கோவிந்தப்பேரி அருகே பகுதி நேர ரேசன் கடை
1 min read
Part-time ration shop near Govindaperi
5.3.2026
கடையம் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தப்பேரி ஊராட்சி ராஜாங்கபுரத்திற்கும், மந்தியூர் ஊராட்சி வாகைகுளத்திற்கு தனித்தனியாக பகுதி நேர ரேசன் கடை அமைத்திட வேண்டுமென முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், கடையம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.ஜெயக்குமார் ஆகியோர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கை விடு;த்திருந்தனர்.
அதன்படி வாகைகுளத்திற்கு கடந்த ஆண்டு புதிய பகுதி நேர கடை அறிவிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நிலையில், ராஜாங்கபுரத்திற்கு பகுதி நேர கடை வழங்குவதில் சிக்கல் இருந்து வந்தது. அதாவது ராஜாங்கபுரமானது தாய் கடையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் இல்லை என்றும், மேலும் தனியாக பகுதி நேர கடை பிரிக்கப்பட்டால் தாய் கடையில் 500 கார்டு இருக்க வேண்டும் என்கிற விதி உள்ளதால் அந்த விதியை மீறி புதிதாக பகுதி நேர கடை ராஜாங்கபுரத்திற்கு அறிவிக்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மீண்டும் அமைச்சரை சந்தித்து, ராஜாங்கபுரத்தில் இருந்து கோவிந்தப்பேரி செல்வதற்கு வயல் வழியாக செல்ல வேண்டி உள்ளது. போதுமான போக்குவரத்து வசதி இல்லை. மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள கிராமம். இதனால் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை எடுத்துச் சொல்லி மீண்டும் மனு வழங்கினார்.
அதன் அடிப்படையில் தற்போது ராஜாங்கபுரத்திற்கு பகுதி நேர ரேசன் கடை அமைக்கவும், வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கவும் சிறப்பு அரசாணை வழங்கப்பட்டது. ராஜாங்கபுரம் பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு அரசாணை வழங்கி உத்தரவு வழங்கிய முதல்வர் ஸ்டாலின் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.