமடைந்தனர்.காயம் அடைந்தவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கரன்கோவில் தாலுகா போலீசார் கொடுத்த தகவலின் பேரில் மின்வாரியதுறையினர் விரைந்து வந்து சேதமான மின்கம்ப வயர்களை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.. நேங முகூர்த்த நாள் என்பதால் பேருந்தில் பெண் பயணிகள் அதிகமாக இருந்ததாகவும், இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் காயம் அடைந்தவர்களில் மாரியம்மாள், கோமதி, மற்றொரு மாரியம்மாள் ஆகிய 3 பேர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 11 பேர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 28 நபர்களும் லேசான காயம் அடைந்த நிலையில் முதலுதவி சிகிச்சை பெற்று தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.
இது குறித்து தகவலறிந்த அறிந்த தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஈ.ராஜா எம்எல்ஏ, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார்,
அதிமுக மாவட்ட செயலாளர் செ. கிருஷ்ண முரளி குட்டியப்பா அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் திலீபன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரன் மேல நீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் குருக்கள் பட்டி செல்வராஜ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
இந்த விபத்து குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.