June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் பிரபல ரவுடி போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம்

1 min read

Famous rowdy escapes from police custody

5.12.2025
தென்காசி மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி பாலமுருகனை தமிழக போலீசார் கேரள மாநிலம் திருச்சூர் சிறையில் அடைக்க கொண்டு சென்ற போது ரவுடி பாலமுருகன் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கேரள மாநில போலீசார் பாலமுருகன் பாதுகாப்புக்கு சென்ற பந்தல்குடி எஸ்.ஐ மற்றும் 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சார்ந்த பாலமுருகன் (வயது45) பிரபல ரவுடியான இவர் மீது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கொலை, கொள்ளை, உட்பட 53 கிரிமினல் வழக்குகள் உள்ளது. மேலும் தனக்கு எதிராக சாட்சி சொன்ன ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கும் உள்ளது.

இந்நிலையில் தமிழக போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பிக்க பாலமுருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவிற்கு தப்பி ஓடினார்.
இதுகுறித்து தமிழக போலீசார் கேரள மாநில காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இடுக்கி மாவட்டம் மறையூரில் நடந்த ஒரு திருட்டு தொடர்பாக கேரள போலீசார் பாலமுருகனை கைது செய்து திருச்சூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி காவல் நிலையத்தில் உள்ள ஒரு கிரிமினல் வழக்கு தொடர்பாக பாலமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக பந்தல்குடி உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான 3 போலீசார் திருச்சூர் சிறையில் இருந்து தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி பகுதிக்கு பாலமுருகனை அழைத்துச் சென்றனர். அதன் பிறகு நேற்று முன்தினம் பாலமுருகனை பந்தல்குடி போலீசார் மீண்டும் திருச்சூருக்கு கொண்டு சென்றனர். அப்போது பந்தல்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் 3 போலீசார் பாதுகாப்புக்காக சென்றிருந்தனர்.

அவர்கள் திருச்சூர் சிறைக்கு அருகே வந்தபோது பாலமுருகன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது பாதுகாப்புக்கு வந்த போலீசார் அவரை சிறுநீர் கழிக்க அனுமதித்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாலமுருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .இதனால் அதிர்ச்சி அடைந்த உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் போலீசார் தமிழக மற்றும் கேரள மாநில போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கேரள போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது கேரள மாநிலம் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடி பாலமுருகனை தமிழ்நாடு விருதுநகர் மாவட்ட போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். மீண்டும் அவரை திருச்சூர் சிறையில் அடைப்பதற்காக விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் 3 போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்துள்ளனர்.

திருச்சூர் சிறைச்சாலைக்கு அருகே வந்தபோது பாலமுருகன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு போலீசார் அனுமதித்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் தமிழக போலீசார் கூறுகின்றனர். சிறைச்சாலைக்கு அருகில் வந்துவிட்ட நிலையில் அவரை சிறுநீர் கழிக்க அனுமதித்திருக்கக் கூடாது. சிறைச்சாலைக்கு உள்ளே உள்ள கழிவறையில் சிறுநீர் கழித்துக் கொள்ளலாம் என்று கூறி அவரை சிறைச்சாலைக்குள் அழைத்துச் சென்று இருக்க வேண்டும்.

மேலும் பாலமுருகன் காலை 9:30 மணிக்கு தப்பிச் சென்ற தகவலை ஒரு மணி நேரம் கழித்து 10:30 மணிக்கு பின்னர் தான் திருச்சூர் போலீசாருக்கு தமிழக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அவரை உடனே கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், ரவுடி பாலமுருகனை அழைத்துச் சென்ற தமிழக போலீசார் குடிபோதையில் இருந்ததாக சந்தேகம் இருப்பதாகவும், திருச்சூர் போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே இது தொடர்பாக பந்தல்குடி உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் 3 தமிழக போலீசார் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *