கோவா தீ விபத்தில் 25 பேர் பலி-பிரதமர் மோடி இரங்கல்
1 min read
25 killed in Goa fire accident- PM Modi condoles
கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜி அருகே அர்புரா கிராமம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள கடற்கரை பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு உள்ள பிரபல கேளிக்கை விடுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். கேளிக்கை விடுதியில் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவா கேளிக்கை விடுதி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
கோவாவின் அர்புராவில் ஏற்பட்ட தீ விபத்தால் மிகுந்த வேதனையடைந்தேன். தீ விபத்தில் உறவுகளை இழந்தவர்களுடன் நான் துணை நிற்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். நிலைமை குறித்து கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் உடன் பேசியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு தேவையான உதவி செய்து வருகிறது.
அதேபோல், கோவா கேளிக்கை விடுதி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
==
மனைவியுடன் தகராறு:
2 குழந்தைகளை கொன்று வாலிபர் தற்கொலை
பிஜ்னோர்,டிச.8-
உத்தரப் பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மகன், மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முபாரக்பூர் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராம் (28 வயது). இவருக்கு தீபன்ஷு (5 வயது) என்ற மகனும், ஹர்ஷிகா (3 வயது) என்ற மகளும் இருந்தனர். பாபுராமுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பாபுராம் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள காட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வைத்து குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்துள்ளார். பின்னர் தானும் விஷம் குடித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து அவர்கள் மூவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் மூவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாபுராம் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தைகளின் உடல்களை அவர்களது உறவினர்கள் கொண்டு சென்றனர்.