August 25, 2026

Seithi Saral

Tamil News Channel

டி.டி.வி.தினகரனுடன் பியுஷ்கோயல் சந்திப்பு- “திமுகவை வீழ்த்த ஒரே குடும்பமாக செயல்பட உறுதி”

1 min read

Piyush Goyal meets TTV Dinakaran – “Determined to work as one family to defeat DMK”

21/1/2026
திமுகவை வீழ்த்த நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து செயல்படுவோம் என தமிழக பா.ஜ.,தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் டிடிவி தினகரன் பியூஷ் கோயலை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தினார். இது குறித்து நிருபர்களிடம் பியுஷ் கோயல் கூறியதாவது:-
தேஜ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அமமுக தேஜ கூட்டணியில் இணைந்தது எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப சந்தோஷம். தேஜ கூட்டணியில் உள்ள பழனிசாமி, அன்புமணி மற்றும் வாசனுடன் தினகரனும் இணைந்துள்ளார்.

2004ல் ராஜ்யசபா எம்பியாக இருந்த காலம் முதல் டிடிவி தினகரன் சிறப்பாக செயல்பட்டு வருவதை கவனித்து வருகிறேன். திமுகவை வீழ்த்த நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து செயல்படுவோம். திமுக கூட்டணி நாட்டின் நலனுக்கு எதிரானது. தமிழக மக்களின் கலாசாரத்திற்கு எதிராக திமுக செயல்படுகிறது.

பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவான நல்லாட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி வழங்கும். ஊழல் நிறைந்த திமுக அரசை தேசிய ஜனநாயக கூட்டணி தோற்கடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்தது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழங்கிய நல்லாட்சியை தேஜ கூட்டணி வழங்கும். வணக்கம், நன்றி.
இவ்வாறு பியுஷ் கோயல் கூறினார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீண்டும் தேஜ கூட்டணியில் நான் இணைந்தது மகிழ்ச்சி. இந்த நேரத்தில் நான் சொல்ல விரும்புவது பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம் தமிழகத்தில் தேஜ கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்ற முயற்சிக்கு உறுதுணையாக இருக்க எங்களது பங்காளி சண்டையை எல்லாம் ஓரமாய் வைத்து விட்டு, விட்டு கொடுப்பவர்கள் என்றைக்கு கெட்டு போவதில்லை என்கிற சான்றோர் மொழிக்கு ஏற்ப, எல்லாவற்றையும் மறந்து விட்டு, ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பதற்காக, 2021ல் அமித்ஷா எடுத்த முயற்சிகள் முடியாமல் போனதால், இன்றைக்கு தமிழகத்தை வாட்டி வதைக்கின்ற திராவிட மாடல் என்ற பெயரில் நடக்கிற ஆட்சியை, கஞ்சா மாடல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக மீண்டும் தேஜ கூட்டணி இணைந்துள்ளோம்.
இந்த தேர்தலில் அமமுகவின் ஒவ்வொரு நிர்வாகிகளும் தேஜ கூட்டணி வெற்றிக்காக தமிழகம் முழுவதும் ஓயாமல் உழைப்பார்கள். 2021ல் தவறிய ஜெயலலிதா ஆட்சியை இந்த முறை உறுதியாக தமிழகத்தில் உருவாக்கி காட்டுவோம் என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்திற்கு தேஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று உங்களுக்கு தெரியும். எங்களது முதல்வர் வேட்பாளர் யார் என்று உங்களுக்கு தெரிந்தும் என்னிடம் கேட்கிறீர்கள். நாங்கள் தமிழகத்தின் நலனிலும், அமமும நலனிலும் அக்கறை கொண்டு எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரவேண்டும் என்பதற்காக, தேஜ கூட்டணிக்கு வந்து இருக்கிறோம். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *