20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை; ஏப்ரல் முதல் கட்டாயம்
1 min read
Sale of petrol mixed with 20 percent ethanol; mandatory from April
26.2.2026
நாடு முழுவதும், ஏப்ரல் முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் இ-20 பெட்ரோல் வழங்கப்படும் நிலையில், அதை ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏப்ரல் முதல், நாடு முழுவதும் விற்கப்படும் சாதாரண பெட்ரோல் 20% எத்தனால் கலப்புடனும், 95 ஆக்டேன் தரத்துடனும் இருக்க வேண்டும். தற்போது சாதாரண பெட்ரோல் 91 ஆக்டேன் அளவில் உள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவே இந்த முடிவு. 2023 முதல் தயாரிக்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் ‘இ20’ எரிபொருளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. எத்தனால் உற்பத்திக்காக கரும்பு மற்றும் சோளம் பயன்படுத்துவதால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.