கடையம்-தென்காசி பேருந்தை மீண்டும் பழைய வழித்தடத் தில் இயக்க நடவடிக்கை
1 min read
Steps to resume the Kadayam-Thenkasi bus on the old route
4.3.2026
தென்காசி மாவட்டம் கடையம் – தென்காசி அரசுப்
பேருந்தை மீண்டும் பழைய வழித்தடத்தில் இயக்கிட உரிய நடவடிக்கை மேற்கொண்ட முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கடையத்தில் இருந்து தென்காசிக்கு வழித்தடம் எண் 27இ நகர பேருந்து செக்கடியூர், அருணாசலம்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, கட்டேறிப்பட்டி, புங்கம்பட்டி, மயிலப்பபுரம், அழகம்பெருமானூர், மாடியனூர், ஆவுடையானூர், கொண்டலூர், திப்பணம்பட்டி, மலையராமபுரம், பாவூர்சத்திரம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்தானது கடந்த சில நாட்களாக புங்கம்பட்டி ஊருக்கு வடபுறம் நடைபெற்று வரும் பாலப்பணி காரணமாக அவ்வழியாக இயக்கப்படாமல், மாற்றுப்பாதையான புலவனூர், மேட்டூர், வெய்க்காலிப்பட்டி, அரியப்பபுரம் வழியாக இயக்கப்பட்டது.
இதனால் செக்கடியூர், அருணாசலம் பட்டி, சேர்வைக்காரன்பட்டி, கட்டேறிப்பட்டி, கீழசேர்வைக்காரன் பட்டி பள்ளி மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்வதற்கும், பொதுமக்கள் பேருந்து வசதியின்றியும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் அட்மா சேர்மன் குணசீலன் மற்றும் சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதனிடம் இது தொடர்பாக எடுத்துக்கூறி மீண்டும் பழைய வழித்தடத்தில் புங்கம்பட்டி வழியாக பேருந்து இயக்கிட ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் சம்பந்தப்பட்ட தென்காசி அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளரிடம் இது பற்றி பேசினார்.
அதைத்தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்திருந்து ஆய்வு செய்து மீண்டும் அவ்வழியாக பேருந்தினை இயக்கிட நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி மீண்டும் நேற்று முதல் அப்பேருந்து பழைய வழித்தடத்திலேயே இயக்கப்பட்டு வருகிறது.
மீண்டும் பேருந்து இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு ஏற்பாடு செய்து தந்த முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவபத்மநாதனுக்கு , அட்மா சேர்மன் குணசீலன், ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி துரைப்பாண்டியன், விடியல் ஆர்த்தி, முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.