June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

போர் சூழலை வைத்து மக்களிடம் காங்கிரஸ் பீதியை ஏற்படுத்துகிறது- அசாமில் பிரதமர் மோடி பேச்சு

1 min read

Congress is creating panic among people by creating a war atmosphere – PM Modi’s speech in Assam

14/3/2026
பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலம் சில்ச்சரில் நடந்த விழாவில் 4 வழி அதிவேக பசுமை வழித்தடமான ஷில்லாங்-சில்சார் சாலை அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது:-

ரூ.22,860 கோடி மதிப்பில் 166 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம் மேகாலயா-அசாம் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து இணைப்பை வெகுவாக மேம்படுத்தும்.

கவுகாத்தி-சில்சார் நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை 8.5 மணி நேரத்தில் இருந்து சுமார் 5 மணி நேரமாகக் குறைக்கும்.

வளர்ச்சி திட்டங்கள் ஒவ்வொன்றும் பராக் பள்ளத்தாக்கை வடகிழக்குப் பிராந்தியத்திற்கான ஒரு முக்கிய தளவாட மற்றும் வர்த்தக மையமாக மாற்ற உள்ளன. இதன்மூலம் இப்பிராந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலை வாய்ப்புக்கான எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகும்.

நாடு சுதந்திரம் அடைந்த போது, பராக் பள்ளத்தாக்கிற்கும் கடலுக்கும் இடையேயான மிக முக்கிய இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்படும் வகையில் எல்லைகளை வரையறுக்க காங்கிரஸ் கட்சி அனுமதித்தது. இதனால் ஒரு காலத்தில் வர்த்தகத்தின் மையமாகத் திகழ்ந்த பராக் பள்ளத்தாக்கின் வலிமை பறிக்கப்பட்டது.

இந்த நிலையை மாற்றி அமைக்கவே பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் அரசு செயல்பட்டு வருகிறது.

சுதந்திரத்திற்கு பின்னரும் பல தசாப்தங்களாக காங்கிரஸ் அரசுகளே ஆட்சியில் இருந்தன. ஆனால், பராக் பள்ளத்தாக்கின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. காங்கிரஸ் கட்சி எங்கு சிந்திப்பதை நிறுத்துகிறதோ, அங்கிருந்து நாங்கள் எங்கள் பணியைத் தொடங்குகிறோம்.

வளர்ச்சிப் பாதையில் பின்தங்கியுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே பா.ஜ.க.வின் தாரக மந்திரமாகும். அசாமின் இளைஞர்களை காங்கிரஸ் வன்முறை மற்றும் பயங்கரவாதப் பாதையில் திசை திருப்பியது. ஆனால் இன்று இம்மாநிலம் வாய்ப்புகளின் கடலாகத் திகழ்கிறது.

காங்கிரஸ் தொடர்ந்து தேர்தல் தோல்வியைச் சந்தித்து வருகிறது. விரைவில் அக்கட்சி தோல்விகளில் சதம் அடிக்கும் நிலையை எட்டவுள்ளது.

உலகம் முழுவதும் போர் சூழல் நிலவி வருகிறது. இதனால் நாட்டு மக்கள் மிக குறைந்த இன்னல்களை மட்டுமே எதிர்கொள்வதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதில் காங்கிரஸ் ஒரு பொறுப்புள்ள அரசியல் அமைப்பாகத் தனது கடமையை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அக்கட்சி நாட்டிற்குள் பீதியை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. நாடு பல்வேறு சிக்கல்களில் சிக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணி அதன் மூலம் என் மீது அவதூறுகளை பரப்பலாம் என்று நினைக்கிறது. இந்தியாவின் துரித வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத உலகளாவிய சக்திகளின் கைகளில், காங்கிரஸ் தற்போது வெறும் கைப்பாவையாகவே மாறி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *