June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

ரூ.1 கோடி பரிசுடன் தமிழ் இலக்கிய விருது: எழுத்தாளர் ஜெயமோகன் அறிவிப்பு

1 min read

Tamil literary award with prize of Rs 1 crore: Writer Jayamohan announces

17.3.2026
‘இனி ஆண்டுதோறும், ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன், ‘உலக இலக்கியத்திற்கான வாழும் தமிழ் விருது’ வழங்கப்படும்’ என, எழுத்தாளர் ஜெயமோகன் அறிவித்துள்ளார்.
இந்திய அளவில் வழங்கப்படும், மிக உயரிய இலக்கிய விருதான, ஞான பீட விருது, இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தாலும், மற்றொரு பக்கம் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வைரமுத்துவுக்கு ஞான பீட விருது வழங்கப்பட்டது, தமிழ் நவீன இலக்கியத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தமைக்கு சமம். வைரமுத்துவுக்கு கிடைத்த விருது, நவீன தமிழ் இலக்கியத்தை, 30 ஆண்டுகள் பின்னே தள்ளும்.
வைரமுத்து போன்ற சிறுமையாளர்கள் வருவர், போவர். சூழ்ச்சிகள் வழியாக அற்ப விருதுகளை ஈட்டுவர். இலக்கியம் என்றும் வெல்லும். வைரமுத்துவுக்கான எதிர்ப்பு என்பது, ஓர் எழுத்தாளர் விருது பெறுவதற்கு எதிரான கண்டனம் அல்ல. ஓர் எழுத்தாளர் சார்ந்த விஷயமும் அல்ல. நவீன தமிழ் இலக்கியம் தொடர்புடையது.
அகிலனுக்கு கிடைத்த, ஞான பீட விருது, தமிழை சிறுமை செய்தது. 50 ஆண்டுகள் தமிழ் இலக்கியத்தை, எந்த இலக்கிய மேடையிலும், உரிய இடம் இல்லாததாக ஆக்கியது. அகிலன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்றால், மற்றவர்களின் எழுத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை என, இந்தியா முடிவு செய்தது.
‘தமிழில் நவீன இலக்கியம் உண்டா’ என, என்னிடம் மற்ற மொழிக்காரர்கள் பலர் கேட்டிருக்கின்றனர். இவர்கள் யார் நம்மை மதிக்க; இவர்களிடம் ஏன் சென்று நிற்கிறோம்; இத்தனை சூழ்ச்சிகள் செய்து, இவர்களிடம் ஏன் ஏற்பு பெற முண்டியடிக்கிறோம் என்பது நினைக்கவே கூசுகிறது. எனவே, இந்திய வரலாற்றின் மிகப்பெரிய இலக்கிய விருதை, நாங்கள் அறிவிக்கிறோம்.
உலக இலக்கியத்திலும், இந்திய இலக்கியத்திலும், சாதனை படைப்புக்கான, ‘உலக இலக்கியத்திற்கான வாழும் தமிழ் விருது’ என்ற விருது, ஆண்டுதோறும் வழங்கப்படும். விருது தொகை ஒரு கோடி ரூபாய். இந்த விருது, இந்திய தலைநகர் டில்லியிலும், அமெரிக்காவின் நியூயார்க் மாநகரிலும், ஆண்டுதோறும் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *